யாழன்ஆதி கவிதை

எரிச்சலூட்டும் உன் முகத்தில் தெரியும்
சுரண்டலின் ரேகைகளை குறி வைத்தே
அழிப்பான்களாக வந்தன பூட்சுகள்
மக்களைக் கொல்ல நீயனுப்பிய
ஏவுகணைகள், பீரங்கிகள்
அவற்றின் வேலைகளை முடித்தபின்
எஞ்சியிருக்கும் அவர்களின்
எளிய ஆயுதங்கள் திருப்பித் தாக்கின
உன்னை
உன் தப்பித்தலில் வெளிப்படும்
சாதுர்யம் உனக்கே யுரிய
வல்லரசுகளுக்கானது
ஆனால் நினைவிழக்கா
வல்லமை வாய்ந்தது மக்களின் ஆவேசம்
உடல் உதறும் குளிரிலும்
கோடையின் தீராத வெப்பத்திலும்
சுழன்றடிக்கும் அலைகளின் மேற்பரப்பிலும்
எங்களுக்கான வாழ்வைத் தேடுகையில்
வானில் பறந்து குண்டுகளைப் பொழியும்
உன் எந்திரங்களைப் போன்றதல்ல
உன்னை நோக்கி வந்தவை
உழைப்பின் வியர்வை ஊறிய மக்களின்
இரண்டு கோபத்துளிகள்
அவை
உன்னால் தகர்க்கப்பட்ட வீடுகளின்
கூரை நசுக்கிய உடலிலிருந்து வந்திருக்கலாம்
கால்களின் ஞாபகமாய்
பத்திரப்படுத்திய ஈராக்கியனுடையதாக இருக்கலாம்
எதுவெனினும்
வெள்ளைகளை நோக்கி
பாய ஆரம்பித்திருக்கின்றன
கருப்புக் காலணிகள்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|