‘‘கல்வி உரிமையை மீட்காத மொழிப்போர் பொருளற்றது”

‘அனைவர்க்கும் கல்வி; அனைத்தும் தமிழில்’' என்ற பொருள் செறிந்த முழக்கத்துடன் தமிழ்த் தேசியக் கலை இலக்கியப் பேரவை ஒருங்கிணைத்த தமிழ் மக்கள் கல்வி உரிமை மாநாடு, ஈரோட்டில் 18.9.2005 அன்று, ஈரோடு அரசு இசைப் பள்ளி மாணவர்களின் தமிழ் இன்னிசையுடன் எழுச்சியோடு தொடங்கியது. மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரையும் சிவ. காளிதாசன் வரவேற்க, தமிழ்த் தேசியக் கலை இலக்கியப் பேரவையின் தமிழக அமைப்பாளர் வேலிறையன், பேரவையை அறிகப்படுத்தியும், மாநாட்டின் நோக்கங்களை விளக்கியும் பேசினார்.
குடந்தையில் எரிந்த பள்ளி கப்பிலிருந்து எரிந்த குழந்தைகளின் தாய் ஒருவர், செப்டம்பர் 16 அன்று காலை நினைவுச் சுடர்ப் பயணத்தைத் தொடங்கி வைக்க, கல்லூரி மாணவர்கள் தஞ்சை, திருச்சி, நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம், பவானி ஆகிய நகரங்களின் வழியாக ஓடி வந்து, செப்டம்பர் 18 அன்று ஈரோட்டில் முகாமையான தெருக்களில் பயணித்து, காலை 9.30 மணி அளவில் மாநாட்டரங்கை வந்தடைந்தனர். கருத்துப் பரப்புரையுடன் கூடிய நினைவுச் சுடர்ப் பயணம், வழி நெடுக மக்களை ஈர்த்து வணிகக் கல்வியின் கொடும் விளைவைப் பற்றிச் சிந்திக்க வைத்தது.
முதல் தாய்த் தமிழ்ப் பள்ளியான அம்பத்தூர் பள்ளியின் முதல் மாணவியும், பள்ளிக் கல்வி முழுவதையும் தமிழிலேயே பயின்று உயர் மதிப்பெண்களுடன் நுழைவுத் தேர்வையும் கடந்து, இன்று கோவை அரசுப் பொறியியல் கல்லூரியில் பயின்று வருபவரும், தியாகுவின் மகளுமான திலீபா, நினைவுச் சுடரை அளிக்க, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வே. வசந்திதேவி சுடரைப் பெற்றுக் கொண்டார். மாநாட்டரங்கிற்குக் குடந்தை ‘குழந்தைகள் நினைவு அரங்கம்' எனப் பெயர் சூட்டியிருந்ததும், மேடையின் பின்புலத்தில் எரிந்துபோன 94 குழந்தைகளின் படங்கள் வைக்கப்பட்டிருந்ததும் அனைவரின் கண்களையும் பனிக்க வைத்தது.
கூட்டத்தின் இறுக்கத்தைத் தளர்த்துவதாய் அமைந்திருந்தது, பேராசிரியர் சரசுவதியின் மாநாட்டுத் திறப்புரை. பெரும்பான்மை மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட வரலாற்றை எடுத்துக் கூறி, மாநாட்டின் இன்றைய பொருத்தப்பாட்டை அவர் விளக்கினார். கண. குறிஞ்சி தலைமையில் தொடங்கிய பொது அரங்கத்தில், பேராசிரியர் ப. சிவக்குமார், ‘உலகமயமாக்கம், தமிழ்வழிக் கல்வியும்' என்ற தலைப்பில் உரையாற்றினார். பேராசிரியர் பிரபா கல்விமணி, ‘கல்வி உரிமைக்கான மக்கள் இயக்கம்' என்ற தலைப்பில், கல்வி உரிமைப் போராட்ட வரலாற்றை விரிவாகக் கூறி, தொடர்ந்து போராடுவதே உரிமையை மீட்டுத் தரும் என்றார்.
