கர்நாடக இசைக் கலைஞரான டி.எம். கிருஷ்ணாவின் இசைப் புலமையும் சீர்திருத்தவாத செயல்பாடுகளும் அவருக்கு போற்றுதல்களையும் கண்டனங்களையும் ஈட்டியிருந்தன. இந்த ஆண்டின் சங்கீத கலாநிதி விருது அவருக்கு வழங்கப்பட்டது இசை உலகில் ஒரு கலவரத்தையே ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக இசை உலகம் என்ற அடர்ந்த காட்டில் இரண்டு கற்பனைப் பாதைகள் பிரிந்து செல்கின்றன என்று வைத்துக் கொள்வோம். டி.எம். கிருஷ்ணா மற்றவர்கள் கால்படாத பாதையை தேர்ந்தெடுத்தார். அதுதான் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது. தங்களது திறமையினால் சாதனைகள் புரிந்தவர்களுக்கு விருது வழங்குவது தொடர்பான சச்சரவுகளுக்கு இந்தியாவில் பஞ்சமில்லைதான். ஆனால், சென்னையில் உள்ள மியூசிக் அகாடமி தனது உயர்ந்த விருதான சங்கீத கலாநிதி விருதை டி.எம். கிருஷ்ணாவுக்கு இந்த ஆண்டு வழங்கவிருப்பதாக அறிவித்ததும் கிளம்பிய புழுதிப் புயல் இதுவரை பார்க்காத ஒன்று.tm krishna 640மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசை உலகில் ‘ஆக உயர்ந்த மகுடமாக’ எப்போதுமே கருதப்பட்டு வருகிறது. மியூசிக் அகாடமியின் வயது 100 ஆண்டுகளை எட்டுகிறது. சென்னையின் புகழ் பெற்ற மார்கழி இசை விழாவின் போது இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது பெறும் இசைக் கலைஞர்கள் பயபக்தியுடன் அதனைப் பெற்றுக் கொள்கின்றனர்.

டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிராகக் கிளம்பியுள்ள இந்த புழுதிப் புயலைப் புரிந்து கொள்வதற்கு, மியூசிக் அகாடமியின் பண்பாட்டு, வரலாற்றுப் பின்புலத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மியூசிக் அகாடமி ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கருத்து 1927ஆம் ஆண்டு சென்னையில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் தோன்றியது. இந்நிறுவனம் கர்நாடக இசைக்கு வெளிச்சம் கொடுக்கும் என்று கருதப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு மியூசிக் அகாடமி நிறுவப்பட்டது. 1929ஆம் ஆண்டு தொடங்கி மியூசிக் அகாடமி ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இசை நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கியது. அது சென்னையின் டிசம்பர் இசைத் திருவிழாவாக பரிணமித்தது. இந்த இசைத் திருவிழா நாட்களில் சென்னையில் உள்ள பல்வேறு இசை அரங்குகளில் இசை ரசனையில் தேர்ந்தவர்களும் சாதாரண மனிதர்களும் கேட்கும் வகையில் நூற்றுக் கணக்கான இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவை கச்சேரிகள் என்று அழைக்கப்படுகின்றன.

டி.எம். கிருஷ்ணா ஒரு குழந்தை மேதையாக இருந்தார். அவர் தனது 12ஆம் வயதில் முதல் கர்நாடக இசை நிகழ்ச்சியை வழங்கினார். அது மியூசிக் அகாடமியில் பிற்பகல் நேரத்தில் நிகழ்ந்தது. அதற்குப் பிந்தைய தனது இசைப் பயணத்தில் டி.எம். கிருஷ்ணா தேர்ந்தெடுத்த பாதை அவருக்கு ஒரு புறம் பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்தது; மறுபுறம் அதே அளவு கண்டனங்களையும் ஈட்டியது.

டி.எம். கிருஷ்ணா சென்னையில் 48 ஆண்டுகளுக்கு முன் பிறந்தார். அவர் கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை நடத்தும் பள்ளியில் தாராளவாதக் கல்வி முறையில் பயின்றார்.

தொழிலதிபரும் இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சருமான டி.டி கிருஷ்ணமாச்சாரி டி.எம். கிருஷ்ணாவின் தாத்தா. அவர் அப்போது மியூசிக் அகாடமியின் உறுப்பினராக இருந்தார். இந்தச் செல்வாக்கு டி.எம் கிருஷ்ணா தனது இசைப் பயணத்தைத் தொடங்குவதற்கு உதவியது. இந்த தனிச்சலுகையைத்தான் பிற்காலத்தில் டி.எம்.கிருஷ்ணா கேள்விக்குள்ளாக்கினார், அதை எதிர்க்கக் கூடச் செய்தார். தான் பிறந்து வளர்ந்த அடித்தளத்தையே அசைத்துப் பார்த்தார்.

