கடவுளை மற மனிதனை நினையென
உடனிருந் தறிந்த கண்ணீர்த் துளிகள்
ஒன்றே குலமும் ஒருவனே தேவனுமென
இன்னுயி ரனைய கொள்கையில் தவறினர்
பார்ப்பனர் பிடிப்பில் மாற்றம் இன்றி
ஆர்ப்பரிப் புடனே அரசை யேற்று
கடமை மறந்து மயங்கி வீழ்ந்தனர்
மடமை இவற்றிற்குக் கழுவாய் இருப்பினும்
காம ராசர் தந்த கல்வியைப்
பாமரர் பெறுவதில் உராய்வை விதைத்து
முழுவதும் வணிக மயமாய்ச் செய்தற்கு
கழுவாய் இல்லை சான்றோ ரிடத்திலே
 
(கடவுளை மற; மனிதனை நினை என்ற கருத்தினை (பெரியாரின்) உடன் இருந்து தி.மு.க.வினர் (தி.மு.க.வினரைக் கண்ணீர்த் துளிகள் என்று பெரியார் அழைத்தார்) அறிந்து கொண்டு இருந்தாலும் ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்று கூறி உயிரனைய நாத்திகக் கொள்கையில் இருந்து தவறினர். (மேலும்) பார்ப்பனர்களின் அதிகாரப் பிடிப்பில் எந்தவித மாற்றமும் ஏற்படாத நிலையிலும், வெகு ஆராவாரமாக ஆட்சியில் அமர்ந்து, கடமை மறந்து மயக்கத்தில் விழுந்தனர். நல்லறிவுக்குப் புறம்பான இச்செயல்களுக்கு மன்னிப்பு இருந்தாலும் பெருந்தலைவர் காமராசர் தந்த கல்வியை, பாமர மக்கள் பெறும் வழியில் உராய்வை ஏற்படுத்தி, முழுவதும் வணிக மயமாக்கியதைச் சான்றோர்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.)
 
- இராமியா

Pin It