எம்.ஜி.ஆர். வழியில் விஜய்காந்த்

எம்.ஜி.ஆர். பாணியிலான படங்களில் நடிப்பதன் மூலம் மக்களிடம் செல்வாக்கை வளர்த்து, ஆட்சியைப் பிடிக்கத் திட்டமிட்டிருக்கிறார் விஜயகாந்த்.
காமராஜர், எம்.ஜி.ஆர் வழியில் மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியலில் இறங்குகிறேன் என்று கூறிய விஜயகாந்த், கடந்த செப்டம்பரில் மதுரையில் பிரம்மாண்டமான மாநாடு நடத்தி தனது கட்சிக்கு 'தேசிய முற்போக்கு திராவிட கழகம்' என்று பெயர் சூட்டினார்.
தற்போது மாவட்ட நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் விஜயகாந்த், தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் சுற்றுப்பிரயாணம் செய்யவிருக்கிறார்.
அதே நேரத்தில் படங்களில் நல்லது செய்யும் கதாநாயகனாக நடித்து மக்களிடம் எம்.ஜி.ஆர். தனது செல்வாக்கை வளர்த்ததுபோல, விஜயகாந்தும் தனது செல்வாக்கை வளர்க்கத் திட்டமிட்டிருக்கிறார். தற்போது தான் நடிக்கும் 'சுதேசி', 'பேரரசு' ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். பாணியிலான காட்சிகளை அதிகம் சேர்க்குமாறு இயக்குநர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
ஆட்சியைப் பிடிக்கும்வரை சினிமாவில் நடிக்கத் திட்டமிட்டிருக்கும் விஜயகாந்த், சூட்டிங்கிற்கு இடைப்பட்ட நேரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பிரயாணம் செய்யவிருக்கிறார். இதுவும் எம்.ஜி.ஆர். பாணியில்தான் இருக்குமாம்.
காரில் சென்று கொண்டிருக்கும்போது வயலில் வேலை செய்துகொண்டிருப்பவர்களைப் பார்த்தால் வண்டியை நிறுத்தி, அவர்களிடம் பேசுவது, குடிசைகளுக்குச் சென்று சாப்பிடுவது, மேடையில் மூதாட்டிகளைக் கட்டிப் பிடிப்பது போன்ற காட்சிகளுடன் விஜயகாந்தின் போட்டோக்களை இனி பத்திரிகைகளில் பார்க்கலாம்.
அத்தகைய சுற்றுப்பிரயாணம் ஒன்று இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. 234 தொகுதிகளுக்கும் செல்கிறார். ஒவ்வொரு தொகுதியிலும் தலா ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். ஒவ்வொரு ஊரிலும் கட்சிக் கொடியேற்றுகிறார். மக்களிடம் கட்சியின் கொள்கைகளை விளக்கிப் பேசுகிறார் என்று கட்சியின் முன்னணி ரசிகர், மன்னிக்கவும் தொண்டர் ஒருவர் கூறினார்.
சுற்றுப்பிரயாணத்தில் அப்படியே கட்சியின் பெயரில் இருக்கும் 'தேசியம்', 'திராவிடம்' இரண்டுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிக் கூறினால் ரொம்பப் புண்ணியமா இருக்கும்.
|