உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து.  - குறள் - 1032

பொருள்:

உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர் எல்லோரையும் தாங்குவதால் உழவு செய்கின்றவர் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்.

****

உழவினர் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்

விட்டோம் என்பார்க்கும் நிலை.  - குறள் - 1036

பொருள்:

உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டு விட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.

****

மாமேதை மார்க்சை நோக்கி வைக்கப்பட்ட, ‘எல்லாக் கோட்பாடுகளும் ஒருநாள் காலவதியாகிப் போகுமா?’ என்ற வினாவிற்கு அவர், ‘ஆம்’ என்றே பதிலளித்தார். ‘உங்கள் கோட்பாடுகள் கூட காலாவதியாகிப் போகுமா?’ என்பதற்கு ‘எல்லாம் மாறும்’ எனும் கோட்பாடும் பீத்தோவனின் 5ஆம் சிம்பனியையும் தவிர எல்லாம் காலாவதியாகும் என்றாராம், மார்க்ஸ். மார்க்சுக்கு பீத்தோவனின் இசை மீதிருந்த பெருமதிப்பை அவரது இந்த அரை நகை கொண்ட மொழியின் மூலம் அறியலாம். மார்க்ஸ் பீத்தோவனின் 5ஆம் சிம்பனிக்குக் கொடுக்கும் இடத்தில் நாம், பல குறட்பாக்களை வைக்கலாம்.farmers protest 700குறைந்தது சுமார் 1500 ஆண்டுகள் வயதாகும் மேலேயுள்ள குறட்பாக்களின் பொருத்தப்பாடு இந்த 21ஆம் நூற்றாண்டிலும் இல்லாது போய்விடவில்லை. எனவேதான் ’வலிமையுள்ளது வாழும்’ என்ற விலங்குலக தர்க்கத்தில் முதலாளித்துவம் இயங்கும் மிக ”முன்னேறிய” மேற்கத்திய நாடுகளில்கூட, வேளாண் அரங்கம் எண்ணற்ற சலுகைகள், மானியங்கள், வரி விலக்குகள், விதி விலக்குகள் எல்லாம் அளிக்கப்பட்டு காப்பாற்றப்படுகின்றது.

‘மௌன வசந்தம்’ (Silent Spring) என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நூலில் அதன் ஆசிரியர், ரேச்சேல் கார்ஸன், அமெரிக்க ஐக்கிய நாட்டில் விவசாயிகள் விளைவித்த அதீதமான உணவுப் பொருட்களை வாங்கி அழிப்பதற்கு அமெரிக்கக் கூட்டாட்சி அரசு ஆண்டுதோறும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் (சுமார் 7500 கோடி ரூ) செலவு செய்வதைக் கூறுவார். மேலும் இது விவசாயிகள் தங்கள் நிலங்களில் விவசாயம் செய்யாமல் இருக்க அளிக்கப்படும் மானியத்திற்கு (அதுவே 1 பில்லியன் அமெரிக்க டாலர் இருக்கும்!) மேலாக அளிக்கப்படுவது என்பதையும் பதிவு செய்திருப்பார்.

அதுபோல இந்திய சமூக அறிவியல் பேராசிரியர்களான ஷிவ் விஸ்வநாதன், சந்திரிகா பார்மர் ஆகியோர் 1993ஆம் ஆண்டு அதீதமாக உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகளையும் பழங்களையும் சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு அழித்தொழிக்க ஐரோப்பிய ஒன்றியம் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவழித்ததை தமது கட்டுரையில் (EPW - 37(27) : 2714-24, 6 July 2002) பதிவு செய்திருப்பர்.

இப்படி தம் நாட்டில் விவசாயத்தைப் பாதுகாக்க சலுகைகளையும் மானியங்களையும் (அது சரியான நடவடிக்கைதான்) மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. இந்த நாடுகளின் கைப்பாவைகளான ஐ.எம்.எஃப், உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு (IMF, WB, WTO) ஆகிய மும்மூர்த்திகள், விவசாய அரங்கில் சந்தைச் சக்திகளின் தடையற்ற இயக்கத்திற்கு இடமளிக்க வேண்டும்; மானியங்கள், சலுகைகளை வெட்டிச் சுருக்க வேண்டும்; விளைபொருட்களின் விலையை சந்தை நிர்ணயம் செய்ய அனுமதிக்க வேண்டும்; அரசு தீர்மானிக்கக் கூடாது என்றெல்லாம் ஊருக்கு உபதேசம் செய்கின்றன.

