குருதியில் கனக்கும் கவிதைகள்
யாழன் ஆதி

கால வெளியின் திசைகளெங்கும் துரத்தப்பட்டும் அழுத்தப்பட்டும் தன்னியல்பை விட்டு, ஆணின் கைகளில் வெறும் தசைக்கோளங்களாய் பெண்கள் இருந்தனர். சுயம் அறிந்து விடுதலையின் பதாகையான படைப்பு வெளியை பெண்கள் அடைந்திருக்கும் இத்தருணத்தில், நம் கைகளில் கிடைத்திருக்கிற மிக இன்றியமையாத கவிதைத் தொகுப்பு "பெயல் மணக்கும் பொழுது.' ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய இத்தொகுப்பை அ. மங்கை தொகுத்திருக்கிறார்.
ஆண் படைப்பாளிகள் சிலர் பெண் பெயர் கொண்டு எழுதுவதுகூட ஒரு தவறான போக்கு என்ற கருத்து நிலையை, இக்கவிதைகளைத் தொகுக்கும்போது தான் அடைந்ததாக மங்கை கூறியிருப்பது ஈண்டு நோக்கத்தக்கது. அப்படிப் பெயர் வைத்திருக்கும் ஆண் எழுத்தாளர்கள், தங்கள் பெயர்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று இயக்கம் நடத்தப் போவதாக ஒரு முறை மாலதி மைத்திரி நேர் பேச்சில் கூறியதும் நினைவுக்கு வருகிறது.
இன்றைக்கு தமிழ் நாட்டுப் பெண் எழுத்தாளர்களின் களம் என்பது வேறாக உள்ளது. ஆண் எழுத்தின் அதிகாரத்தை அசைக்கும், அதிர்ச்சிக்குள்ளாக்கும் சொற்களும், வாக்கியங்களும் இன்று மிகத்தெளிவான பிரதிகளாக நமக்குக் கிடைக்கின்றன. அதன் செயல்பாட்டை நாம் உள்நோக்கிப் பார்ப்போமானால், பெண் எழுத்தாளர்களின் படைப்புகள், தமிழ் இலக்கியப் பரப்பை மட்டுமே தக்க வைத்திருக்கின்றன. ஆனால் ஈழப் பெண் கவிஞர்களின் படைப்புகள் - அவர்களின் நில விடுதலையை, அவர்கள் பெயர்ந்திருக்கிற புலச்சூழலைக் கொண்டு அகம் புறம் என்று நிற்கின்றன.
நிலத்தை இழந்த இனத்தின் பின்புலத்தில் அதை மீட்டெடுக்கும் நெடு நாளைய தீவிரப் போரால் விளைந்த இழப்புகளும், தவிப்புகளும், மீள வேண்டுமென்ற எழுச்சியும் கவிதைகளாகியிருப்பதை இத்தொகுப்பின் பலமாக நாம் காணலாம். ஒரு நாட்டின் விடுதலைக்கும் அதன் மறு நிர்மாணத்திற்கும் போராளியாகவோ, கவிதை எழுதுபவராகவோ பெண் தன் பங்கையாற்றும் போது படைப்பு வெளியை அது பற்ற வைக்கிறது.
சிங்களப் படையின் தாக்குதல்கள் வெறித்தனமாக நடத்தப்படுகின்றன; பாலியல் வன்முறை போர் உத்தியாகக் கையாளப்படுகிறது; சுட்டு வீழ்த்தப்படுகின்றனர். கண்ணிவெடி செல் தாக்குதல்களில் பிய்ந்த தசையோடும், ரத்தம் கசியும் ரணங்களோடும், தன் உறவுகளைக் கண்ணுற்றும் தன் விடுதலையை எழுதுகின்ற ஈழத்தமிழர் வாழ்வியல், பெண்நோக்கில் காணக்கிடைக்கிறது "பெயல் மணக்கும் பொழுதில். அன்பை, மனிதத்தன்மையை, நிலத்தை, நீர்நிலைகளை, மலைத்தொடர்களை, மணல் வெளிகளை, காய்த்தும் பழுத்தும் பறிக்க ஆளில்லாமல் தவிக்கும் ஈச்சம் செடிகளை, இன்னும் ஒரு கனவாகவே உறைந்துவிட்ட யாழ்தேவியை கவிதைகளாய் மாற்றிவிட்டிருக்கும் தன்மை போற்றுதலுக்குரியது.
