அமெரிக்கா சுதந்திரம் அடைவதற்கு முன்பே இந்தியாவும் சீனாவும் நன்நெறிகளைக் கொண்டு சமூகமாக வாழும் வாழ்க்கைப் பண்பைப் பெற்றிருந்த நாடுகள் என்பதை வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்து வைத்துள்ளனர். இந்த நாடுகளின் சிறப்பே சமூகமாக வாழ்வதுதான். சமூகமாக வாழ்வது என்பது சாதியமாக வாழ்வதோ, மதமாக வாழ்வதோ அல்ல, எல்லா மதங்களையும், எல்லா சாதிகளையும் உள்ளடக்கிய ஒரு கூட்டு வாழ்க்கைக்கான சமூக உளவியல்தான். இன்று அந்தச் சொல் நம் நாட்டில் சாதியாக விளங்கிக் கொள்ளப்படுகிறது. இந்த நாடுகள் சுதந்திரம் அடைந்ததற்கும் அமெரிக்கா சுதந்திரம் அடைந்ததற்கும் ஓர் வித்தியாசம் உள்ளது. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாடுகளில் சுதந்திரம் என்பது தனிமனிதர்களுக்கானது அல்ல, ஒட்டுமொத்த சமூகத்திற்கானது. இங்கு தனிமனிதர்களாக யாரையும் பார்ப்பது கிடையாது.

தனிமனிதர்கள் குடும்ப உறுப்பினர்கள். குடும்பம் சமூகத்தின் அங்கம், சமூகம் நாட்டின் அங்கம். நாடு உலகின் அங்கம் உலகம் பிரபஞ்சத்தின் அங்கம். எனவே குடி, குடிமக்கள், குடிமை, குடி உயர்த்துதல் என்பதனைத்தும் இந்தியச் சமூகத்தின் அடிப்படை அம்சங்கள். குடி, குடிமை, குடியானவன் என்பனவையெல்லாம் இந்தச் சமூகத்தோடு தொடர்புடைய வரையறுக்கப்பட்ட வார்த்தைகள். பொதுமக்களுக்கு அன்று இவைகளைப் பற்றிய புரிதல் இருந்தது. ஆகையால் எதையும் சமூகக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் மனோபாவம் இருந்தது.village panchayatஇந்தியா சுதந்திரம் அடைந்தது 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி. நாம் சுதந்திரம் அடைந்து விட்டோம், உண்மைதான். 14 ஆகஸ்ட் 1947ல் நாம் என்னவாக இருந்தோம்? வெள்ளையர்களுக்கு அடிமையாக இருந்தோம். ஒரே நாளில் நம்முடைய சூழல் மாறி­ விட்டது. அடிமை வாழ்க்கை வாழ்ந்த நாம் சுதந்திரமான வாழ்க்கைக்கு வந்து விட்டோம். சுதந்திரமான வாழ்க்கை வாழ நமக்கு என்ன தகுதிகள் வேண்டும். அந்தத் தகுதிகள் என்னென்ன என்பதை நம் மக்களுக்குக் கூறினோமா? இன்று வரை முறையாக மக்களிடம் சுதந்திர நாட்டில் எப்படி வாழ்வது என்று கூறவில்லை. சுதந்திரம் அடைந்த நாட்டில் குடிமக்கள் சுதந்திரத்துடன் வாழ்வதற்கு மக்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அது ஒரு அறிவியல். அந்த அறிவியலை குடிமக்கள் அனைவருக்கும் கற்றுத் தர வேண்டும். அதைச் செய்யாததன் விளைவுதான் நாம் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்று நியதியற்று வாழ்கின்றனர் பெரும்பான்மை மக்கள்.

