தேவை பிரதிநிதித்துவம் கிரீமிலேயர் அல்ல
அசோக் யாதவ்

தென்னாப்பிரிக்கக் கருப்பர்களாலும், தென்னாப்பிரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சியாலும் நடத்தப்பட்ட நிறவெறிக்கு எதிரான இயக்கங்களுக்கு சி.பி.எம். கட்சி ஆதரவு அளித்தது. சூத்திரர்களும், ஆதி சூத்திரர்களும் சந்திக்கும் சாதியப் பாகுபாடுகள், ஒடுக்குமுறைகள் ஆகியவற்றிற்கு எதிரான வன்மையான போராட்ட வரலாறை கட்சி இதுவரையிலும் எழுதவில்லை. சமூக ஏகாதிபத்தியத்தை உடைக்காமல் இந்திய மக்கள், முதலாளிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் ஓர் அங்குலம் கூட நகர முடியாது. ஏனெனில் இந்த அரண் செய்யப்பட்ட சமூக ஏகாதிபத்தியக் குழுக்களே - முதலாளிய ஏகாதிபத்தியத்தைப் பாதுகாப்பனவாக இருக்கின்றன. மிகப்பெரிய உயிர்த் தியாகியான பகத் சிங் தனது தீண்டாமைப் பிரச்சனை என்ற கட்டுரையில், “முதலில் சமூகப் புரட்சியைக் கொண்டு வாருங்கள். அதற்குப் பிறகு அரசியல் மற்றும் பொருளாதாரப் புரட்சிகளுக்குத் தயார் ஆகுங்கள்'' என்று எழுதினார்.
சி.பி.எம். கட்சி ஒரு புறம், “தலித்துகள், பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கல்வியும் வேலைவாய்ப்பும் பெற வாய்ப்புகள் வழங்கும் ஒரு சிறிய நடவடிக்கை''யாக இடஒதுக்கீட்டைப் பார்க்கிறது. மறுபுறத்தில் “இடஒதுக்கீடு இச்சமூகங்களில் உள்ள ஏழ்மையும் தேவையும் கூடிய பகுதிகளுக்கும் பயனளிப்பதாக இருக்க வேண்டும்'' என்றும் சொல்கிறது. தீவிரமான பொருளாதார மாற்றங்களின் மூலமே சாத்தியமாகக் கூடியதான, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பிலுள்ள ஏழ்மையும் தேவையும் கூடிய பகுதிகளுக்குப் பயன்கள் சேர்வதை இடஒதுக்கீட்டின் மூலமே சாதித்து விட வேண்டும் என அக்கட்சி விரும்புகிறது.
ஒரு நிலமற்றவரின் அல்லது ஒரு ஏழையின் அல்லது மிகவும் பின்தங்கியுள்ள ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரின் மகன் ஓர் எழுத்தர் ஆகலாம்; அல்லது ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியராகவோ, நடுநிலைப்பள்ளி ஆசிரியராகவோ ஆகலாம். அல்லது ஒரு பட்டயப் படிப்பு படித்தவனாகவோ ஆகலாம். இதுதான் சாத்தியமானது. அய்.அய்.டி. கள் அய்.அய்.எம்.கள், ஏய்.அய்.எம்.எஸ். போன்றவற்றில் தேர்வு பெற்று, இத்தகைய சிறப்பு கல்வி நிறுவனங்களில் தேர்ச்சி பெற்றோருக்கான வேலைவாய்ப்பைப் பெறுவது என்பது, அவனுக்கு மிகமிகக் கடினமான ஒன்றாகவே இருக்கும். மண்டலின் முதலாவது பருவத்திற்குப் பிறகு கல்வியின் தீவிரமான வணிகமயமாக்கல் - வசதியான பெற்றோரின் மகன்களும், மகள்களும் மட்டுமே அவ்வாறான கல்வியையும், அந்நிறுவனங்களின் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவதற்குத் தேவையான பயிற்சியையும் பெற முடியும் என்கிற நிலையை உறுதியாக்கி இருக்கிறது.