நாள்தோறும் ரத்தம் கசியும் உடல்களைக் காணும் குழந்தைகளின் நிலை என்னவாக இருக்கும்? தீவிர பயங்கரமே வாழ்வின் தடயங்களாய், அதன் வீச்சே வாழ்வாய் இருக்கும் நிலையில் கவிதைகளில் இது வெளிப்படுகிறது. மண்ணுக்கும் பெண்ணுக்கும் உள்ள மறுக்க முடியாத உண்மையாக அவை நிமிர்ந்து நிற்கின்றன.
மரணம் துரத்தும் வாழ்க்கையில், மரணமே ஓர் உறுப்பாக அல்லது அது ஒரு பழகிய வழக்கமாக ஆகிவிடுகிறது.
மரணம் மட்டுமே அறிந்திருக்கிறது / எச்சந்தில் கனவுகள் தனித்துத் திரியுமென / எப்பொழுதில் கனவுகள் துண்டாய்ச் சிதறுமென
மரணத்தின் துர்நாற்றம் துரத்தும் காற்றைச் சுவாசிக்கின்ற சொற்கள் விழுகின்றன. இயற்கையின் அழகியல் எல்லாம் பிணவாடை வீசும் இடங்களாகி, அதன் கோரம் பிரதியாகி வரும்போது,
எலும்பின் வீச்சமடிக்கும் மலர்களைச் / சூடியிருப்பவளே நில் / அப்பூவில் / தாய்க் குருதியின் வாசம் வீசுகிறதாவெனப் / பார்க்க வேண்டும் நான்
- என பூக்கள் தாய்க்குருதியின் வாழ்விடமாக மாறியிருகின்ற கண்ணீரின் கனத்தைப் பதிவு செய்கிறது கந்தக மனம். மின்னம்பேரியும், கோணேஸ்வரியும் ஈழநிலப் பெண்கவிஞர்களின் குறியீடாக மாறியிருக்கின்றனர். இவர்கள் இருவரும் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டு, மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டவர்கள். கவிதைகளைத் தந்த செல்வியும் சிவரமணியும் அப்படித்தான் போரில் மாண்டவர்கள். தமிழர் பிணங்களைத் தின்று கொழுக்கும் மீன்களை இயல்பான குறியீடுகளாக்கியிருக்கிறார் ஆழியாள்.
போராளியாய் ஒரு சிங்கள ராணுவ வீரனைக் கொன்ற இளநீதாவின் மன ஓட்டம், மனிதத்தன்மையின் மிச்சமாக கொடுஞ்சூழலில் வாழக் கூடியவருக்கு வருகின்றதல்ல. தன்னால் கொல்லப்பட்ட அவன் தன் தங்கைக்கு வாங்கித் தருவதற்கு என்ன வைத்திருப்பானோ என்ற நினைவில் தன் அண்ணனின் மரணமும் ஆடுகிறது. ராணுவத்தால் கொல்லப்பட்ட தன் அண்ணன் தன் மீது வைத்திருந்த அன்பு, அவர் கண்களில் நீரோவியமாய் அசைகிறது.
காதலைப்பாடும் அகப்பாடல்களில் ஈழப்பெண் கவிஞர்கள், சங்க இலக்கியப் பாடல்களைப் போன்ற சொல்லாடல்களைப் பயன்படுத்துவது, தமிழ் இலக்கியத்தின் தொன்மையோடு உள்ள தொப்புள் கொடியுறவு அறுபடாமல் இருப்பதைக் காட்டுகிறது. காதலும் அதைத் துய்த்தலும், சூழலின் இருப்பில் அதனைத் தொடர முடியாத போர்க்கால அவஸ்தையும் அகம் சார்ந்த பாடல்களாய் புனையப்பட்டுள்ளன. அது மட்டுமல்ல, தேவையாய் இருக்கும் பட்சத்தில் காதலைத் துறக்கக்கூடிய மனோ தைரியமும் வியக்கத்தக்கதாய் உள்ளது.