கட்டுப்பாடற்ற வாழ்க்கைதான் இன்று நம் சமூகம் சந்திக்கும் பெரிய சவால். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற சிந்தனையைத்தான் அனைவர் மத்தியிலும் வளர்த்தோமே தவிர சுதந்திரம் அடைந்த மக்களாட்சி நாட்டில் எப்படி குடிமக்களாக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று மக்களை நாம் தயார் செய்யவில்லை. இந்திய நாட்டுக்கு சுதந்திரம் வேண்டும் என்று உழைத்த அத்தனை தலைவர்களும் பொதுமக்கள் சிந்தனையை உயர்த்த தேவையான கருத்தாக்கங்களை உருவாக்கி நமக்களித்தனர். இந்தியாவில் காலங்காலமாக எண்ணிலடங்கா ஞானிகளும் மகான்களும் நற்சமுதாயத்தை உருவாக்கும் உபாயங்களை நமக்கு உருவாக்கித் தந்தனர். சுதந்திரப் போராட்ட காலத்தில் சுவாமி விவேகாநந்தர், மகாத்மா காந்தி, பகவான் அரவிந்தர், கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், எம்.என்.ராய், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் என அனைவரும் சமுதாயத்தை எப்படி மேம்படுத்த முடியும், என்பதற்கான கருத்துக்களைத்தான் மக்கள் மத்தியில் விதைத்தனர்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நம் நாட்டில் எது பிரதானமாக்கப்பட்டது என்றால், அரசியல், பொருளாதாரம், அரசாங்கம் ஆளுகை, மற்றும் நிர்வாகம், மட்டுமே. பொதுப்புத்தியில் இவை அனைத்தும் அந்தரத்தில் நடைபெறுவதில்லை, இவை அனைத்தும் ஒரு சமூகத்தில்தான் நடைபெறுகிறது என்ற பார்வையற்று போய்விட்டது. இதன் விளைவு அறமற்ற அரசியல், வணிகம், பொருளாதாரம், வாழ்வியல் என அனைத்து தளங்களும் பொறுப்பற்ற செயல்பாட்டுக் களங்களாக மாறின. இதனை நாம் சரி செய்ய எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும், எத்தனை புதிய சட்டங்கள் வந்தாலும், எத்தனை புதிய கொள்கைகள் வந்தாலும், அவைகளால் அனைத்தும் மாறப்போவது கிடையாது. வந்த தொழில் நுட்பங்களையும், வந்த சட்டங்களையும், கொள்கைகளையும், யாருக்காக பயன்படுத்த வேண்டுமோ அவர்களுக்காக பயன்படுத்த இயலவில்லை. அவை அனைத்தும் தவறாக பயன்படுத்துவோர் கையில் செயல்படுகிறதேயன்றி, யாருக்காகப் பயன்பட வேண்டுமோ அவர்களுக்குப் பயன்படவில்லை என்ற நிதர்சனத்தை நாம் பார்க்கும்போது, இதன் தீர்வு என்பது இனிமேல் மக்கள் கையில்தான் என்பதை புரிந்துகொண்டு நாம் செயல்பட்டாலன்றி பிரச்சினைகளுக்கான தீர்வு நமக்குக் கிடைக்கப்போவது இல்லை.

