சமீபத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறையில் ஒரு முக்கிய திருப்பம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்கா நியூஜெர்சி குக்ஸ்டவுன் (Cookstown) என்ற இடத்தைச் சேர்ந்த 54 வயது பெண்மணி லிசா பிசானோவின் (Lisa Pisano) இதயம் மற்றும் சிறுநீரகம் செயலிழந்தது. பல காரணங்களால் அவருக்கு வழக்கமான உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. லிசாவின் உயிர் காக்க மருத்துவ நிபுணர்கள் மாற்று வழியைக் கண்டுபிடித்தனர்.

புது வழியில் அறுவைசி கிச்சை

மரணத்திற்கு அருகில் சென்ற லிசாவின் உயிரைக் காக்க மருத்துவர்கள் பன்றியின் சிறுநீரகத்தை மாற்று உடல் உறுப்பு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தினர். இரட்டை அறுவை சிகிச்சையின் ஒரு பகுதியாக செயலிழந்து கொண்டிருந்த அவரின் இதயத்தையும் இயங்க வைத்தனர்.

ஒரே நேரத்தில் இதயமும் சிறுநீரகமும் இயங்கவில்லை என்பதால் அவரின் உடல்நிலை பலவீனமானது. இதனால் சாதாரணமாக செய்யப்படும் அறுவை சிகிச்சை முறையைப் பின்பற்ற முடியவில்லை. இந்த அறுவை சிகிச்சை நியூயார் பல்கலைக்கழக லாங் ஒன் அறுவை சிகிச்சை ஆய்வுக்கழக மருத்துவமனையில் (NYU Langone Transplant Institute) நடந்தது. இதயத்தைத் தொடர்ந்து துடிக்க வைக்க முதலில் இயந்திர பம்பு பொருத்தப்பட்டது. பிறகு சில நாட்கள் கழித்து மரபணு ரீதியில் மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. அவர் உடல்நலம் இப்போது தேறி வருகிறது.porcine organமார்ச் 2024ல் மாசிசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் முதலில் இதே போல ஒரு பரிசோதனை அறுவை சிகிச்சை நடந்தது. இது இரண்டாவது அறுவை சிகிச்சை. விலங்கு ஒன்றின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உறுப்பு ஒன்றை மனிதருக்குப் பொருத்துவதன் மூலம் அவரது உயிரைக் காக்கலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று மருத்துவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

“சிகிச்சைக்கு முன்னால் நான் என்னுடைய வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருந்தேன். இது எனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு. இந்த முயற்சி வெற்றி பெறாமல் போயிருந்தால் இன்னொரு மனிதரின் உயிரைக் காப்பாற்ற இந்தப் புதிய முறை பயன்பட்டிருக்கும்” என்று லிசா கூறுகிறார்.

“இந்த வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. இந்த இரட்டை சிகிச்சை சோதனை உடனடியாக பலன் தந்துள்ளது. பன்றியின் சிறுநீரகம் நோயாளியின் உடலில் பொருத்தப்பட்டவுடன் அது இயங்கத் தொடங்கியது. சிறுநீரை உருவாக்க ஆரம்பித்தது” என்று மருத்துவமனை ஆய்வுக்கழகத்தின் இயக்குனர் டாக்டர் ராபர்ட் மாண்ட்காமரி (Dr Robert Montgomery) கூறுகிறார். “இன்னும் சில காலத்திற்குப் பிறகே இந்த சோதனையின் வெற்றியை உறுதி செய்ய முடியும்” என்று நோயாளியின் உடலில் இதய பம்ப்பை பொருத்திய மருத்துவமனை இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நேரா மொசாமி (Dr Nader Moazami) கூறுகிறார்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட விலங்கு உறுப்புகள்

உலகம் முழுவதும் மற்ற அறுவை சிகிச்சை நிபுணர்கள் இந்த சோதனையின் வெற்றியை உற்று நோக்குகின்றனர். “இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. இதய செயல்பாடு மோசமாக இருக்கும்போது சிறுநீரக அறுவை சிகிச்சை செய்வது மிகக் கடினம்” என்று மற்றொரு மருத்துவ நிபுணர் டாக்டர் டாட்சியோ கவாய் (Dr Tatsuo Kawai) கூறுகிறார். மாற்று சிறுநீரகத்திற்காக உலகெங்கும் பல மில்லியன்கணக்கான மனிதர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்காவில் மட்டும் 100,0000 பேர் இவ்வாறு காத்திருக்கின்றனர்.