பிற பிற்படுத்தப்பட்டவர்களின் நிலையில் இருந்து பார்க்கும் போது, சிறப்புக் கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மக்கள் இருப்பதென்பது - அவசரமானதும், அவசியமானதுமான ஒரு தேவையாக இருக்கிறது. வசதியான பிற பிற்படுத்தப்பட்டோரை கல்வி இடஒதுக்கீட்டிலிருந்து தடை செய்யும் நடவடிக்கை, கல்வியை வணிகமயமாக்கப்படாமல் இருந்திருந்தாலாவது குறைந்த காலத்திற்கு எனினும் பொருள் உடையதாக இருந்திருக்கும்.
பொருளாதார அளவுகோல், கிரீமிலேயர் கருதுகோள் என்பவை - பெரும்பான்மையான நேரங்களில் போட்டியிடும் இரு கட்சிகளுக்கு இடையில் (இங்கு முற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகள்) ஆன ஒரு சமரசக் கொள்கையாகவே ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டுத் திட்டத்தில் கிரீமிலேயர் மற்றும் பொருளாதார அளவுகோல் ஆகியவற்றை நியாயப்படுத்தும் வகையில் பிரகாஷ் காரத் இவ்வாறு எழுதுகிறார் : “பிரச்சனை என்னவென்றால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு, எங்கெல்லாம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறதோ, அங்கெல்லாம் பொருளாதார அளவுகோலை அறிமுகப்படுத்தும் நடவடிக்கை கடும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஒரு விரிவான உடன்பாடு எட்டப்பட்ட பிறகே அதை நடைமுறைப்படுத்த முடியும். இவ்வாறான உடன்படிக்கை எதுவும் இல்லை என்பதால், கேரளாவில் இதுவரையிலும் அது நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கிறது.
“பீகாரைப் பொறுத்த மட்டில், 1978இல் பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட போது, ஒரு கடுமையான இடஒதுக்கீடு, எதிர்ப்புப் போராட்டத்தின் பின்னர், ஒரு மாதிரி திட்டத்தை வகுப்பது சாத்தியமானது. அந்த மாதிரி திட்டமே இன்றளவும் நடைமுறையில் இருக்கிறது. 26 சதவிகித இடஒதக்கீடு என்பது பின்னிணைப்பு 1இல் பட்டியலிடப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கான 12 சதவிகிதம், பின்னிணைப்பு 2இல் பட்டியலிடப்பட்ட ஆண்டிலிருந்து 12,000 ரூபாய் வரை வருமான வரம்புள்ள பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 8 சதவிகிதம், பெண்களுக்கான 3 சதவிகிதம், முற்பட்ட வகுப்பிலுள்ள ஏழைகளுக்கான 3 கதவிகிதம் ஆகியவற்றை உள்ளடக்கியது. சாதியப் பதற்ற சூழ்நிலையில் சிறிய அளவில் இயல்பு நிலையைக் கொண்டு வந்த பீகார் அனுபவத்தை மத்தியிலுள்ள தேசிய முன்னணி அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு, பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 5 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை கூடுதலாக இடஒதுக்கீடு வழங்க உத்தேசித்ததுள்ள பிரதமரின் திட்டம், ஏற்கனவே இடஒதுக்கீடு பெறும் குழுக்களுள் அடங்காதவர்களுக்கு ஒதுக்கப்படுமென்றால் மட்டும் இது ஏற்றுக் கொள்ளப்படலாம். முற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ள பொருளாதார ரீதியில் நலிவுற்றவர்களின் அச்சத்தைத் தணிக்க இது உதவி செய்வதாக இருக்கும்'' (மேலது)
“சாதியப் பதற்றச் சூழ்நிலையில் சிறிய அளவில் இயல்பு நிலையைக் கொண்டு வந்த பீகார் அனுபவத்தைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்'' என்று 1990இல் இந்திய அரசுக்குப் பரிந்துரைத்தது. சாதியப் பதற்றச் சூழ்நிலையில் சிறிய அளவில் இயல்பு நிலை என்று சி.பி.எம். கட்சி எதைச் சொல்ல வருகிறது? சாதியச் சூழ்நிலை பீகாரில் முன்னர் எப்போது இருந்ததை விடவும் பதற்றமானதாக இப்போதுதான் இருக்கிறது. இந்திய அரசு சி.பி.எம்.இன் திட்டத்துக்குச் சம்மதிக்கவில்லை என்ற போதும், அத்திட்டம் பொருளாதார அளவுகோலுக்குச் சாதகமான சூழலை நிச்சயமாக உருவாக்கவே செய்தது. இறுதியில், கிரீமிலேயர் கொள்கை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நடைமுறைப் படுத்தப் பட்டது. முற்படுத்தப்பட்ட சாதியினரில் உள்ள பொருளாதார ரீதியில் நலிவுற்றோரின் அச்சத்தைத் தணிக்கும் நோக்கத்தில், இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளுள் வராத பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, 5 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை இடஒதுக்கீடு வழங்கவும் சி.பி.எம். கட்சி சாதகமாக இருந்தது.