ஒரு கடைக்குச் செல்கிறோம் பொருள் வாங்க. நல்ல பொருள் வேண்டும் என பார்த்துப் பார்த்து அலசி ஆராய்ந்து பார்த்து வாங்குகின்றோம். எனவே எங்கு சென்றாலும் எனக்கு நல்லது வேண்டும் எனக் கேட்கிறோம். எனக்கு நல்ல ஆட்சி வேண்டும், நல்ல அரசியல் வேண்டும், நல்ல நிர்வாகம் வேண்டும், என்று எதிர்பார்க்கிறோம் தவறு ஒன்றும் இல்லை. இத்தனையும் நல்லதாகவே வேண்டும் என்று கேட்கும் நான் நல்லவராக இருக்கின்றேனா? என் குடும்பம் நல்லதாக இருக்கிறதா? நான் வாழும் சமூகம் நல்லவையாக இருக்கின்றதா? என்று என்றாவது நமக்கு நாமே கேட்டுக் கொண்டோமா? ஒரு பொறுப்பற்ற சமூகத்தில் எப்படி ஒரு பொறுப்புமிக்க அரசியல், ஆட்சி, நிர்வாகம் என அனைத்தும் உருவாகும். ஒரு நல்ல ஆட்சிக்குத் தேவை நல்ல சமூகம். அந்த பொறுப்புமிக்க சமூகத்தை கட்டமைத்து உருவாக்காவிட்டால் எக்காலத்தும் ஒரு நல்ல அரசு நம்மிடம் உருவாகாது. எனவே ஒரு நற்சமுதாயம் உருவாக வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்தப் பணி இன்று இன்றியமையாத் தேவையாக இருக்கின்றது. இது ஒரு மக்கள் தயாரிப்புப் பணி.

இந்த மக்கள் தயாரிப்புப் பணியை நாம் எப்படிச் செய்வது என்பதுதான் நம் முன்னால் நிற்கும் பெரும் கேள்வி. அதற்கு நாம் வேறு எங்கும் தேட வேண்டியது இல்லை. அந்த வாய்ப்பை நம் அரசியல்சாசனம் உருவாக்கியுள்ளது. அந்த வாய்ப்பு நாம் உருவாக்கியுள்ள மக்களாட்சியில் உள்ளது. அதில் குடிமக்களுக்கான உரிமைகளும், கடமைகளும் தரப்பட்டுள்ளன. உரிமைகளை ஷரத்து (ஆர்ட்டிகல்) 12லிருந்து (ஆர்ட்டிகல்) 35 வரை பகுதி மிமிமில் கொடுக்கப்பட்டுள்ளன. அதே அரசமைப்புச் சாசனத்தில் ஷரத்து 51கில் கடமைகளாக 11 பொருள் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளன. நம்முடைய அரசியல்சாசனத்தை உருவாக்கியபோது குடிமக்களுக்கான உரிமைகளை மட்டுமே அதில் வரையறுத்துத் தந்தனர். நாம் குடியரசானபின் பொறுப்பற்ற நிலையில் நடந்து கொள்வதை உணர்ந்து அரசமைப்புச் சாசனத்தைத் திருத்தி முதல் 10 பொருள்கள் அடங்கிய பட்டியலைத் தயாரித்துத் தந்தனர். இது 42வது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் 86வது முறையாக திருத்தியபோது மற்றொரு பொருளையும் சேர்த்து 11காக உயர்த்தி தந்துள்ளனர். இந்தப் பட்டியலில் கண்டுள்ள 11 பொருள்களும் கருத்தாக்கங்களாக தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு பொருளாக எடுத்து அதற்கு செயல்வடிவம் தந்து அவைகளை மக்கள் கடைப்பிடிக்குமாறு செய்திடல் வேண்டும். குடிமக்கள் கடமை என்று கூறும்போது நாம் ஒன்றை மனதில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இவை அனைத்தும் சாதாரண மனிதர்களுக்கென்று கொள்ளக்கூடாது. இந்த நாட்டின் குடியரசுத் தலைவர் முதல், கிராமசபை உறுப்பினர் வரை அனைவருக்கும் பொருந்தும்.

