சூர்யாவுக்கு ஹரி சர்டிபிகேட்
சூர்யாவை வைத்து ஆறு படத்தை இயக்கி வரும் இயக்குநர் ஹரி, ரொம்ப டெடிகேட்டான நடிகர் என்று சூர்யாவுக்கு சர்டிபிகேட் தருகிறார்.
‘சாமி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஹரி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அடுத்து வந்த ‘கோவில்’, ‘அருள்’ படங்கள் தோல்வியைத் தழுவின. பின்னர் வெளிவந்த ‘ஐயா’ படம் ஓரளவு ஓடி பெயரைக் காப்பாற்றியது. இப்போது தனது குருநாதர் சரண் தயாரிப்பில் சூர்யா, த்ரிஷாவை வைத்து ‘ஆறு’ படத்தை இயக்கி வருகிறார்.
“ஆறு பட டைட்டிலே சரண் பதிவு செஞ்சு வச்சதுதான். என்னோட கதைக்கு அந்த டைட்டில் பொருத்தமாக இருந்ததால் அதை நான் எடுத்துக்கிட்டேன். சரண் ஸார் எனக்கு குரு மட்டுமில்லை, நல்ல சகோதரர். அதனால் நூறு சதவிகிதம் இது என்னோட சொந்தப் படம் மாதிரி.

சரண் அவரோட படத்தில் பிஸியா இருக்கிறதுனால இங்க ஸ்பாட்டுக்கே வரமாட்டார். அவர் வராம இருக்கறதால், எனக்கு இன்னும் கொஞ்சம் பயம் வந்து, பொறுப்பு கூடிவிட்டது.
சூர்யா ரொம்பவும் ஈடுபாட்டுடன் நடிக்கிறார். வேலையைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாதவர். படிப்படியாக அவர் உயர்ந்துகிட்டே வருகிறார். ஒவ்வொரு படத்திலேயேயும் இம்ப்ரூவ்மென்ட் காட்றார். என்னோட ‘ஆறு' படம் அவரோட வளர்ச்சிக்கு உதவுற இன்னொரு படமா அமையும். படத்தில் மெட்ராஸ் பாஷையில பொளந்து கட்டுறாரு.
‘சாமி' படத்துக்குப் பிறகு த்ரிஷா என்னோட படத்தில் நடிக்கிறாங்க. என்னோட படத்தில் கதாநாயகி மாடர்ன் கேர்ளாக இருப்பது இந்தப் படத்தில்தான்.
படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் என்னுடைய நெருங்கிய நண்பர். எல்லா பாட்டும் அபாரமா வந்திருக்கு. தான் போன போக்கில் போகும் காட்டாறு ஒரு அணைக்குக் கட்டுப்பட்டு, தேங்கிக் கிடக்கிறதும், ஆறாக நடப்பதும்தான் கதை
இன்னும் ரெண்டு பாட்டு, ரெண்டு பைட் எடுத்தால் படப்பிடிப்பு முடிந்துவிடும். படத்தில் வடிவேலுவோட காமெடி நல்லா வந்திருக்கு. கலாபவன் மணி, ஆஷிஷ் வித்யார்த்தி, ராஜ்கபூர், நிழல்கள் ரவி, ஐஸ்வர்யா, டெல்லி கணேஷ், கிரேன் மனோகர், பாலாசிங், "அன்பாலயா' பிரபாகரன்னு நிறைய பேரு நடிக்கிறாங்க.
சென்னை, தலைக்கோணம், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் ஷூட்டிங் நடத்தியிருக்கிறோம். அடுத்து ஒரு பாட்டுக்காக ஜோர்டான் போறோம். நிச்சயமாக ஆறு ஜெயிக்கும் என்கிறார் ஹரி.
|