உறங்கும் பறவைகளைத் தாங்கும் கூடு போலவே,
மௌனம் உனது குரலைக் காப்பாற்றும்
- தாகூர்
தமிழகம் எங்கும் காணப்பட்டு வந்த சிட்டுக்குருவி (House sparrow) இனம் அண்மைக்காலமாக கோவை, ஈரோடு, பழனி, மதுரை, சேலம் போன்ற பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையில் ஆங்காங்கே காணப்படுகிறது. இப்பகுதிகளில் நகரங்கள் மட்டுமன்றி கிராமப்பகுதிகளிலும் நாளுக்கு நாள் அதன் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.
சிறுதானியங்களான தினை, கம்பு, சாமை, வரகு, வேலியில் சிறு விதைகளுடைய செடிகள் போன்றவற்றை பயிரிடுவது குறைந்துவிட்டதாலும், சிறு விதைகளுடைய செடிகள் இல்லாமல் வீடுகள் நவீனமடைவதாலும், வீட்டுச் சிறு கிணறுகள் மூடப்படுவதாலும், பூச்சிக்கொல்லி மருந்துகளால் சிறு புழு பூச்சிகள் குறைந்து வருவதாலும், வளர்வதற்கேற்ற சூழ்நிலை இல்லாததாலும் வீட்டுச்சிட்டுகள் முற்றிலுமாகக் குறைந்து வருகின்றன.
இன்றும் திருநெல்வெலி மாவட்டப் பகுதிகள், நீலகிரி மாவட்டப் பகுதிகள், கோத்தகிரி பகுதிகளில் இவை பரவலாகக் காணப்படுகின்றன. இப்பகுதிகளில் அவை காணப்படுவதற்கு பழைய அமைப்பு கொண்ட வீடுகள், சிறு விதைகளைக் கொண்ட பல வகை செடிகள் இன்றும் அங்கு இருப்பதுதான் முக்கிய காரணம். குருவிகள் வளர்வதற்கேற்ற சூழ்நிலை எங்கு அமைந்துள்ளதோ அங்கெல்லாம் அச்சிட்டுகள் இயல்பாகக் காணப்படுகின்றன .
மைனா, காகம் போன்று சிட்டுக்குருவிகளின் உணவுப் பழக்கமும், கூடு கட்டும் பழக்கமும் சூழ்நிலைக்கு தக்கவாறு மாற்றிக் கொள்ள முடியாததும் அவை குறைந்து, அழிந்து வருவதற்கு முக்கிய காரணம். உதாரணத்துக்கு காகம், தேன்சிட்டு போன்ற பறவைகள் கம்பிகளில்கூட கூடுகட்டுகின்றன.
வீட்டுச்சிட்டின் அளவுடைய பறவைதான் மஞ்சள் தொண்டைச் சிட்டு. (Yellow throated Sparrow). இச்சிட்டை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதனால் இச்சிட்டைப் பற்றி பெரிதாக பேசப்படுவதில்லை. இவை வேகமாக அழிந்து வருகின்றன. காலப்போக்கில் தமிழகத்தில் முற்றிலும் அழிந்துவிடுவதற்கும் வாய்ப்புள்ளது.
இது சிறு தானியங்கள் மட்டுமன்றி சோளத்தை மிகுதியாக விரும்பி உண்ணக் கூடிய பறவை. சோளம் விளைந்த காடுகளிலும், கதிர் அறுத்த களத்திலும் சிறுசிறு கூட்டமாக ஆங்காங்கே முன்னர் பரவலாகக் காணப்பட்டு வந்த நிலைமாறி, தற்போது இவற்றைக் காண்பது அரிதாகிவிட்டது. ஓராண்டுக்கு முன் தாராபுரம் பகுதியில் கடைசியாக இச்சிட்டைப் பார்த்தேன். அன்பர்கள் யாராவது மஞ்சள் தொண்டை சிட்டை பார்க்க நேர்ந்தால் தெரிவிக்கவும்.
வீட்டுச்சிட்டை போன்ற இயல்பைக் கொண்டதாக இருந்தாலும் நகர்ப்புறங்களில் இதைப் பார்க்க முடியாது. வனத்தை ஒட்டிய திறந்தவெளிப் பகுதிகளிலும், தானியங்கள் விளைந்த திறந்த காட்டுப் பகுதிகளிலும் மட்டுமே காணக்கூடியது.