இந்திய நாட்டில் வாழும் நாம் அனைவரும் முதலில் குடிமக்கள் அப்புறம்தான் நாம் வசிக்கும் பதவிகள், பொறுப்புக்கள், செய்திடும் பணிகள் மற்றும் சேவைகள். இந்தப் புரிதலை நாம் ஒவ்வொருவரும் உருவாக்கிக் கொண்டு செயல்பட வேண்டும். அப்படிச் செய்கின்றபோது நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் பொறுப்புடன் இருக்கும். அந்த நிலைக்கு நாம் நம்மை உயர்த்திக் கொண்டு செயல்பட வேண்டும். இதற்கு மிக முக்கியம் நம் அரசியல் சாசனத்தை அனைத்து குடிமக்களுக்கும் எடுத்துச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான். ஒவ்வொரு ஆண்டும் நாம் நவம்பர் 26ஆம் தேதி அரசியல் சாசன நாளைக் கொண்டாடுகிறோம். எதற்காகக் கொண்டாடுகின்றோம்? பொதுமக்களுக்கு அரசியல்சானம் பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்துவதற்காக. பொது விவாதங்களை ஏற்படுத்தி நம் அரசியல்சாசனத்தின் முக்கியத்துவம், அடிப்படைக் குறிக்கோள்கள், அவைகளை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள், அவைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கத் தேவையான கல்வி உருவாக்குதல் போன்ற செயல்பாடுகளை விவாதித்து மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக. 2015ஆம் ஆண்டிலிருந்து இந்த நாள் அரசமைப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த எட்டு ஆண்டுகளில் என்ன விளைவு என்று நாம் ஆய்வு செய்து பார்க்க வேண்டும். ஏனென்றால் இதையும் நாம் சடங்காக நடத்தி வருவது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

1.           அரசியல் சாசனத்தை நாம் நம் அனைத்துச் செயல்பாடுகளில் கடைப்பிடிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதில் கூறப்பட்டவைகளை நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். அரசியல்சாசனம் நாட்டுக்கானது. நாடு மக்களுக்கானது. எனவே அரசமைப்புச் சட்டத்தில் உள்ள ஷரத்துக்களை நாம் மதிக்கும் ஒரு மனப்பக்குவத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதை மீறக்கூடாது. சட்டத்தை மதித்து சட்ட விதிகளுக்கு உட்பட்டு நாம் நடந்துகொள்ள வேண்டும். அப்படி என்றால் ஒரு அரசு அதிகாரி முதலில் ஒரு குடிமகன். சட்டம் என்ன கூறுகிறதோ அதைத்தான் நடைமுறைப்படுத்துவார். தவறாக நடந்துகொள்ள மாட்டார். அவரை அணுகும் குடிமகளும் குடிமகனும் சட்டத்தை மீறவே மாட்டார்கள். இந்த இருவரும் மீறும்போது தான் ஊழல் உருவாகின்றது. ஒரு குடிமகன் சட்டத்தை மதிக்க வேண்டும் என்பது ஒரு கடமை. அரசமைப்புச் சாசனத்தை மதிப்பது அல்லது பின்பற்றுவது ஒவ்வொரு குடிமகனுடைய கடமையாகும். அனைவருக்கும் உரிமைகள் இருக்கின்றன. அந்த உரிமைகளை நாம் அனுபவிக்க மற்றவர் உரிமையில் தலையிடாமல் வாழ வேண்டும். சமத்துவம் பேண வேணும் என்பது அரசியல்சாசனம் கூறும் விழுமியம். அதை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும். பின்பற்றுகிறோமா என்பதுதான் நம் முன் நிற்கும் கேள்வி. எனவே சட்டத்தின்படி அனைவரும் செயல்பட வேண்டும். சட்டத்தின்படி நாம் குடிமகனாக கேட்க வேண்டும்.

2.           அரசமைப்புச் சாசனத்தின் குறிக்கோள்களை மதித்தல் என்றால் குடிமக்கள் ஒட்டுமொத்த சமூகமும் அதை நோக்கி நகர்ந்திட மக்கள் தயாராக வேண்டும். மக்களாட்சியாக, குடியாட்சியாக, மதச்சார்பற்று, சோசலிச சமுதாயமாக மாறிட குடிமக்களாக நாம் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். மக்களாட்சி என்றால் என்ன? அதன் அடிப்படைக் கூறுகள் என்னென்ன? சமூகம் எப்படி மக்களாட்சிப்படுத்தப்படும் என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். மக்களாட்சியையும், குடியாட்சியையும் நாம் தெளிவாக மக்களுக்கு எடுத்து விளக்கிட வேண்டும். குடியாட்சியின் முக்கியத்துவம் குடிமக்கள் செயல்பாட்டில் இருக்கிறது என்பதை மக்களிடம் புரிய வைக்க வேண்டும்.

