காலம் காலமாக ஆண்களை முதன்மையாகவும், பெண்களை அதற்கு அடுத்த நிலையிலும் வைத்தே பழக்கப்பட்ட இந்த சமூகத்தில், ஒரு பெண் வலிமை மிக்கவளாக, ஆணைவிட அறிவுக் கூர்மை கொண்டவளாக, ஆண்களை வழி நடத்துபவளாக, ஒரு சமூகத்தின் போராளியாக எழுந்தால் அதை ஆணாதிக்க சமூகம் ஏற்றுக் கொள்ளாது. ஒரு பெண் ஆண்களை வழி நடத்துவது ஆண்களுக்கு இழுக்கென்ற வஞ்சம் கொண்டு, தன் இனத்திற்காக போர்க்களம் சென்ற இளம் பெண் போராளியை அவ்வினத்தை சார்ந்தவர்களே எதிரிக்கு காட்டிக் கொடுத்தனர். அந்த துரோகிகளால் 1431-ம் ஆண்டு மே 30-ம் நாள் எரித்து கொல்லப்பட்டவர்தான் 19 வயதே நிரம்பிய ஜோன் ஆஃப் ஆர்க்.

பிரான்ஸ் நாட்டில் உள்ள ’டாம்ரோமி’ என்ற இடத்தில் கி.பி 1412-ம் ஆண்டு ஜனவரி 6-ம் நாள் தந்தை ஜாக்குஸ் டி ஆர்க், தாய் இசபெல்லா ஆகியோருக்கு மூன்றாவது குழந்தையாக பிறந்தார் ஜோன் ஆஃப் ஆர்க். இளம் வயதிலேயே தந்தையுடன் விவசாயத்தை மேற்கொள்வதும், கால்நடைகளை பராமரிப்பதும் தனது அன்றாட பணியாக மேற்கொண்டார். தனது தாயிடமிருந்து இறை நம்பிக்கை பெற்ற அவர் தனது தாய்மண்ணை மிகவும் நேசித்தார்.joan of arcஅப்போது பிரான்சில் உள்ள ’ஓர்லியன்ஸ்’ என்னும் பகுதியை இங்கிலாந்து அரசு கைப்பற்றி இருந்தது. இங்கிலாந்து அரசை எதிர்த்து தன் நிலங்களை மீட்க பிரான்ஸ் அரசு கிட்டத்தட்ட 116 வருடங்களுக்கு மேலாக போர் நடத்தியது. ஆயினும், தோல்வியையே எதிர்கொண்டது. தனது நிலத்தை மீட்க முடியாமல் பின்வாங்கியது.

இந்த வரலாறை நன்கு கேட்டறிந்து வளர்ந்தவர் ஜோன் ஆஃப் ஆர்க். இது ஆழமாக அவரின் மனதில் பதிந்தது. தனது நாட்டின் நிலத்தை மீட்க வேண்டும் என்கிற எண்ணத்தில், தான் போருக்கு செல்ல விரும்புவதாகவும், தன்னை பிரான்ஸ் மன்னன் சார்லஸிடம் அழைத்துச் செல்லும்படியும் கேட்டுக்கொண்டார்.

போருக்காகவே தன்னை இறைவன் படைத்தான் எனக் கூறிய இவரை இறுதியில் மன்னரிடம் அழைத்து செல்கின்றனர். அப்போது 17 வயதான ஜோன் ஆஃப் ஆர்க்-கை பார்த்து மன்னனும், அவையில் உள்ள மற்றவரும் ஜோன் சொல்வதை நம்ப மறுத்தனர். சிறுபிள்ளை விளையாட்டுத்தனமாக பேசுவதாக எள்ளி நகையாடினர். இதனைக் கண்ட ஜோன் சற்றும் சலனமின்றி, போருக்காகவே இறைதூதன் தன்னைப் படைத்ததாக சொன்னதைக் கேட்டு மன்னனும் மனம் மாறினார். ஜோன் கேட்கும் அனைத்து குதிரைகளும், வீரர்களும் உடன் அனுப்பப்படுகின்றனர். போரில் அவரது வாள் வீச்சையும், தலைமைப் பண்பின் திறமையையும் கண்டு மக்கள் வியக்கின்றனர். 17 வயதில் இப்படி வியக்கத்தக்க போர்வீரமா! எங்கே கற்றாள் இதனை என்று அனைவரும் அதிசயிக்கின்றனர்.

