எதை எழுதுவது?
தெரிந்து தெளிந்து எழுதப்படும் பொருள் வாசகனின் உணர்வடுக்குகளில் ஊடாடி தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு மாறாக பத்திரிகையின் மேதாவித்தனத்தையோ அல்லது கடப்பாட்டையோ சுட்டுவதாக சுருங்கிக் கொள்கின்றன.
நுழைவுத்தேர்வு ரத்து ஆதரவு எதிர்ப்பு நீதிமன்றத் தீர்ப்பு மார்க் அள்ளும் மிஷின்களாய் பிள்ளைகளை வளர்த்தவர்கள் மடியில் பணத்தையும் நெருப்பையும் ஒன்றாக கட்டிக் கொண்டிருப்பதாக கதறுகின்றனர். கல்வியெனும் சூதாட்டக் களத்தில் வெட்டுக்காயாக வீழ்த்தப்படுவது யாரென்கிற விவாதம் சூடேறிக் கொண்டுள்ளது. கண்டதேவி தேரோட்டத்தில் நீதிமன்ற உத்தரவையும் துரும்பாக தள்ளி தலித் மக்களைத் தடுத்து நிறுத்திய ஆதிக்கச்சாதி திமிரை மறைத்து அமைதியாய் முடிந்ததென்று அலட்டிக்கொள்ளும் அதிகாரிகளின் தடித்தோல் புத்தி. இப்பிரச்னைக்கு தற்காலிக விடுப்புக்காலம் ஒருவருடம். அல்லது ஒவ்வொருவருடமும்.
வீரப்பனை கொன்றதாக நம்பப்படும் போலிசாருக்கு மின்னலடியாய் பதவி உயர்வு, பரிசுகள், அவர்களே கூசுமளவுக்கு பாராட்டுக்கள். ஆனால் அவர்கள் வீரப்பனை பிடிப்பதாய் கூறிக்கொண்டு அப்பகுதி பழங்குடியினர் மீது நடத்திய மனித உரிமை மீறல்களை ஆய்ந்த சதாசிவ கமிஷன் அறிக்கை எந்த குப்பைத்தொட்டியில் வீசப்பட்டுள்ளது என்பதும் தெரியவில்லை.
இடதுசாரி அமைப்புகளும் அறிவுஜீவிகளும் மதச்சார்பற்றவர்களும் நடத்திய ஆற்றல்மிக்க இயக்கங்களால் எச்சரிக்கை பெற்ற மக்கள், சங் பரிவார ஆட்சியை வீழ்த்தினர். ஆட்சியிலில்லாத காலம் முழுக்க இலவம் பஞ்சுத் திண்டுகளில் திண்டுகளாகவே சாய்ந்து கொண்டு காரியக்கமிட்டி கூட்டங்களை நடத்தி தேச சேவையாற்றிக் கொண்டிருந்த காங்கிரசாரைக் கூப்பிட்டு நீங்கள் பண்ணின அழும்புகளால் தான் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள், இன்னொருமுறை வரவிடாமல் தடுக்கிற மாதிரி மக்களுக்கு விசுவாசமாக ஆளுங்களென்று பணித்தார்கள்.
ஆனால் பா.ஜ.க. விற்காமல் விட்டுப் போனதையெல்லாம் விற்று செலவழிக்கத்தான் தாங்கள் ஆட்சிக்கு வந்ததான நினைப்பிலிருக்கிறது காங்கிரஸ். மதவாதத்தை எதிர்ப்பதற்காக காங்கிரசை ஆதரிப்பதன்றி இடதுசாரிகளுக்கு நாதியில்லை என்கிற கொழுப்பில் எதையும் செய்யத் துணிந்துள்ளது அது. காங்கிரசாரின் பதவி சுகத்திற்கு இடதுசாரிகளின் ஆதரவு மட்டுமல்ல, ரத்தமும் தேவையாயிருக்கிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராடும் இடதுசாரித் தொண்டர்கள் போலிசிடம் அடிபட்டு ரத்தம் சிந்துகின்றனர்.
அம்மணமாய் வந்த ராசாவின் உடை அழகாயிருப்பதாய் புளுகிய அரண்மனை விசுவாசிகளைப்போல சுந்தரராமசாமியின் கதைக்கும் அசோகமித்திரன் பேட்டிக்கும் ஜெயகாந்தன் உளறல்களுக்கும் ஆளாளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு விளம்பும் பதவுரை பொழிப்புரைகளால் இலக்கிய வாசகன் திணறித்தான் போனான். கட்டுடைத்தல், உடைத்ததை உருண்டை பிடித்து உரலிலிட்டு இடித்தல் என்று ஒரு பிரதியை ஓராயிரம் பிரதியாக வாசிக்குமாறு கடந்த காலங்களில் வாதாடியவர்களெல்லாம் இன்று ஒற்றை வாசிப்பை உபதேசிக்கின்றனர்.
குடுமி வைத்துக் கொள்ள முடியவில்லையே என்று குமுறி குமுறியழுது கூவத்தை ரொப்பிக் கொண்டிருப்பவர்களையும், அவர்களது வாசிப்பு மற்றும் போஷிப்பு அடிமைகளையும், பேரணைக்குள் முழுகடிக்கப்படும் நர்மதா நதிதீரத்தின் மைந்தர்களது உரிமைக்காகவும் ஈராக்கிலிருந்து அமெரிக்கக் கொலையாளிகள் வெளியேற வேண்டுமென்றும் மனிதவுரிமைப் போராளியாக சொல்லிலும் செயலிலும் ஆவேசம் கொண்டெழுந்திருக்கும் அருந்ததிராயையும் எழுத்தாளர் என்ற ஒரே பெயரால் சுட்டுவது சரிதானா என்ற கேள்வி இப்போதாவது எழ வேண்டும்.
மக்களைத்தேடி வனாந்திரங்களில் அலையும் மகாஸ்வேதாதேவிக்கு கிடைத்த விருதை மடங்களை நக்கி வாலாட்டுபவர்களும் பெறுகிற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு உற்றுப் பார்க்காத வரை எதுவுமே உறுத்துவதில்லை .
காலங்காலமாய் கண்ணில் ஏறியிருக்கும் புரையை நீக்கிக் கொள்ளாமல் காட்சிப் பிழையென பாவித்துக் கொள்ளும் மனப்பாங்கிலிருந்து விடுபடும்போது ஒவ்வொன்றின் உள்ளுறை அரசியலையும் உணர முடியும் நம்மால்.
ஆசிரியர் குழு
ச. தமிழ்ச்செல்வன்
நாறும்பூநாதன்
ஜா. மாதவராஜ்
ஜே. ஷாஜகான்
உதயசங்கர்
கமலாலயன்
நிர்வாகக்குழு
ந. பெரியசாமி
ப. சிவகுமார்
சி. சிறி சண்முகசுந்தரம்
இரா. ரமேஷ்
ஆசிரியர்
ஆதவன் தீட்சண்யா
படைப்புகள் / நன்கொடை அனுப்ப:
PUTHU VISAI
B2, BSNL QUARTERS
HOSUR - 635109
TAMIL NADU
INDIA
|