"மனக் குரல்கள்" (Voices Within) என்ற அவரது முதல் நூல் கர்நாடக இசை மேதைகள் பற்றிய ஒரு அலங்கார நூல். அதனை அவர் பாடகர் பம்பாய் ஜெயஸ்ரீயுடன் இணைந்து 2007ஆம் ஆண்டில் எழுதினார். "தென்நாட்டு இசை: கர்நாடகத்தின் கதை" (A Southern Music: The Carnatic Story) என்ற தனது இரண்டாவது நூலில்தான் டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசை உலகில் இருந்த கோளாறுகளைக் காணத் தொடங்கினார்.

ஓங்கி வளர்ந்த மரங்கள் நிரம்பிய காட்டின் எல்லையில், வழக்கமான பாதையில் இருந்து விலகிச் செல்லும் ஒரு பாதையில் அவர் இறங்குவதை அதில் பார்க்க முடிகிறது. இந்த நூல் வெளிப்படையாகவே சண்டை பிடிக்கும் நூல். "கர்நாடக இசைச் சூழலில் ஒரு கடவுள் மறுப்பாளர் செயல்படுவது மிகப் பெரிய சிக்கலாக உள்ளது" என்று ஒரு கலகக் குரலை எழுப்புகிறார், அவர். "ஒரு சில கடவுள் மறுப்பாளர்கள் இருக்கலாம். ஆனால், அவர்கள் அதை வெளிப்படையாகச் சொல்லி, கடவுளை மறுக்கும் வகையில் கர்நாடக இசையை பயன்படுத்துவது சிக்கலானதே" என்கிறார் அவர்.

பின்னர் ஒரு பேட்டியில், "கர்நாடக இசையின் வடிவத்தையும் வரலாற்றையும் கட்டமைப்பையும் நான் போற்றுகிறேன். ஆனால், நம்மிடம் எஞ்சியிருப்பதோ கச்சேரிகள்தான். கச்சேரியைப் பொறுத்தவரை அதைத் தூக்கி எறிய நான் தயாராகி விட்டேன். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு கச்சேரி இசையை கைவிட்டு விட்டு தனது சொந்தப் புகழ் மயக்கத்தில் புதைந்து விட்டது" என்று அவர் விளக்கியிருந்தார்.

செபாஸ்டியனும் மகன்களும் (Sebastians and Sons) என்ற நூலை எழுதும் போது அவர் மாற்றுப் பாதையில் வெகுதூரம் சென்று விடுகிறார். அந்த நூலில் தாளக் கருவி கலைஞர்கள் மத்தியில் புரையோடிப் போன சாதியப் பாகுபாட்டை அவர் கேள்விக்குட்படுத்துகிறார்.

விமர்சகர்களும் அவரது சக இசைக் கலைஞர்களும் கொதித்துப் போனார்கள். அவர்கள் மத்தியில் இருந்த தூய்மைவாதிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். டி.எம். கிருஷ்ணாவின் கேள்விகள் இசையின் வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் விமர்சிப்பதைத் தாண்டி ஆழமாகச் சென்றன. எல்லோரும் வசதியாக இருந்து வந்த அடித்தளத்தையே அசைத்துப் பார்த்தன. கர்நாடக இசை பிராமணர்கள் என்ற ஒற்றைச் சாதியின் கோட்டையாக இருந்தது என்ற அவர் சொன்னதில் யாருக்கும் வியப்பு இருந்திருக்காது. ஆனால், டி.எம். கிருஷ்ணா செய்தது போல அதை வெளிப்படையாக விமர்சிப்பதும், பழிப்பதும் சகிக்க முடியாததாக இருந்தது. அவரது ஒளிவுமறைவற்ற கருத்துக்கள் பலருக்கு எரிச்சலூட்டின.

அதற்குப் பின்னர் அவர் செய்தது இந்த எதிர்ப்புக் கோட்டையை இன்னும் வலுவாக்கியது. 2015ஆம் ஆண்டு இசைத் திருவிழாவில் அவர் பங்கேற்க மறுத்தார். இது அவர் தனக்குத்தானே வைத்துக் கொண்ட சூனியம்தான். "இசையே இல்லாமல் போகும் அளவுக்கு இசைத் திருவிழா சீரழிந்து போய் விட்டது என்று எனக்குத் தோன்றுகிறது. இசை அதிலிருந்து ஓடிப் போய் விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அங்கு நிரம்பியுள்ள ஓசையை இசையால் சகித்துக் கொள்ள முடியவில்லை போல" என்றார் அவர். ஒரு சிலரின் ஊழல் பற்றியும் அவர்கள் இசை அரங்குகளை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது குறித்தும் அவர் குற்றம் சாட்டினார்.

