 |
யாழன் ஆதி கவிதை
(ஆந்திராவின் கம்மம் மாவட்டத்தில் 28.7.2007 அன்று நிலவுரிமை கேட்டுப் போராடிய மக்களை சுட்டுக் கொன்ற அரசைக் கண்டித்து, புதுதில்லியில் உள்ள ஆந்திர பவன் முன்பு 30.7.2007 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம்)
மவுனத்தின் பாறைகள் வெடித்து
கிளம்புகின்றது
கோப எரிமலைக் குழம்பு
அநீதிசக்கர ஆரக்கால்கள்
செங்கோல்களாய் நிமிர்கையில்
புறப்படுகின்றன
எதிர்ப்புக் கணைகள்
உக்கிரத்தின் உச்சியில் நின்று
உயிர்களை பலிவாங்கும்
ஜனநாயக வன்முறைகளின்
தலைகளை நசுக்கும்
தைரியங்கள் முளைக்கின்றன
மக்கள் கைகளில்
நீண்ட தடிகளும்
கனத்த காலணிகளும்
குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கிகளும்
அரசின் காவல்களாகின்றன
மக்களும் வாழ்வும்
அவர்களின் உரிமைகளும்
அரசின் எதிரிகளாகின்றன
அடர்ந்து சூழ்ந்த இருளை
கவ்வி துப்புகிறது பூமி
தேவைகளின் கோரிக்கைகளை
சுட்டு வீழ்த்துகையில்
கைகளில் இருப்பதென்ன
கால்களில் இருப்பதும் ஆயுதமாகும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|