3.           அரசமைப்புச் சாசனம் உருவாக்கிய அமைப்புக்களை நாம் மதித்துப் போற்ற வேண்டும். அது சட்டமன்றமாக இருக்கலாம், பாராளுமன்றமாக இருக்கலாம், கிராமசபையாக இருக்கலாம், வார்டு சபையாக இருக்கலாம், நீதி மன்றமாக இருக்கலாம், தேர்தல் ஆணையமாக இருக்கலாம், தணிக்கை அலுவலகமாக இருக்கலாம். அனைத்தும் அரசியல் சாசனம் உருவாக்கிய அமைப்புக்கள். அவைகளை குடிமக்களாக நாம் ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும். குடிமக்களாக ஒவ்வொருவரும் தங்களை பாவித்துக் கொண்டு சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தால், ஒவ்வொரு மணித்துளியும் முக்கியம் எனக் கருதி, ஒட்டுமொத்த பாராளுமன்ற நேரத்தை வெட்டி விவாதத்தில் செலவழிக்காமல், மக்கள் பிரச்சினையை மையப்படுத்தி பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் செயல்படுவதற்கு குடிமக்களாக நாம் அழுத்தம் தரவேண்டும்.

4.           தேசியக் கொடியையும், தேசியகீதத்தையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். தேசியக்கொடி ஏற்றும் இடங்களுக்கு அதாவது குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற நாட்களில் நடைபெறும் விழாக்களுக்கு நாம் குடிமக்களாக கலந்து கொள்ள வேண்டும். அந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போதுதான் அவைகளின் முக்கியத்துவம் நமக்கே புரியும். எனவேதான் பொது நிகழ்வுகளுக்குச் செல்வதை நாம் கடமையாக வைத்துச் செயல்பட வேண்டும்.

5.           இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்களையும், கருத்தியல்களையும் மதிக்க வேண்டும். ஒவ்வொரு சுதந்திர நாளிலும் குடியரசு நாளிலும் பொதுமக்களிடம் மீண்டும் மீண்டும் தங்கள் உணர்வுகளில் தேங்கி நிற்கும் அளவுக்கு, சுதந்திரப் போராட்ட தியாக வரலாற்றை நினைவுகூர வேண்டும். அப்படி நினைவு கூர்வதன் மூலம் ஒவ்வொருவரும் இந்த நாடு எவ்வளவு இன்னல்களுக்குப் பிறகு விடுதலை அடைந்துள்ளது என்பதை தங்கள் சிந்தனையில் வைத்த வண்ணம் நாட்டுச் சிந்தனையுடன் குடிமக்கள் அனைவரும் செயல்படுவர். அந்த தியாக உணர்வு மதிக்கப்பட்டு பொறுப்புமிக்க குடிமகனாக ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.

6.           இந்திய இறையாண்மை காக்க நாம் குடிமகனாக அனைவரும் பாடுபட வேண்டும். இந்திய நாட்டின் இறையாண்மையும், குடிமக்களின் இறையாண்மையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. இந்த இறையாண்மை எதற்காக என்றால் மக்களை பாதுகாக்க, நாட்டு மக்களின் பாதுகாப்பு என்பது அந்த நாட்டு அரசாங்கத்தின் பொறுப்பு. அந்த நாட்டின் பாதுகாப்பு என்பது நாட்டு மக்களின் அதாவது குடிமக்களின் பொறுப்பு. இறையாண்மை பற்றிய புரிதல் குடிமக்களுக்குத் தேவை. அதை நாம் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

7.           நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் நாம் பாதுகாக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாடு என்பது மக்களின் ஒற்றுமையிலும் ஒருமைப்பாட்டிலும் இருக்கிறது என்பதையும் நாம் மக்களிடம் எடுத்துச் சென்று புரிய வைக்க வேண்டும்.