சமூக நீதி அரங்கத்திற்குத் தலைமையேற்று உரையாற்றிய முனைவர் அரங்க சுப்பையா, தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் முடிவுக்கு வந்து, அவர்களின் கல்விஉரிமை மீட்கப்படாதவரை, தமிழ் மொழிக்கானப் போராட்டம் பொருளற்றது என்றார். மருத்துவர் ஜி.ஆர். ரவீந்திரநாத், கல்வித் துறையில் சமூக நீதிக்கானப் போராட்டம் பற்றிப் பேச, கேப்டன் வ. துரை, பழங்குடி மக்களின் கல்வி உரிமை பறிக்கப்படுவதை உணர்ச்சியோடு எடுத்துரைத்தார். இருவருமே கல்வியில் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.
பள்ளிக் கல்வி அரங்கிற்கு அம்பத்தூர் தாய்த் தமிழ்ப் பள்ளியின் தலைமையாசிரியர் ரா. சங்கரேசுவரி தலைமை ஏற்றார். அவர், தாய்த் தமிழ்ப் பள்ளியின் கற்பித்தல் முறையையும், தாய்மொழிக் கல்வியின் பயன் குறித்தும் பார்வையாளர் மனதில் பதியத் தக்க வகையில் எடுத்துரைத்தார். முனைவர் வே. வசந்திதேவி, தற்பொழுது நிலவும் ஏற்றத் தாழ்வான கல்வி முறைகளை ஒழித்துவிட்டு, அனைவருக்கும் தரமான கல்வியை வழங்கக்கூடிய ‘பொதுப் பள்ளிக் கல்வி முறையை' நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டியதின் தேவையை விளக்கினார்.
மருத்துவர் செ. தெய்வநாயகம், ‘பயிற்று மொழியாகவும், பாட மொழியாகவும் தமிழ்' என்ற தலைப்பில் உரையாற்ற, காந்தி கிராமம் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் தி. கருணாகரன், மேடையிலேயே ஒரு சில நொடிகளில் எழுதப்படிக்கத் தெரியாத ஒரு பெண்மணியைப் படம் என்று எழுத வைத்ததுடன், படிக்க வைக்கவும் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவரது செயல்முறை விளக்கம் ‘எழுது தமிழ் ஏழு நாளில்' என்ற தலைப்பிற்குப் பொருத்தமாக அமைந்தது.
உயர் கல்வி அரங்கத்திற்கு மருத்துவர் வெ. ஜீவானந்தம் தலைமை தாங்க, மருத்துவர் சிவ. சுப்பிரமணிய ஜெயசேகர் ‘மருத்துவக் கல்வியில் தமிழ்' என்ற தலைப்பிலும், முனைவர் அ. இளங்கோவன், முனைவர் க. ஜெகதீசன் ஆகிய இருவரும் ‘பொறியியல் கல்வியில் தமிழ்' என்ற தலைப்பிலும் உரையாற்றினர். அறிவியல் அரங்கிற்குத் தலைமையேற்ற முனைவர் ராம. சுந்தரம், தமிழை அறிவியல் மொழியாக்குவதிலுள்ள சிக்கலை விளக்கினார். மணவை முஸ்தபா, தம் கலைச் சொல்லாக்கப் பணிகள் குறித்து விரிவாக விளக்கி, தமிழே ஓர் அறிவியல் மொழிதான் என்பதையும், தமிழைப் போல் வேர்ச் சொற்கள் நிறைந்த மொழி எதுவுமில்லை என்பதையும், தமிழ் வேர்ச் சொற்கள் துணை கொண்டு எந்தப் புதிய அறிவியல் கலைச் சொல்லையும் எளிதில் உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதையும் விளக்கினார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|