அவரது கலகக் குரல் அவரிடம் புதைந்து கிடந்த பார்ப்பன எதிர்ப்பு மனப்பான்மையில் இருந்து எழுவதாக கர்நாடக இசை உலகம் கருதியது. தனது காலத்தில் பிராமணர் ஆதிக்கத்தை எதிர்த்துக் கடுமையாகப் போராடிய திராவிட இயக்கத்தின் தந்தை பெரியாரை டி.எம். கிருஷ்ணா வெளிப்படையாக ஆதரித்தது இன்னும் கலக்கத்தை ஏற்படுத்தியது. டி.எம். கிருஷ்ணா கட்டணம் இல்லாத இசை நிகழ்ச்சிகளை நடத்தினார், கடற்கரைகளிலும் தெருக்களிலும் பாடி இசையை மக்களிடம் கொண்டு போனார். முற்போக்கு எழுத்தாளரான பெருமாள் முருகனுடன் இணைந்து பெரியாரின் எழுத்துக்களையும் பழங்கால தமிழ் இலக்கியங்களையும் கர்நாடக இசையில் அமைத்தார்.

இப்போது குட்டையைக் குழப்பத் தொடங்கிய கடிதத்தில் ரஞ்சனி, காயத்ரி இரட்டையர் டி.எம். கிருஷ்ணா பெரியாரை ஆதரிப்பதைக் கண்டித்திருந்தனர். பெரியார் பிராமணர்களின் "இனப்படுகொலை"யை ஆதரித்ததாக அவதூறு செய்திருந்தனர். ஆனால், அவர்கள் டி.எம். கிருஷ்ணாவின் இசைத் திறனைப் பற்றிப் பேசவில்லை. டி.எம். கிருஷ்ணா மீது பாய்ந்து குதறிய மற்றவர்கள் ‘தர்மம்’, ‘இந்து மதம்’ என்று படம் காட்டினர். டி.எம். கிருஷ்ணாவின் அரசியலில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை என்பதால், அவரது இசைப் புலமையை அவர்கள் இழிவுபடுத்தினர். விருதுக்காக டி.எம். கிருஷ்ணா தேர்ந்தெடுக்கப்பட்டது ‘அவரது நீண்ட இசைப் பயணத்தில் அவர் ஈட்டிய சிறப்புகளைக் கருத்தில் கொண்டே’ என்று மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளி விளக்கமளித்தார்.

இதைத் தொடர்ந்து, பல தந்திரமான வாதங்கள் முன் வைக்கப்பட்டன. யாருக்கு விருது கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்வதற்கு மியூசிக் அகாடமிக்கு இருக்கும் அதிகாரத்தை தாங்கள் கேள்வி கேட்கவில்லை என்று ரஞ்சனி, காயத்திரி இரட்டையர் கூறினார்கள். ஆனால், இந்த ஆண்டு விருது பெறுபவரின் முன்னிலையில் தாங்கள் பாடப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாகக் கூறினார்கள். டி.எம். கிருஷ்ணாவை விமர்சிப்பவர்கள் அவர்களை அறியாமலேயே அவரது தரப்பையே பேசினார்கள். "வாய்ப்பு மறுக்கப்பட்ட சாதிகளில் இருந்து புகழ்பெற்ற கலைஞர்கள் தோன்றினால் அது எங்களுக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கும் பெருமகிழ்ச்சியை அளிக்கும்" என்று சொன்ன

ரஞ்சனி, காயத்திரி, இந்தச் சீர்திருத்தத்தை மியூசிக் அகாடமியின் தலைமைப் பொறுப்பில் பிற சாதியினரை நியமிப்பதிலிருந்து தொடங்க வேண்டும் என்று ஒரு குத்து வைத்தார்கள்.

1981ஆம் ஆண்டில் ஆஸ்கர் விருது பெற்ற மெஃபிஸ்டோ என்ற திரைப்படத்தில், அதன் நாயகன் மெஃபிஸ்டோபில்ஸ் என்ற பூதத்தின் வேடத்தில் நடித்து புகழ் பெற்றவர். அவர் தனது திரை உலக வாழ்வின் நலனுக்காக நாஜிக் கட்சியுடன் ஒரு பிசாசு ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார். அதில் அடங்கியுள்ள அறமின்மை அவரை உறுத்தவில்லை. "நான் ஒரு நடிகன் மட்டுமே" என்று அவர் சப்பைக் கட்டு கட்டினார். டி.எம். கிருஷ்ணாவோ அந்த நாயகனின் நிலைப்பாட்டிற்கு நேர்எதிர் கடைக்கோடி நிலையை அடைந்துள்ளார். "வெறும் பாடகராக மட்டுமே" இருப்பதை அவர் என்றோ விட்டொழித்து விட்டார்.

நன்றி: ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழில் (மார்ச் 31, 2024, பக்கம் 16) வெளிவந்த கட்டுரை

- ரம்யா கண்ணன்

தமிழில்: மா.சிவகுமார்

Pin It