8.           நாட்டுக்கு ஏதேனும் ஆபத்து வருமேயானால் அந்த நேரத்தில் நாட்டைக் காக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது என்ற உணர்வில் நாம் வாழ வேண்டும்.

9.           மக்கள் அனைவரும் சகோதரத்துவப் பண்புடன் ஒருவரையருவர் மதித்து அரவணைத்து அன்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

10.        பெண்களின் சுயமரியாதை பாதுகாக்கும் உணர்வில் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும்.

11.        இந்த நாட்டின் தொன்மை என்ன என்பதை மக்களிடம் விளக்கிட வேண்டும். பாரதி கூறிய பாரத நாடு பழம் பெரும் நாடு நீர் அதன் புதல்வர் என்பதன் பொருளை மக்களுக்கு விளக்கிட வேண்டும். பாரத நாட்டுக்கு உள்ள சிறப்புக்கள் அனைத்தும் நாட்டு மக்களுக்கும் உணர்த்தி நாம் உலகுக்கு வழிகாட்டும் நாட்டின் குடிமக்கள் என்ற பெருமித உணர்வுடன் வாழ வேண்டும் என்ற புரிதலை அவர்களிடம் உருவாக்க வேண்டும்.

12.        இந்த நாடு பன்முக கலாச்சாரத்தைக் கொண்டது என்ற புரிதல், அதன் சிறப்பு அதை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பனவற்றை நாம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

13.        இயற்கை வளங்களைப் பாதுகாப்பது, வளர்ப்பது, மிக முக்கியமான குடிமக்கள் கடமையாகும். ஒவ்வொரு குடிமகனுக்கும் இதற்கான புரிதலை உருவாக்க வேண்டும். காடுகள், மலைகள், ஏரிகள், காட்டுயிர் பாதுகாப்பு என்பதெல்லாம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கருத்தாக்கங்கள். அவைகளை நாம் அனைவரும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

14.        உயிரினங்கள் மீது பரிவு கொண்டு நடத்தும் உளவியலை குடிமக்களிடத்து உருவாக்கிட வேண்டும்.

15.        வாழ்வின் அன்றாடச் செயல்பாடுகளில் அறிவியலை பின்புலத்தில் வைத்துச் செயல்படும் ஒரு புரிதலை ஏற்படுத்திட வேண்டும். அது நீரானாலும் சரி, உணவானாலும் சரி, உடல் ஆரோக்கியமானாலும் சரி, வசிப்பிட துப்புரவானாலும் சரி, குழந்தை வளர்ப்பானாலும் சரி, அனைத்திலும் மூடப்பழக்க வழக்கங்களைக் களைந்து அறிவியலை கடைப்பிடிக்கும் பழக்கத்தை குடிமக்கள் மத்தியில் கொண்டுவர வேண்டும்.

16.        நாம் செயல்படுகின்ற அனைத்துத் தளத்திலும் கேள்வி கேட்கும் மனோபாவத்தையும், பரிசோதனை செய்யும் மனோபாவத்தையும் குடிமக்களிடம் உருவாக்கி கடைப்பிடிக்க வைக்க வேண்டும்.

17.        மாறிவரும் உலகச் சூழலில் நன்மை தரும் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு, அதற்குத் தக்கவாறு நம்மை சீர்திருத்திக் கொள்ளும் மனோபாவத்தை அனைத்துத் தரப்பு மக்களிடம் உருவாக்கிட வேண்டும்.

18.        மனிதத்துவத்தை வளர்க்கும் மனிதப் பண்புகளையும், மாண்புகளையும் வளர்த்தெடுக்க வேண்டும்.