நிறைவரங்கம், மதுரை அய். செயராமன் தலைமையில் நடைபெற்றது. நிறைவுரை ஆற்றிய ச.சீ. ராசகோபாலன், கல்வித் துறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்துப் பேசினார். தாய்மொழிக் கல்வியின் வரலாற்றை எடுத்து விளக்கி, இப்பொழுது கல்வியைச் சீரழித்து வரும் ஆங்கில வழிக்கல்வி மாயை அகன்று, மீண்டும் பழைய நிலையான தாய்மொழிக் கல்வியே செழித்தோங்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தினார். இறுதியாகத் தீர்மானங்களை விளக்கியும் எதிர்காலச் செயல் திட்டம் குறித்தும் உரையாற்றிய தியாகு, ‘‘அனைவர்க்கும் கல்வி அனைத்தும் தமிழில் என்ற முழக்கம், தமிழ் மக்களின் முழக்கம். அனைத்தும் தமிழில் என்ற இலக்கை அடையாமல், அனைவர்க்கும் கல்வி என்ற நோக்கம் ஈடேறாது. ஆங்கில வழிக் கல்வி என்பது, அனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்தை மறுப்பதற்கு ஆதிக்கவாதிகளின் கையிலுள்ள வலுவான கருவி. தமிழ் வழிக் கல்வியே அனைவருக்கும் கல்வியைக் கொண்டு சேர்க்கும். தமிழ் வழிக் கல்விக்கானப் போராட்டம் சமூக நீதிப் போராட்டமாகும்; இதில் சமூக நீதிக்காகப் பாடுபடும் அனைத்தியக்கங்களும் ஒன்றுபட்டுப் போராட முன்வர வேண்டும்'' என அறைகூவல் விடுத்தார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:
1. இந்திய அரசமைப்புச் சட்டத்தில், கல்வியைப் பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றியமைக்க வேண்டுமென, இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது
2. தமிழ் அல்லது தாய்மொழி என்னும் குதர்க்கத்தைக் கைவிட்டு, தமிழ் நாட்டுப் பள்ளிகளில் தமிழ் பயில்வதைக் கட்டாயமாக்க, உடனடியாக முறைப்படி சட்டம் இயற்ற வேண்டுமென இம்மாநாடு தமிழ அரசைக் கோருகிறது
3. தமிழ் வழிக் கல்வி பயின்றோர்க்கு தமிழக அரசும், தமிழ் நாட்டளவில் இந்திய அரசும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கிச் சட்டமியற்ற வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
4. பள்ளிக்கரணையில் இயங்கிவரும் பாவாணர் தமிழ் வழிப் பள்ளிக் கட்டடத்தை, சட்டத்திற்கும் நீதிக்கும் புறம்பாக இடித்து நொறுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, தமிழக அரசே பள்ளிக்கு மீண்டும் கட்டடம் கட்டித்தர வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
5. தமிழ் மக்கள் தம் குழந்தைகளுக்குத் தமிழ்க் கல்வி தர விரும்புவதில்லை என்ற அவச்சொல்லைப் போக்கி, தரமான தமிழ் வழிக்கல்வி வழங்குவதில் முன்னோடிகளாகத் திகழும் தாய்த் தமிழ்ப் பள்ளிகளையும், பிற தமிழ் வழிப் பள்ளிகளையும் இம்மாநாடு மனமுவந்து பாராட்டுகிறது. இத்தகையப் பள்ளிகளுக்குத் தமிழ் மக்கள் ஆக்கம் ஊக்கம் தர வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
6. குழுமுறைக் கற்றல், மாணவரிடையே ஒரு கூட்டுணர்வை ஏற்படுத்துதல் போன்ற கற்றல் முறைகளுக்கு முரண்பட்ட போட்டி முறைத் தேர்வுகள், மாணவரிடையே பொறாமை உணர்வுகளை உண்டாக்குவதோடு, தற்கொலை முயற்சிகளுக்கும் தூண்டுகோலாக அமைகின்றன என்பதால், தேர்வு முறைச் சீர்திருத்தங்கள் அடிப்படைத் தேவையாகவும், தொடக்கப்பள்ளி அளவில் வாய்மொழித் தேர்விற்கு முதலிடம் கொடுப்பதும், பிற நிலைகளிலும் வாய்மொழித் தேர்வுகளுக்கு இடமளிப்பதும் மாணவரது இறுக்க உணர்வுகளைத் தளர்த்த உதவும் என்பதைக் கருத்தில் கொள்ள அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
- நம் செய்தியாளர்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|