இவர்களில் பலரும் காத்திருப்பு காலத்தில் உறுப்பு தானம் செய்வோர் கிடைக்காமல் உயிரிழக்கின்றனர். தானம் செய்வோரின் பற்றாக்குறையைப் போக்க பல உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்கள் மரபணு ரீதியாக பன்றிகளின் உடல் உறுப்புகளில் மாற்றங்களை செய்கின்றனர். இவற்றின் உறுப்புகள் பெரும்பாலும் மனித உறுப்புகள் போலவே செயல்படுகின்றன என்பதால் நோயாளியின் உடலில் இயல்பாக இருக்கும் எதிர்ப்புசக்தியால் மாற்று உறுப்புகள் அந்நியப் பொருளாக கருதப்பட்டு நிகாகரிக்கப்படும் வாய்ப்பு குறைகிறது.

நியூயார்க் மருத்துவமனை மற்றும் வேறு பல மருத்துவமனைகள் மூளைச்சாவு அடைந்த மனிதர்களின் உடலில் விலங்குகளின் உறுப்புகளைப் பொருத்தி பரிசோதனைகளை நடத்தி வருகின்றனர். இதன் முடிவுகள் நம்பிக்கை அளிக்கக் கூடியதாக உள்ளன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேரிலாந்து பல்கலைக்கழக நிபுணர்கள் பன்றியின் இதயத்தை இரண்டு நோயாளிகளுக்குப் பொருத்தினர். ஆனால் இவர்கள் இருவருமே சிகிச்சை முடிந்து ஒரு சில மாதங்களில் உயிரிழந்தனர்.

டாக்டர் கவாய், ரிச்சர்ட் ரிக்ஸ் லேமேன் (Richard “Rick” Slayman) என்பவருக்கு மார்ச் 2024ல் இதே போன்ற அறுவை சிகிச்சையை செய்தார். அப்போது அவருடைய உடல் புதிய உறுப்பை நிராகரித்தது. ஆனால் பிறகு புதிய உறுப்பை அவருடைய உடல் ஏற்றுக் கொண்டதால் ஏப்ரல் 2024ல் அவர் வீடு திரும்பினார். இப்போது அவர் மருத்துவர் கண்காணிப்பில் நலம் பெற்று வருகிறார்.

லிசாவிற்கு சிகிச்சைக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. அவரது இதயம், சிறுநீரகம் இரண்டும் செயலிழந்தன. இதனால் சோதனை முறையில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

செயற்கையாக சிறுநீரகத்தை செயல்பட வைக்க உதவும் டயாலிஸிஸ் நடந்தது. அப்போது அவரது உடலில் வழக்கமாக மற்றவர்களுக்குப் பொருத்தப்படும் இதய பம்ப் அல்லது இடது வெண்ட்ரிக்குலார் கருவியை (LVAD) பொருத்த முடியவில்லை. இதனால் ஒரு ஜோடி இதய பம்ப் பொருத்தப்பட்டது. பிறகு பன்றியின் சிறுநீரகத்தை அறுவை சிகிச்சை செய்து பொருத்தினர். இதற்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் ஆணையத்தின் (FDA) அவசர அனுமதியும் பெறப்பட்டது.

மனித உயிர் காக்க உதவுமா விலங்குகளின் உறுப்புகள்?

இது போன்ற மாற்று உடல் உறுப்பு அறுவை சிகிச்சையில் அந்நிய உறுப்பு பொருத்தப்படும்போது நோயாளியின் உடலில் ஏற்படும் இயல்பான எதிர்ப்புசக்தியை உண்டாக்கும் ஒரு குறிப்பிட்ட சர்க்கரையை மரபணு ரீதியாக மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் உற்பத்தி செய்வதில்லை என்பதால் பன்றியின் உடலில் இருக்கும் முக்கிய உறுப்புகளில் ஒன்றான தைமஸ் சுரப்பி (thymus gland) அதன் சிறுநீரகத்துடன் சேர்த்து பொருத்தப்பட்டது.  நோயாளியின் உடல் புதிய உறுப்பை ஏற்க இது உதவுகிறது. இந்த சிறுநீரகம் யுனைட்டெட் தெரபூட்டிக்ஸ் கார்ப் (United Therapeutics Corp) என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

ரிச்சர்ட் ரிக்ஸ் மற்றும் லிசா ஆகியோருக்கு செய்யப்பட்ட இந்த சோதனை முயற்சிகளின் வெற்றி புதிய நம்பிக்கை அளிக்கிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அடுத்த ஆண்டு மற்றொரு பன்றி சிறுநீரகத்தை உருவாக்கும் முயற்சியில் யுனைட்டெட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த புதிய முயற்சியின் வெற்றி, தானமாக உறுப்புகள் கிடைக்காமல் மரணமடையும் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களைக் காக்க உதவும் என்று நம்பப்படுகிறது.

மேற்கோள்https://www.theguardian.com/us-news/2024/apr/24/new-jersey-woman-pig-kidney-transplant?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It