பூமியில் இருந்து மிக தொலைவில் உள்ள விண்கலன் வாயேஜர்1 மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. 46 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்பட்ட கலனில் ஏற்பட்ட பிரச்சனையை பூமியில் இருந்து சரிசெய்ய நாசா பொறியாளர்கள் நடத்திய தீவிர முயற்சிகள் இப்போது வெற்றி பெற்றுள்ளன. நாசாவின் ஜெட் உந்துவிசை ஆய்வுக்கூடம் (JPL) இந்த கலனை உருவாக்கி இயக்கி வருகிறது.

சூரிய குடும்பத்திற்கும் அப்பால்

15 பில்லியன் மைல்கள் அல்லது 24 பில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் விண்வெளியில் பயணிக்கும் வாயேஜர்1 முதலில் டிசம்பர் 2023ல் பயனில்லாத தகவல்கள் அடங்கிய சமிஞ்ஞைகளை நாசாவிற்கு அனுப்பியது. கலனின் ஆரோக்கியம் மற்றும் அதன் பொறியியல் செயல்பாடுகள் பற்றிய பயனுள்ள விவரங்களை அறிய நாசா ஆய்வாளர்கள் புதிய வழிகளைக் கண்டுபிடித்தனர். கலனில் இருந்து அறிவியல் தரவுகளை மீண்டும் பெறும் தீவிர முயற்சியில் ஆய்வுக் குழுவினர் ஈடுபட்டனர்.voyager1கோளாறு ஏற்பட்டிருந்தாலும் இந்த கலன் விண்வெளிக்கு அனுப்பப்பட்டதில் இருந்து இயல்பாக இயங்குகிறது. 1977ல் இது வியாழன் மற்றும் சனி கோள்களை அருகில் சென்று ஆராயும் ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. என்றாலும் ஐம்பதாண்டுகள் கடந்த பிறகும் இதன் பயணம் தொடர்கிறது. ஆகஸ்ட் 2012ல் வாயேஜர்1 விண்வெளியில் ஒரு நட்சத்திரத் திரளில் உள்ள இரு நட்சத்திரங்களுக்கு இடையில் இருக்கும் இடத்திற்குள் (interstellar space) நுழைந்தது.

சூரிய குடும்பத்திற்கும் அப்பால் பயணிக்கும் மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் ஆய்வுக்கலன் இதுவே. இப்போது இந்த கலன் மணிக்கு 37,000 மைல் அல்லது மணிக்கு 60,821 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்கிறது.

பழுது சரி செய்யப்பட்ட பின் இது “Hi, it's me. - V1” என்ற செய்தியை விஞ்ஞானிகளுக்கு அனுப்பியது. கலனில் இருக்கும் மூன்று கணினிகளில் அறிவியல் மற்றும் பொறியியல் தொடர்பான தரவுகளை பூமிக்கு அனுப்பும் முன்பு தொகுப்பதில் ஏற்பட்ட பிரச்சனையே கோளாறுக்குக் காரணம்.

பயனில்லாத விவரங்களை அனுப்பிய, உடைந்த ஒரு சிப் (chip)-ஐ நீக்க முடியாமல் போன போது ஆய்வாளர்கள் குழு அதனை வேறு இடத்திற்கு மாற்றியது. பழைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதை சரிசெய்வது கடினமாக இருந்தது. வாயேஜர்1 மற்றும் அதன் சகோதரி கலன் வாயேஜர்2 ஆகியவற்றில் இருக்கும் கணினிகள் 70 கிலோபைட்டுகளுக்கும் குறைவான நினைவாற்றலை மட்டுமே கொண்டவை.

இது கணினி வெளியீட்டுக் கருவிகள் பழைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கும் படங்களின் நினைவாற்றலுக்கு சமமானது. தரவுகளைப் பதிவு செய்ய பழைய டிஜிட்டல் நாடாக்களையே இவை பயன்படுத்துகின்றன.

மகத்தான கண்டுபிடிப்புகள்

சமீபத்தில் (ஏப்ரல் 18 2024 அன்று) கலனில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பான விவரங்கள் கலனுக்கு அனுப்பப்பட்டது. பூமியில் இருந்து ஒரு ரேடியோ சமிஞ்ஞை வாயேஜருக்கு சென்றடைய 22.5 மணி நேரமாகிறது. வாயேஜரில் இருந்து வரும் செய்தி பூமியை வந்து அடைய இதே அளவு நேரம் எடுத்துக் கொள்கிறது. ஏப்ரல் 20, 2024 அன்று கலனில் இருந்து தகவல்கள் வர ஆரம்பித்தது. இதன் மூலம் தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெற்றது என்பதை ஆய்வுக்குழுவினர் உணர்ந்தனர்.

