இந்திய நாடாளுமன்றத்திற்கான ஏழு கட்டத் தேர்தலில் தற்போது நான்கு கட்டத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இது வரை 381 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று முழக்கமிட்ட பிரதமர் மோடி இப்போது 200 தொகுதிகளில் கூட வெற்றி பெற இயலாது என்று கிடைத்துள்ள தகவல்களால் மிகவும் பதட்டமடைந்துள்ளார். அதன் காரணமாக அவர் முன்னுக்கு பின் முரணாக பரப்புரைக் கூட்டங்களில் பேசி வருவதை காண முடிகிறது.

modi 274அம்பானி மற்றும் அதானி என்ற இந்தியாவின் இரு பெரும் பணக்காரர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டாளியாக இருந்த மோடி, இன்று அவர்கள் காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்திக்கு கன்டெய்னர் கன்டெய்னராக பணம் கொடுத்துள்ளார்கள் என்று பேசியிருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. தான் போகும் வெளிநாட்டு அரசு முறை பயணங்களுக்கு அதானியையும் உடன் அழைத்துச் சென்று ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கம், இலங்கையில் முதலீடு என பல்வேறு தொழில் வாய்ப்புகளை அதானிக்குப் பெற்று தந்த மோடி இப்படி பேசியிருப்பதை மக்கள் நம்பத் தயாராக இல்லை. அப்படியெனில் அம்பானி - அதானி வீடுகளுக்கு அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையை அனுப்பி நடவடிக்கை எடுக்கத் தயாரா என்ற இராகுல் காந்தியின் கேள்விக்கு மோடியிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

கடந்த ஏப்ரல் மாதம் ராஜஸ்தானில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி, “நாட்டின் சொத்தில் இசுலாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் பறிபோகப் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இசுலாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு அந்த தங்கத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரசின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு இசுலாமியர்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் தாலியைக் கூட விட்டுவைக்காது" என சர்ச்சையாகப் பேசினார். ஆனால் தற்போது தான் அவ்வாறு பேசவில்லை என்று மோடி கூறியுள்ளார்.

இந்தியாவில் கிராமப்புறங்களில் வறுமைக் கோடு என்பது மாதத்திற்கு ரூ.1,059.42/- ஆகும். இந்தியாவில் நகர்ப்புறங்களில் வறுமைக் கோடு என்பது மாதத்திற்கு ரூ.1,286 ஆகும். ஆனால் வாரணாசி தொகுதியில் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனக்கு ரூ.3.02 கோடி மதிப்புள்ள சொத்து உள்ளதாக கூறியுள்ள மோடி தன்னை "ஏழைத்தாயின் மகன்" என்று சொல்லிக் கொள்கிறார். இனியும் இவரது நாடகத்தை இந்திய மக்கள் நம்பத் தயாராக இல்லை.

இதற்கிடையே உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகூர், டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி. ஷா மற்றும் இந்து என். ராம் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடியையும், ராகுல் காந்தியையும் வணிகம் மற்றும் கட்சி சார்பற்ற மேடையில் பொது விவாதத்தில் பங்கேற்குமாறு கடிதம் மூலமாக அழைப்பு விடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து அந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட காங்கிரஸ் கட்சி, பிரதமர் மோடியுடன் நேரடி விவாதம் நடத்த இராகுல் காந்தி தயாராக இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடியோ இந்த அழைப்பிற்கு எந்த பதிலையும் அளிக்கவில்லை. பத்தாண்டுகளாக பத்திரிக்கையாளர்களைக் கூட சந்திக்காத மோடி இந்த அழைப்பை ஏற்றுக் கொள்வார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. இதை சமாளிப்பதற்காக பா.ஜ.க இளைஞர் அணியின் தேசிய துணைத் தலைவர் ஸ்ரீ அபினவ் பிரகாஷ் இராகுலுடன் விவாதம் நடத்த முன்வந்துள்ளதாக பா.ஜ.க இளைஞர் அணி அறிவித்துள்ளது. பத்தாண்டு கால ஆட்சி குறித்து விவாதிக்க பிரதமரோ, அமைச்சர்களோ தயாராக இல்லை என்பதன் மூலம் அவர்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டார்கள் என்பதை உணர முடிகிறது.

விரக்தியின் விளிம்பில் உள்ள மோடியும், பா.ஜ.கவும் ஆட்சியை தக்க வைக்க இனி என்ன செய்தாலும் மக்கள் மத்தியில் எடுபடாது. இன்னும் மூன்று வார காலத்தில் இந்திய ஒன்றியம் முழுமைக்கும் விடியல் வரப் போகிறது என்ற நம்பிக்கை எல்லோரின் மனதிலும் ஏற்பட்டுள்ளது.

வழக்கறிஞர் இராம.வைரமுத்து

Pin It