 |
யாழன் ஆதி கவிதை
(விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 4 வயது நிரம்பிய ராஜவேணி என்ற இப்பெண்ணை “தேவதாசியாக” மாற்ற ‘பொட்டுக்கட்டி’ விடப்பட்டார். உரிய தலையீட்டுக்குப் பிறகு இவர் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்)
குழிகளை
இன்னும் ஆழப்படுத்துங்கள்
வண்ண பலூன்கள்
சத்தம்போடும் கிலுகிலுப்பைகள்
விளையாடும் பொம்மைகள்
எல்லாவற்றையும்
மண்போட்டு மூடுங்கள்
சொச்சம் தாலாட்டு உங்களிடம்
இருப்பின்
குப்பையில் கொண்டு கொட்டுங்கள்
மழலைப்பாடல்கள் அச்சடிக்கப்பட்ட
புத்தகங்களை
உறுதியாகக் கொளுத்திவிடுங்கள்
நீர்வரும் நதியென ஏதாவது
இருந்தால் சாம்பலை அதில் கரையுங்கள்
இல்லையெனில் சாக்கடையில் போடுங்கள் கார்ட்டூன்களை கிழித்து
மலம் துடைத்துக் கொள்ளுங்கள்
உங்கள் வீட்டுத் தோட்டத்திலோ
வழிகளிலோ பூக்கள் பூத்திருந்தால்
விடாதீர்கள் முதலில் கசக்குங்கள்
வேகமாய் ஓடுங்கள்
பள்ளிக்கூடங்களை இடித்துவிட்டு
மதுவிடுதிகளை உருவாக்குங்கள்
குழந்தைகள் என்று ஏதேனும்
இருப்பின் கொன்று விடுங்கள்
ஒருவேளை உங்கள் சாமி சொன்னது
சரியென்றால்
பொட்டுக்கட்டி அந்தக் குழந்தையை
மாரியாத்தா' என்றும் கொண்டாடுங்கள்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|