ஜோன் முன்னெடுத்த அனைத்து போர்களிலுமே வெற்றி வாகை சூடினார். 116 ஆண்டுகளாக இழந்து நின்ற ’ஓர்லியன்ஸ்’ நகரத்தை மீண்டும் தமது நாட்டின் வசம் கொண்டு வந்தார். ஏழாம் சார்லஸ் பிரான்ஸ் அரசனாக முடி சூட்டிக்கொண்டான். அந்த நாடே ஜோனைக் கொண்டாடி, அவரைக் கடவுள் அனுப்பிய குழந்தை எனப் போற்றியது. ஆனால் ஆணாதிக்கவாதிகள் பலரின் கண்ணை அவருக்கு கிடைத்த பேறும், புகழும் உறுத்தியது.

ஒரு பெண்ணுக்கு இவ்வளவு வலிமை இருக்கலாமா? அதுவும் அவள் ஆண்களை வழி நடத்துவதா? அவமானம் ஆயிற்றே எனக் குமுறினர். அதுமட்டுமின்றி அவருக்கு பெருமையும் புகழும் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர்.

ஆனால் தாய்நாட்டினை உயிராக நேசித்த இந்த இளம்பெண் போர்க்களத்தில் எதிரிகளிடம் வாள் சுழற்றிக் கொண்டு இருந்தார். கடைசியில் போர் முனையில் தன் இனத்தவராலேயே காட்டிக் கொடுக்கப்பட்டு பர்கண்டியர்களால் பிடிக்கப்பட்டார். அதன் பின்னர் பிரான்சின் எதிரியாகிய ஆங்கிலேயரிடம் விற்கப்பட்டார். உரோவன் என்கிற சிறையில் அடைக்கப்பட்டார்.

போரில் கைதான ஜோன் ஆஃப் ஆர்க்கை, போர்க்குற்றவாளி என முன்வைக்காமல், கிறித்துவ மதத்திற்கு எதிரானவர் என்று குற்றம் சுமத்தினர், மேலும் சூனியக்காரி என்றனர். ஆண் உடை தரித்து சண்டையிட்டார் என்பதையும் வாதமாக வைத்தனர். இவற்றையெல்லாம் குற்றங்களாகக் கொண்டு அவரது வழக்கை, இறையியல் நீதிமன்றத்தில் விசாரித்தனர். பிப்ரவரி 21 முதல் மார்ச் 24 வரை, குறைந்தப் பட்சம் 12 முறையாவது, ஜோனை குறுக்கு விசாரணை செய்தனர்.

முதலில் ஜோனின் வழக்கை பொது மக்கள் முன்னிலையில் விசாரித்தனர். ஆனால் ஜோன் அளித்த அறிவார்ந்த பதில்களைக் கண்ட பின்னர், ரகசிய விசாரணைகள் நடந்தது. ஜோனைப் போல் ஆங்கிலேயர்களை எதிர்ப்பவர்களுக்கு அவரது தண்டனை பாடமாக இருக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் எண்ணினர். அவர்கள் பேயுவைஸின் ஆயர் பியேர் கெளசின் துணையோடு இவரை சூனியக்காரி என்றும் இறை நம்பிக்கைக்கு எதிரானவர் என்றும் குற்றம் சாட்டி இந்த 19 வயதே நிரம்பிய இளம் பெண் போராளியை கழுமரத்தில் கட்டி வைத்து உயிருடன் தீயிட்டு எரித்தனர். இவரைப் போல் ஆங்கிலேயர்களை எதிர்ப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காக 10,000 பொதுமக்கள் முன்னிலையில் அவரது தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அப்போதும் இவர் நாட்டுக்காக போராடியதால் தண்டனை என்று சொல்லவில்லை. அப்படி சொல்லி இருந்தால் ஒரு வேளை இவருக்கு சிறிது ஆதரவு கிடைத்திருக்கலாம். ஆனால் இல்லாத பழியை அதாவது இறை நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டார் என்றே குற்றம் சுமத்தி, ஒரு போராளியை சூனியக்காரி என்று பெயரிட்டு, மே 30, 1431-ம் ஆண்டு உயிருடன் எரித்துக் கொன்றார்கள்.