“முற்படுத்தப்பட்ட சாதிகளிலுள்ள பொருளாதார ரீதியில் நலிவுற்றவர்களின் அச்சத்தைத் தணிக்கும் வகையில்'' என்று சி.பி.எம். சொல்வதைப் போல, பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டில் அந்த அளவுக்கு அச்சுறுத்தும் வண்ணம் என்ன இருக்கிறது? அதோடு, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் இடஒதுக்கீட்டின் மீது உண்மையிலேயே அச்சம் கொண்டிருப்பவர்கள் "உயர்சாதி' என்று சொல்லிக் கொள்பவர்களில் உள்ள பணக்காரர்களே அன்றி, அச்சாதிகளிலுள்ள ஏழைகள் அல்லர். "உயர்சாதி ஏழைகள்' ஏற்கனவே கீழே இருப்பதால், பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டின் காரணமாய் இன்னும் வீழ்ச்சி அடைந்து விடுவோம் என அஞ்சுவதில்லை. நகர்ப்புறம் சார்ந்த ஆதிக்கசாதிப் பணக்காரர்கள், கிராமப் புறங்களிலுள்ள தங்கள் ஏழைச் சகோதரர்களை - தலித்துகளுக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் எதிரான சாதிப் போரில் முன்னணி களப் பலியாட்களாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ரண்வீர் சேனா இதற்கொரு எடுத்துக்காட்டு.
உலகமயமாக்கலின் விளைவாய் ஏற்பட்டுள்ள வேளாண்மை நெருக்கடி, கிராமப் புறங்களில் உள்ள அனைத்து மக்களையும் சாதி வேறுபாடுகள் இன்றி, நலன்களின் அடிப்படையில் ஒரே குழுவாக பிணைத்து வைத்துவிட்டது. உண்மையில் தலித் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தலைவர்கள் - பிற்பட்டவர்களுக்கும், கிராமப் புறத்திலுள்ள ஆதிக்கச்சாதி ஏழைகளுக்கும் இடையில் ஒற்றுமையை வளர்த்தெடுக்கவே முயற்சி செய்தனர். தங்களது சொந்த சாதி / வர்க்க நலன்களின் அடிப்படையில் நகர்ப்புறம் சார்ந்த ஆதிக்கச் சாதிப் பணக்காரர்கள்தான் கீழ்ப் படிநிலையிலுள்ள சாதி மக்களுக்கு எதிராக, கிராமப்புற ஆதிக்கச் சாதியினரைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இடஒதுக்கீட்டுக்கு எதிரான வன்மையான போராட்டத்திற்குப் பிறகு, கிரீமிலேயர் கொள்கை மற்றும் முற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ள பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு ஆகியவற்றை ஏற்றுக் கொள்வதன் பேரில் உடன்பாடு ஏன் ஏற்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. இந்த இரட்டைக் கொள்கை ஆதிக்கசாதியினரால் ஏன் இந்த அளவுக்கு விரும்பப்படுகிறது?
