ஆய்ந்து எடுத்த உடல்தலை கண்டும்
ஆடாது அசையா திருக்கும் அரசையும்காய்ந்து உலர்ந்த சதைகளைப் பார்த்தும்
கால்நடை இனமாய் அசைபோடும் உலகையும்
சாய்ந்து விழுந்த தமிழின உறவையும்
சாதியில் சரிந்த தனிஇன உயிரையும்
பாய்ந்து எழுந்திடும் புலிகளாய் நிமிர்த்தவும்
பாழ்வினை செய்தவன் முகமூடி கிழிக்கவும்
பெய்திடும் எரிகணை பொய்யுரை முறிக்கவும்
பெருமை கண்ட தமிழீழம் தழைக்கவும்
கொய்திடும் பனியிலும் சூட்டிலும் அயராது
கொள்கை பரப்பிடும் கொற்றவன் விழிகளே
நெய்தல் அலையிலும் நெய்திடும் உலையிலும்
நெடும்படை நடந்திடும் தோழமை உறவுகளே
ஓய்தல் அறியா கதிர்களே எவர்க்கும்
ஒப்பிலா புலிகளின் தொப்பூழ் குடிகளே
காய்தல் உவத்தல் இன்றியே வாழ்த்தினேன்
காய்கனி பழமாய் போற்றி வணங்கினேன்
மாய்தல் வாழ்தல் ஓர்முறை இருப்பினும்
மாந்தராய் நிலைத்ததால் பல்முறை தொழுகிறேன்
தாய்மொழி காக்கவும் தமிழ்மண் மீட்கவும்
தாயின்றி வாடிடும் தமிழினம் தூக்கவும்
வாய்மொழி பேசாது வழிமுறை செய்திடும்
வாய்மையின் உயிர்களை வாழ்க வாழ்கவே
-பரணிப்பாவலன்