ஜோன் ஆஃப் ஆர்க் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த ஒரு சாதாரண பெண். எந்த பயிற்சியோ, வகுப்புகளோ சென்று போர்க்களத்திற்குத் தன்னை தயார்படுத்திக் கொள்ளவில்லை. இயற்கையாகவே தன் சொந்த மண்ணையும், மக்களையும் நேசித்ததை தவிர வேறு என்ன குற்றம் செய்தார் இந்த ஏழைப் பெண்? போராளியாக பொதுவெளிக்கு வராமல் இருந்திருந்தாலும் ஒரு நாள் இறந்துதான் போயிருப்பார். ஆனால் நாட்டுக்காக தன் இன்னுயிரை கொடுத்ததால் வரலாற்றில் மறக்க இயலாத பெண் மாவீரராக மாறி இருக்கிறார்.

இவரைக் கொன்ற 25 ஆண்டுகளுக்குப் பிறகு கத்தோலிக்க திருத்தந்தை மூன்றாம் கலிஸ்டஸினால் இவரின் வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு, இவர் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டது. 16-ம் நூற்றாண்டில், ஜோன் ஆஃப் ஆர்க் பிரான்சு கத்தோலிக்க மதத்தின் சின்னமாக கருதப்பட்டார். பின்னர் 1803-ம் ஆண்டில் ஜோனின் வீரத்துக்காகவும், நாட்டுப்பற்றுக்காகவும் அவர் பிரான்சு நாட்டின் புனிதராக அறிவிக்கப்பட்டார்.

ஆணாதிக்கமும், மதவெறியும் தலைதூக்கியிருந்த அன்றைய காலகட்டத்தில் தனது தாய்நிலம் மீட்கப்பட வேண்டும் என்கிற போராட்ட குணத்துடன் போராடிய துணிச்சல் மிகுந்த ஜோன் ஆஃப் ஆர்க் போலவே, தங்களின் தமிழீழத் தாய்நிலத்திற்காகப் போராடிய ஆயிரக்கணக்கான ஜோன் ஆஃப் ஆர்க்குகள் நம் தமிழினத்திலும் இருந்தார்கள்.

இலங்கையில் சிங்களப் படையினர், விடுதலைப்புலிகளின் வீரத்தின் முன் நிற்க முடியாமல் கோழைகளாக பதுங்கியது. தமிழீழத்தின் வீர மங்கைகளை வீழ்த்த சிங்கள இனவெறி அரசு உலகத்தின் வர்த்தக வெறி பிடித்த ஆணாதிக்க நாடுகளின் ஆயுதங்களை வாங்கிக் குவித்தது. இறுதிப்போர்க் காலங்களில் கைது செய்யப்பட்ட போர்க் கைதிகளான பெண்களை கொடூரமான பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி தங்களின் கோழைத்தனத்திற்கு பழி தீர்த்துக் கொண்டதாக மகிழ்ந்தது. ஆனால் வரலாற்றின் பின்னாட்களில் ஜோன் ஆஃப் ஆர்க்குகள் கவுரவிக்கப்படுவார்கள். இனவெறியும் ஆணாதிக்கமும் கொண்டவர்கள் தலைகுனிவார்கள். ஜோன் ஆஃப் ஆர்க்குகள் வரலாற்றில் வாழ்வார்கள்.

- மே பதினேழு இயக்கம்

Pin It