ஆதிக்க சாதியினருக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்றால் தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்களைப் போன்று அவர்களும் ஏன் போராடக்கூடாது? உண்மை என்னவென்றால், அமெரிக்காவில் வாழ்கின்ற அய்ரோப்பாவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் சிறப்பு ஒதுக்கீட்டிற்காகப் போராட முடியாதது போலவே, இங்குள்ள ஆதிக்க சாதியினரும் இடஒதுக்கீட்டிற்காகப் போராட முடியாது. ஆனால் இடஒதுக்கீட்டிற்காக ஏதாவது அறிவிப்பு செய்யப்பட்டால், அவர்கள் கடுமையான போராட்டங்களை நடத்துவார்கள். இறுதியில், இடதுசாரி அரசியலில் உள்ள பொருளாதார வாதத்தைத் தொழிலாகக் கொண்டவர்களின் இன்றியமையாத உதவியுடன் - கிரீமிலேயர் மற்றும் பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு ஆகியவற்றோடு நிறைவடைவார்கள்.
கிரீமிலேயர் கொள்கையை நியாயப்படுத்தி பிரகாஷ் காரத் பின்வருமாறு எழுதுகிறார்: “நிலத்தையும், உற்பத்திக்கான பிற சாதனங்களையும் சொந்தமாகக் கொண்ட, செல்வாக்கான அந்தஸ்துடைய சில சாதிகள், பல்வேறு மாநிலங்களிலும் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. அரசியலதிகார அமைப்பிலும் கூட, போதிய பிரதிநிதித்துவம் உடையவை அவை'' பிற்படுத்தப்பட்ட மற்றும் முற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த விவசாயிகளுள் குடிபெயர்ந்த நிலச் சுவான்தார்களின் ஒப்பீட்டு எண்ணிக்கையைக் காட்டும் தரவுகள் ஏதும் சி.பி.எம். கட்சியில் இருக்கிறதா?
"உயர்சாதி'கள் என்று சொல்லப்படுபவைகளில் உள்ள பணக்கார நிலச்சுவான்தார்கள் தங்கள் நிலத்தின் மீதான உரிமையை இழந்து விடாமல், சிறு நகரங்களுக்கும், பெரு நகரங்களுக்கும் குடிபெயர்ந்து, அங்குள்ள அனைத்து வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு, தங்கள் சாதியினருக்கான அதிகாரம் மற்றும் சலுகைகள் ஆகியவற்றைச் சாதகமாக்கிக் கொண்டு அங்கேயே தங்கிவிட்டார்கள். அவர்களது எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது, சொற்பமானவர்களான பிற்படுத்தப்பட்ட சாதி நிலச்சுவான்தார்கள் - இந்திய வேளாண்மையின் மிகக் கடுமையானதும், கொலைகாரத் தன்மையுடையதுமான போர்க் களங்கள் ஆகிய கிராமப்புறங்களிலேயே மிஞ்சியிருக்கிறார்கள். நகரங்களில் வசிக்கிற தங்களது மகன்கள், மகள்கள், சகோதரர்கள், சகோதரிகள் நெருக்கடியான தருணங்களில் பண உதவி செய்வதால் "உயர்சாதி' என்றுச் சொல்லப்படும் சாதியைச் சேர்ந்த விவசாயிகள் வேளாண்மை நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளனர். பிற்படுத்தப்பட்ட சாதி விவசாயிகள், இது போன்ற வசதிகளை அனுபவிக்கவில்லை.
சில பிற்படுத்தப்பட்ட சாதிகள் அரசியல் அதிகார அமைப்பிலும் போதிய பிரதிநிதித்துவம் உடையவர்களாக இருக்கிறார்கள் என்ற காரணத்தால், கிரீமிலேயர் கொள்கை மீண்டும் நியாயப்படுத்தப்படுகிறது. சட்டமன்றத்தில் அவர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதற்கு அவர்களின் கல்வியோ, வசதியுடைமையோ காரணமில்லை. மிக அரிதாகவே இவை அவர்களிடம் இருக்கின்றன. சமூக மற்றும் அரசியல் விழிப்புணர்வு பெருகி வருவதும், பெரிய மக்கள் தொகை அவர்களது ரட்சகராக விளங்கும் நாடாளுமன்ற ஜனநாயகம் - அவர்களுக்கு வழங்கும் வாய்ப்புகளுமே அதற்குக்காரணமே அன்றி வேறில்லை.