வாயேஜர்1 திட்டத்தின் இந்த வெற்றி பழங்கால கார் ஒன்றில் தொலைதூரத்தில் இருந்து மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிக்கு ஒப்பானது. 1977ல் தயாரிக்கப்பட்ட காரில் உள்ள ஒரு சிப் செயல்படாமல் போகிறது. அந்த கார் இப்போது விண்வெளியில் ஒரு நட்சத்திர திரளில் இருக்கும் இரண்டு நட்சத்திரங்களுக்கு இடையில் உள்ள இடத்தில் 15 பில்லியன் மைல் தூரத்தில் சென்று கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொண்டால், அந்த சூழ்நிலையில் பழுதை சரிசெய்து பயணத்தை தொடரச் செய்வது நாசா மென் பொருள் பொறியாளர்களின் மகத்தான சாதனை என்று விண்வெளிக்கு இரண்டு ஆய்வுக்கலன்களுடன் சென்றவரும், முன்னாள் கனடா விண்வெளியியலாளரும் பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் முன்னாள் கமாண்டருமான க்றிஸ் ஹேட்ஃபீல்டு (Chris Hadfield) கூறுகிறார்.

வாயேஜர்1 மற்றும் 2 கலன்கள் சனிக் கோள் பற்றிய விரிவான பதிவுகள், வியாழன் கோளிற்கும் வளையங்கள் உள்ளன, அதன் பல நிலவுகளில் ஒன்றான இயோவில் (Io) செயல் திறனுள்ள எரிமலை செயல்பாடுகள் மற்றும் வெளிப்புற விண்வெளி மண்டலத்தில் இருக்கும் கோள்களில் 23 புதிய நிலவுகளைக் கண்டுபிடித்தது போன்ற பெரும் பயனுள்ள அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியது.

வாயேஜர்1 மற்றும் 2 ஆகிய கலன்களின் பாதை சூரியனிடம் இருந்து வெகுதொலைவுக்கு விலகிச் சென்று விட்டதால் இவற்றால் சூரிய மின் பலகைகளைப் பயன்படுத்தி இயங்கத் தேவையான ஆற்றலைப் பெற முடியாது. இதற்குப் பதில் இவை சிதையும் தன்மையுடைய புளூட்டோனியத்தின் இயற்கை ரேடியோ கதிரியக்கத்தில் இருந்து கிடைக்கும் வெப்பத்தைக் கொண்டு மின்னாற்றலைத் தயாரித்து அதன் மூலம் இயங்குகின்றன.

நாற்பதாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு

இவை தரவுகளை சேகரித்து பூமிக்கு அனுப்பும் பணிகள் சுமார் பத்தாண்டு காலம் தொடரும் என்று நாசா நம்புகிறது. உற்பத்தி செய்யப்படும் ஆற்றலின் அளவைப் பொறுத்து இன்னும் பத்தாண்டில் இவற்றுடன் தொடர்பு கொள்ள முடியாத தொலைதூரத்திற்கு இவை சென்றுவிடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சிறிது மெதுவாக செல்லும் வாயேஜர்2, வாயேஜர்1 கலனுக்குப் பின்னால் பயணிக்கிறது.

சுமார் 40,000 ஆண்டுகளில் இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று அருகில் செல்லும். வானியல்ரீதியாக வாயேஜர்1 எர்சா மைனொர் (Ursa Minor) என்ற விண்மீன் கூட்டத்தில் உள்ள ஒரு நட்சத்திரத்திற்கு 1.7 ஒளி ஆண்டுகள் தொலைவில் பயணிக்க ஆரம்பிக்கும். வாயேஜர்2 இதற்கு சமமான தொலைவில் இருக்கும் ஆண்ட்ரோமீட்டா (Andromeda) என்ற நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கும் ராஸ் ராஸ் 248 (Ross 248) என்ற நட்சத்திரத்திற்கு அருகில் செல்லும் என்று நம்பப்படுகிறது.

நம்மை விட்டு வெகுதூரத்திற்குச் சென்றாலும் மனித குலத்திற்கு இவை ஆற்றிய அரும் பணிகள் என்றும் நினைவுகூரத் தக்கது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/science/2024/apr/23/voyager-1-transmitting-data-again-after-nasa-remotely-fixes-46-year-old-probe?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It