நடிகைகள் முன்மாதிரியா இருக்கணும்: ரேணுகா
சினிமாவில் இருக்கும் நடிகைகள் எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்கிறார் ‘பிப்ரவரி 14’, ‘தாஸ்’ படங்களின் நாயகி ரேணுகா.
‘கலாபக் காதலன்’ படத்திற்காக ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்திருக்கும் ரேணுகா, தனது சினிமா வாழ்க்கை பற்றிக் கூறியதாவது:
கதை கேட்டு அது பிடித்திருந்தால் மட்டுமே நடிக்கிறேன். ஆனால் அந்தப் படத்தை ஓட வைப்பது ரசிகர்களின் கையில்தான் இருக்கிறது.

கலாபக் காதலன் படத்தில் மென்மையான ஒரு கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறேன். படத்தில் ஆர்யாவுக்கு அகிலன் என்று பெயர். எனக்கு அன்புக்கரசி என்ற பெயர். படத்தில் ஆர்யாவுக்கு காதலியாக இல்லாமல், மனைவியாக நடிக்கிறேன். எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரியான கேரக்டர்.
அண்மையில் ‘நியூஸ்' என்ற கன்னட படத்திற்காக ஹாங்காங் போயிருந்தேன். நான் நடித்த காட்சிகள் முடிந்து, ஊருக்குத் திரும்பற நேரம் என்னோட பாஸ்போர்ட் தொலைந்து விட்டது. என்னுடன் வந்த உபேந்திரா, ரீமாசென் எல்லாம் 400 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்தார்கள்.
அப்ப சனி, ஞாயிறு லீவு வேற! போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் கம்ப்ளைன்ட் கொடுத்து ரொம்பவும் கஷ்டப்பட்டு வந்து சேர்ந்தேன். என்னைக்கும் மறக்கமுடியாத விஷயம் இது.
வில்லியாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அந்த வில்லத்தனம் க்ளைமேக்ஸில்தான் தெரிய வேண்டும்.
சினிமா என்பது மாஸ் மீடியா. அதனால சினிமாவிலிருக்கும் நடிகைகள் மற்றவர்களுக்கு முன்மாதிரியா இருக்க வேண்டும். யாராவது ஒருவர் சின்ன தப்பு செய்தால்கூட அது மற்ற நடிகைகளையும் பாதிக்கும். அதனால் கொஞ்சம் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்கிறார் ரேணுகா.
குஷ்பு இதைக் கொஞ்சம் கவனித்தால் தேவலை.
|