"அரசியல் அதிகார அமைப்பில் போதிய பிரதிநிதித்துவம்' கொண்ட பிற்படுத்தப்பட்ட சாதிகள், ஆதிக்க சாதியினர் மேலாதிக்கம் செலுத்தும் ஊடகம், பொது நிர்வாகம், நீதித்துறை ஆகியவற்றுடன் தேய்வுக்கான மோசமான போரில் சிக்கிக்கொள்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு உறுதியாக எதையாவது செய்துவிட பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முதல்வரோ, அமைச்சரோ எடுக்கும் அனைத்து முயற்சிகளையும், அதிகார வர்க்கத்தில் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் குறைந்த பிரதிநிதித்துவம் முறியடித்து விடுகிறது. மாநில அளவிலான அதிகாரத்துக்கு அவ்வப்போது வந்துவிடுகிற பிற்படுத்தப்பட்ட சாதித் தலைவர்களுக்கு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்குகிற கூட்டாட்சித் தத்துவம் தேவையான அதிகாரத்தை வழங்குவதாக இல்லை.
பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஆகியோரின் குடும்பப் பின்புலங்களைக் குறித்த ஆய்வு, இத்தலைவர்களின் வர்க்க நிலைகளைக் குறித்த உண்மைகளை வெளிப்படுத்துவதாக இருக்க, இவர்களில் சில தலைவர்கள் சொத்துக்களை சம்பாதித்து இருக்கலாம்; ஆனால் அவர்களின் சொத்துக்கள் நீதிமன்ற விசாரணைக்கும், ஊடகப் புலனாய்வுக்கும் உடனுக்குடன் உள்ளாக்கப்படுகின்றன. பணமில்லாமல் அவர்களால் தங்களை அரசியலில் நிலைநிறுத்திக் கொள்ள முடியாது பணம் சம்பாதித்தால் பார்ப்பனிய அமைப்பின் கடுங்கோபத்துக்கு உள்ளாகிறார்கள். சூத்திரர்கள் கையில் இருக்கும் சொத்து, "இருபிறப்பாளர்'களைத் துன்புறுத்தும் என வலியுறுத்துகிற மனுஸ்மிருதி இங்கு நடைமுறைப் பொருத்தம் உடையதாகிறது. இந்த பணக்கார பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தலைவர்களில் பெரும்பான்மையோரின் கல்வி ரீதியான பின்னடைவு, அவர்களை பட்டிக்காட்டான்களாகவும், என்னி நகையாடுவதற்கு உரியவர்களாகவும் ஆக்குகிறது.
ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட சாதித் தலைவர் பின்னேயும் திரளான ஒரு கூட்டம் ஏழ்மை தோய்ந்த மக்கள் இருக்கின்றனர். தங்கள் மக்களில் பெரும்பாலானோரை முன்னேற்றுவதில் இந்த பிற்படுத்தப்பட்ட தலைவர்கள் பெரிதும் தோற்றுவிட்டார்கள். ஆனால் அவர்களின் வெற்றி, தோல்விகளைக் குறித்து விவாதிக்க இது இடமில்லை.
1947இல் இந்தியா விடுதலை அடைந்தபோது அதிகாரம் ஏழை இந்தியர்களின் கைகளுக்குப் போய் விடவில்லை. இருந்தாலும் அது சமூகத்தின் அனைத்துப் பிரிவினராலும் வரவேற்கப்பட்டது. ஏனெனில் அது ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை என்று புரிந்து கொள்ளப்பட்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான நாங்கள் இடஒதுக்கீட்டின் பயன்கள் எங்களுள் வளமான பிரிவினருக்குப் போவதைக் குறித்துப் பொருட்படுத்தவில்லை. அமைப்பின் உயர்ந்த மட்டங்களில் எங்களுக்குரிய பிரதிநிதித்துவம் வேண்டும். அது வசதியான பிரிவிலிருந்து வந்தாலும் சரி அல்லது வசதியற்ற பிரிவிலிருந்து வந்தாலும் சரி. �
தமிழில்: ம.மதிவண்ணன்
- அடுத்த இதழிலும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|