உலகத்திலேயே தாங்கள்தான் கடவுளின் சொந்தக் குழந்தைகள், தமது கட்சிதான் கடவுளின் சொந்தக் கட்சி எனும் மேட்டிமை நினைப்பு கொண்ட அரசும் இந்த மும்மூர்த்திகள் காலால் இட்ட ஆணையை சிரம் மேல் வைத்து நிறைவேற்ற முயற்சிக்கின்றது. இது போன்ற ஒரு ஆலோசனையை ஏற்று ஃபிரெஞ்சு அரசாங்கம் விவசாய விலைகள் குறித்த விவாதத்தை நிகழ்ச்சி நிரலில் வைத்ததை எதிர்த்தே ஃபிரெஞ்சு விவசாயிகள், பாரிஸ் நகரம் முழுவதையும் டிராக்டர்களாலும் கால்நடைகளாலும் நிரப்பி ஃபிரெஞ்சு அரசை அடி பணிய வைத்தனர்.

டிராக்டர்களும் வீறு கொண்ட விவசாயிகளும் ஃபிரான்சில் மட்டுமில்லை, இந்தியாவிலும் உண்டு என தலைநகர் டெல்லிக்குத் திரண்டு வந்த விவசாயிகள் சுமார் ஓராண்டு காலம் டெல்லி மாநகரை தங்கள் டிராக்டர்களின் கீழே வைத்திருந்தனர். வேளாண் பெருங்குடி மக்களின் நலன்களுக்கு எதிரானதும் ஆட்சியிலிருக்கும் கட்சியின் முதுகெலும்பான சாதிகள், வர்க்கங்கள் நலனுக்கானதுமான புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்; விவசாயிகளின் விலைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைகளை (MSP), எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையின் சூத்திரத்தின்படி வழங்க வேண்டும் என்பதுதான் அவர்களது கோரிக்கையாக இருந்தது. சாதி, மதம், இனம், மொழி, அரசியல் கட்சிச் சார்புகள் எல்லாம் தாண்டி இணைந்து போராடிய விவசாய மக்கள் ஒற்றுமையின் முன் அரசு மண்டியிட்டது. அவர்கள் கோரிக்கைகளை ஏற்பதாக பிரகடனம் செய்தது. விவசாயிகளும் தங்கள் டிராக்டர்களையும் ரொட்டி சுடும் அடுப்புகள், தோசை கற்களையும் எடுத்துக்கொண்டு ஊர் திரும்பினர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில், 1850களில் கால்வாய் குடியிருப்புகள் மூலம் நிலம் பெற்ற ஓரளவு நிலம் கொண்ட பஞ்சாப், ஹரியானா, மேற்கு உ.பி விவசாய மக்கள் தமக்கு மட்டுமன்றி இந்தியா முழுவதும் இருக்கின்ற விவசாயிகளுக்கும் பலன் அளிக்க்கக் கூடிய கோரிக்கைகளுக்காகப் போராடுகின்றனர். பிழைத்துக் கிடப்பதே பெரும் பணியாய் இருக்கின்ற ஏனைய பல விவசாய சமூகங்கள் இந்த நிலப்பிரபுத்துவம், ஜமீந்தாரி முறைகள் இல்லாத நிலங்களின் சுதந்திர விவசாயிகள் போல போராட இயலவில்லை என்பதால் இது அவர்களது கோரிக்கையும்தான் என்பது இல்லாமல் போய்விடாது..

ஆனால் அரசு வெட்கமில்லாமல் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் வியாக்யானம் பேசுகின்றது. டிராக்டர்கள் மீண்டும் டெல்லி வந்துள்ளன. எந்த விதத்திலும் அறமற்ற செயலை கைவிடக் கோருவது பரந்துபட்ட ஜனநாயக சக்திகளின் கடமை. ஏதோ சில விவசாயிகள் உருவாக்கும் ‘நியூசென்ஸ்’ என்று நம்பவைக்க அதே ஆதிக்க சாதிகள் மற்றும் வர்க்கங்களுக்குச் சொந்தமான பகாசுர ஊடகங்கள் நம்பவைக்க முயல்கின்றன. இவற்றின் ஒலி ஒளி வெள்ளப் பிரச்சாரங்களைத் தாண்டி விவசாயிகளின் உண்மையான கோரிக்கைகளையும் அவர்களது வீரம் செறிந்த போராட்டத்தின் நியாயங்களையும் செய்திகளையும் கவனப்படுத்துவதும் அவர்களுக்கு ஆதரவாக நிற்பது மக்கள்சார் ஊடகங்களின் கடமை.

- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு

Pin It