19.        வன்முறை தவிர்க்கும் மனோபாவத்தை சிந்தனையை வளர்த்தெடுக்க வேண்டும். அமைதி ஒற்றுமைதான் மேம்பாட்டைக் கொண்டுவரும். வன்முறை அழிவைக் கொண்டுவரும் என்ற வரலாற்று உண்மையை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.

20.        பொதுச் சொத்து என்பது நாட்டின் சொத்து, நாட்டின் சொத்து என்பது நம் சொத்து. எனவே பொதுச் சொத்தைப் பாதுகாக்க வேண்டியது நம் குடிமக்கள் கடமை என்பதை உணர வைக்க வேண்டும்.

21.        குடிமக்களாக, நாம் ஒவ்வொருவரும், அது ஒரு தூய்மைப் பணியாளராக இருக்கலாம், ஒரு அலுவலக பணியாளனாக இருக்கலாம், மாவட்ட ஆட்சியராக இருக்கலாம், ஆசிரியராக இருக்கலாம், எந்தப் பணியில் வேண்டுமானாலும் இருக்கலாம். அந்தந்தப் பணிகளில் உச்சத்தைத் தொடும் அளவில் நிபுணத்துவத்துடன் செயல்பட நாம் தயாராகிட வேண்டும். அந்தப் பணி என்பது வாங்கும் சம்பளத்திற்கு அல்ல, நாம் செய்வது நாட்டிற்கு என நினைத்து செயலாற்ற வேண்டும் என்ற உணர்வினைக் கொண்டுவர வேண்டும்.

22.        நாம் செயல்படும் அனைத்துத் தளங்களிலும் ஒவ்வொரு நிலையாக உயரத்தைத் தொட உயர்நிலைச் சாதனைகளை நோக்கி செயல்படும் மனோபாவத்தை அனைவரிடமும் உருவாக்கிட வேண்டும்.

23.        6 வயதிலிருந்து 14 வயதுவரை உள்ள குழந்தைகள் அனைவரும் கல்வி கற்றிட வழிவகை செய்வது கட்டாயக் கடமையாகும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ளவை ஒரு செயல்பாட்டுக்கான கருத்துப் பட்டயம்தான். இதை செயல்பாட்டுக்காக விரித்தால் நூற்றுக்கணக்கான செயல்பாடுகளை மிக எளிதாக நம் சிந்தனைக்கு ஏற்றவாறு உருவாக்கிவிடலாம். இயற்கை வனப்பாதுகாப்பு என்பதை மட்டும் எடுத்தால் ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட செயல்பாடுகளை நம்மால் உருவாக்கிட முடியும். இன்று படித்தவர் படிக்காதவர் என அனைத்துத் தரப்பிலும் புரிதலற்று இருப்பதால் நாம் யாரைப் பார்த்து வருகிறோமென்றால் படித்த நிபுணர்களை. ஆனால் அவர்களை பொறுப்புமிக்க குடிமகனாக, குடிமகளாக பார்க்க இயலவில்லை. எனவே இன்று பொறுப்புமிக்க குடிமக்களை உருவாக்க நமக்கு ஒரு அவசரத் திட்டம் தேவை. இந்த ஆண்டு முழுவதும் இந்தியாவிலுள்ள உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தங்களிடம் பணியாற்றும் ஆசிரியர்களையும், பயின்றுவரும் மாணவர்களையும் களத்தில் இறக்கி விழிப்புணர்வுப் பணி செய்திட முயற்சிக்க வேண்டும். அதைச் செய்வதற்கு தற்போது கொண்டு வந்திருக்கும் மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் திட்டத்தை பயன்படுத்த முனைய வேண்டும். அந்தப் பணிதான் இன்று நமக்குத் தேவையான பணி..

- க.பழனித்துரை, காந்திகிராமிய பல்கலைக்கழக ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் ஆராய்ச்சி இருக்கைத் தலைவர் (ஓய்வு)

Pin It