 |
யாழன் ஆதி கவிதை

(பஞ்சாப் மாநிலத்தில் 10.1.2008 அன்று, அயல்நாட்டு நாடளுமன்ற உறுப்பினர், ஒருவருடைய கைப்பையை பறித்ததற்காக, காவல் துறையால் கொடூரமாக தாக்கப்பட்ட ஒன்பது வயது, சச்சின் ( இடது புறம் படத்தில் ) )
அழுகையின் வீறல் சுமக்கும்
துன்பத்தின் கனம் தாளாத
கண்ணீர்த்துளிகள்
உடைந்து சிதறுகின்றன
எழுதித்தீராத சோகம் ஒன்றின்
நெடும்பாடல்
கேட்டுக் கொண்டேயிருக்கிறது
பெரும்வலியுடன்
இரவில் பூச்சியின் சத்தமாய்
இரைந்து கொண்டிருக்கிறது
அணைக்க இயலா அவமானத்தின்
தீ
சுருண்ட உடலில் தாங்கவொண்ணா
காயங்களின் கூரிய அலகுகள்
கொத்திக் கிளறுகின்றன
உயிரின் வலியை
உண்ண ஒருவேளை உணவும்
உருப்படியான கல்வியும்
குழந்தைகளுக்கு
இல்லையென்றான தேசத்தில்
என்ன செய்ய பசிக்கும் வயிற்றை
இரைப்பைகளைப் போலவே
கண்ணீர் சுரப்பிகளும்
காலியாகித்தான் போகின்றன
இருந்தாலுமென்ன
கோடிகோடியாய்
கொள்ளையடிப்பவன்கள்
சட்டத்தை ஏப்பமிட
பசிக்குத் திருடியவனை
சட்டத்திற்கு இரையாக்குகின்றனர்
நீதியின் காவலர்கள்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|