முத்தங்களாகி கலவியில் மயங்கி /இறுக அணைத்து வியர்வையில் ஒட்டி /கரைந்து போகும் அடுத்த நிமிடமே நீ ஆணாகி விடுகிறாய் .....................
என்னால் முடியவில்லை விட்டுவிடு / எல்லாத்தையுமே
தமிழகத்தின் கவிஞர்களைப் போல அதிர்ச்சியாக உடல்மொழிகளைப் பயன்படுத்தாமல், அவசியம் கருதியும் ஆத்திரத்தைக் கொட்டுகின்ற போதிலும் மொழி தன்னெழுச்சியாக தன்னை வடிவமைத்துக் கொள்கிறது. கோணேஸ்வரி வன்புணர்வு செய்யப்பட்ட பிறகு, அவரது பிறப்புறுப்பு வெடி வைத்து தகர்க்கப்பட்ட கொடுஞ்செயலின் பாதகத்தை கவிதையாக்க, உடல் மொழி பயன்படுத்தப்படுகிறது. அங்கு உடலை ஓர் ஆயுதமாக மாற்றுகின்ற கவிஞரின் வாஞ்சை வெளிப்பாட்டை யாரால் தடை செய்ய முடியும்! ஓநாய்களாக சிங்கள ராணுவத்தை உருவகித்து வாசலில் நின்று உடல் கவ்வ வந்திருக்கின்றன என்னும்போது, பெண் விடுதலைக்கான உடல் மட்டுமல்ல; அது மண் விடுதலைக்குமானதுமாகும் என்று மொழி தன்னை நிறுவுகிறது. உடல் சிதைக்கப்படுகிறபோது அதை அழிவுக்கும் அவமானத்திற்கும் விட்டு விடாமல் - வழிகின்ற கண்ணீர் உதட்டுக் குருதியைக் கழுவிச் செல்லுவது போல, புதிய நாளில் உடலைப் புதுப்பித்துக் கொண்டு போராடும் துணிவு, அவர்களையும் அவர்களின் படைப்புகளையும் இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
விடை பெறுதல் இல்லாமல் பிரிவது போர் வாழ்க்கையில் எழுதாத கவிதை. போரில் வீரமரணம் அடைந்த கேப்டன் வானதி எழுதிய "எழுதாத கவிதை'யில், அவரால் எழுத முடியாத கவிதைகளை எழுதுங்கள் என்று அறைகூவல் விடுக்கிறார். விடுதலை அடைந்த ஈழத்தில் சுதந்திரக் காற்றோடு உலா வருகையில் எழுதாத தன் கவிதை எழுந்து நிற்கும் என்று தன் இறுதிக் கவிதையில் வானதி கூறியிருப்பது, தமிழீழப் பெண் கவிஞர்களின் அடையாளமாக நிற்கிறது. தொண்ணூற்றொரு பெண் படைப்பாளிகளின் கவிதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. படைப்பாளிகளின் பெயர் அகரவரிசைப்படி கவிதைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. புறந்தள்ளமுடியாமல் ஒவ்வொரு கவிதையும் ஏதோ ஒரு விதத்தில் தேவையானதாகவே இருக்கிறது.
மழை வந்து மண்ணைத் தொட்ட பிறகு பிறக்கும் வாசனை, மழை பெய்யாத இடத்திலும் வருகிறபோது எங்கோ மழை பெய்கிறது என்று மனம் உணரும்.அதைப்போலவே இத்தொகுப்பும் ஓர் உணர்வைத் தருகிறது. அ.மங்கையின் இப்பணி, தமிழ் இலக்கியத்திற்கு முக்கியப் பங்காற்றியிருக்கிறது. சித்திரலேகா மவுனகுரு , வ.கீதா ஆகியோரின் பின்னுரை நூலுக்கு அணி சேர்க்கின்றன. போராட்ட உணர்வினையும் விடுதலை வேட்கையினையும் கவிதாயுத்தியுடன் எழுத நினைக்கும் தலித் மற்றும் பெண்ணியக் கவிஞர்களுக்கு இந்நூல் ஒரு மடைமாற்றி!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|