இதன் கூடும் வீட்டுச்சிட்டைப் போன்ற அமைப்புடனே இருக்கும். வீட்டுச்சிட்டு ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்யும். ஆனால் இவை பிப்ரவரி, மே மாதங்களில் முட்டையிடுகின்றன. மரப்பொந்துகளில் 8 முதல் 40 அடி உயரம் வரை கூடு கட்டுகின்றன. ஒரு முறை திறந்த வெளியில் சோளக்காட்டுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த 12 அடி நீளமும் ஒன்றரை அங்குல விட்டமும் கொண்ட இரும்புக் குழாயின் முகத்துவாரத்திலிருந்து அரை அடி உள்ளே குச்சிகளையும் சருகுகளையும் கொண்டு அடைப்பு ஏற்படுத்தி இது கூடு கட்டியிருந்ததைப் பார்த்தேன். சாதாரணமாக 3&4 முட்டைகள் வரை இடும்.
இதன் முக்கிய எதிரி யாரென்று கேட்டால், மனிதன்தான். சிறுவர்கள் விளையாட்டாக உண்டி வில் கொண்டு அடிப்பது மட்டுமில்லாமல், சிலர் உணவுக்காகவும் இதை அழிக்கின்றனர். வளர்ப்புப் பூனை, காகம், சிறிய வல்லூறுகளான சின்ன வல்லூறு , சிவப்பு வல்லூறு போன்ற பறவைகளாலும் இதற்கு ஆபத்து ஏற்படுகிறது.
இப்பறவைகளை அழிவிலிருந்து பாதுகாக்க, இவை இருக்கும் இடத்தில் வாழ்பவர்கள் அவற்றை பாதுகாக்க முயற்சிக்க வெண்டும். சிறு தானியங்களான தினை, வரகு, ராகி போன்று இவை உண்ணக்கூடியவற்றைத் தேர்ந்தெடுத்து நாள்தோறும் வெளியே தூவி பழக்கினால் இவை முற்றிலும் அழிவதிலிருந்து பாதுகாக்க முடியும்.
கட்டுரையாளர் முகவரி: டி.ஆர்.ஏ. அருந்தவச்செல்வன், 414, ஆண்டவர் காம்ப்ளெக்ஸ், கிராஸ் கட் சாலை, கோவை 641 012, மின்னஞ்சல்:
சாலிம் அலியை உருவாக்கிய சிட்டு
உலகப் புகழ்பெற்ற பறவையியல் அறிஞர் சாலிம் அலி, பறவைகளின் மீது ஈடுபாடு கொண்டதற்கு அடிப்படையாக அவரது சிறு வயதில் ஒரு சம்பவம் நடந்தது.
அந்தக் காலத்தில் பலரது வீடுகளில் "ஏர் கன்" எனப்படும் குருவி சுடும் துப்பாக்கிகள் இருந்தன. சாலிமுக்கும் அப்படி ஒரு துப்பாக்கி பரிசாகக் கிடைத்திருந்தது. ஒரு நாள் தொண்டைப் பகுதியில் மஞ்சளாக, சற்று புதுமையாக இருந்த ஒரு குருவியை சாலிம் அலி சுட்டார். அந்தக் குருவியை அதற்கு முன் அவர் பார்த்ததில்லை. அது முற்றிலும் புதிதாக இருந்தது. நம்மிடம் உள்ள பறவைகளில் இருந்து இது மாறுபட்டிருக்கிறதே என்று அவருக்குத் தோன்றியது. அவரது மாமாவுக்குத் தெரிந்த சிலர் பி.என்.எச்.எஸ் எனப்படும் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தில் இருந்தார்கள். பறவைகள், உயிரினங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வது, சூழலை காக்க முயற்சிப்பதுதான் அந்த நிறுவனத்தின் வேலை. மஞ்சள் தொண்டைச் சிட்டு பற்றி அறிந்து கொள்வதற்காக, சாலிம் அந்த நிறுவனத்துக்கு சென்றார். அங்கு நிறைய பறவைகள் பதப்படுத்தி பாதுகாக்கப்பட்டன, அருங்காட்சியகங்களில் வைத்திருப்பதைப் போல. அப்பறவைகளால் கவரப்பட்ட சாலிம், தனக்குள்ளே இப்படி முணுமுணுத்துக் கொண்டார் "பறவைகளைப் பற்றி என்னவெல்லாம் முடியுமோ, அவற்றைப் பற்றி ஒரு நாள் படிப்பேன்" என்று.
பிற்காலத்தில் அவர் பறவையியல் அறிஞராக இந்தச் சம்பவமே காரணம். பின்னர் அவர் பி.என்.எச்.எஸ்ஸின் தலைவராக உயர்ந்தார். பி.என்.எச்.எஸ் தீவிரமான பணிகளில் ஈடுபடக் காரணமாக இருந்தவர் சாலிம் அலியே.