சுதந்திரத்திற்காக போராடி அளப்பரிய தியாகங்களை வெளிப்படுத்திய தலைமுறையினர் இன்னும் கொஞ்சம்பேர் எஞ்சியிருக்கும் காலத்திலேயே அந்த சுதந்திரம் மீண்டும் பறிபோகிற அவலம் இந்தியாவைத் தவிர வேறெந்த நாட்டிற்கும் நேர்ந்திருக்காது.
பன்னாட்டுப் பொருட்கள் வெள்ளமெனப் பெருக்கெடுத்து நாட்டையே மூழ்கடித்துக் கொண்டிருக்கும் இத்தருணத்திலும் சுதந்திரதினத்தன்று சுதேசித் துணியாலான தேசியக்கொடியே ஏற்றப்பட்டிருப்பது குறித்து அன்னிய முதலீட்டாளர்கள் யாரும் ஆட்சேபம் தெரிவிக்காதது ஆச்சர்யம்தான்.
உலகமயமாக்கலிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள முடியாது, ஆகவே அதற்கு உடன்படுவது என்கிற செயலற்றத்தன்மைக்குள் மொத்த சமூகமும் வீழ்ந்து கொண்டிருக்கிறது. தடுக்க முடியாததையெல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்கிற கருத்தின் அடிமைகள் சுயமரியாதையுடனான வாழ்வுக்குரிய போராட்டங்களை தடுக்கும் முட்டுக்கட்டைகளாக வரலாறு நெடுக நெளிந்து கொண்டிருக்கின்றனர்.
உலகமயமாக்கலின் நேரடி விளைவாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பளித்து வந்த அரசுத்துறைகள் ஆளெடுப்பதை நிறுத்திவிட்டன. அல்லது இதுவரையிலும் இடஒதுக்கீட்டை அனுமதிக்காத தனியார்களின் கையில் ஒப்படைக்கப்படுகின்றன. தனியார்மயத்தை தடுப்பதற்கான போராட்டத்தின் இன்னொரு பரிமாணமாக, சமூகத்தின் பொதுவளங்களை உறிஞ்சி வளர்ந்துள்ள தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. லாபம் தவிர வேறொன்றையும் அறியாத முதலாளிகளின் இடஒதுக்கீட்டு எதிர்ப்பு கருத்துக்கு இப்போது உச்ச நீதிமன்றமே வலு கூட்டியுள்ளது.
சுயநிதிக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு குறித்த வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பும், அதன் விளைவாய் பாதிக்கப்படும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை காக்கவும் சட்டத்திருத்தம் கொண்டுவருவதாக மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் முயற்சிக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துக்களும் இந்நாட்டில் சமூகநீதி என்கிற அடிப்படையையே கேள்விக்குறியாக்கியுள்ளன. இது குறித்த வெகுமக்களின் ஆவேசத்தையும் நியாயத்தையும் நாடாளுமன்றம் பிரதிபலித்திருப்பது வரவேற்கக்கூடியதே. சுயநிதிக் கல்லூரிகளில் மட்டுமல்ல, ஐஐடி போன்ற நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் சட்டத்திருத்தம் உடனடித் தேவை.
நீதிமன்றங்களை சமூகத்திற்கு கட்டுப்பட்டதாகவும் ஜனநாயகத் தன்மை கொண்டதாகவும் நெறிப்படுத்தும் அமைப்பொன்று தேவை. மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள நீதிக்கவுன்சில் இந்த நோக்கங்களை செயல் எல்லைகளாக கொள்ளுமானால் ஜூடிசியல் ஆக்டிவிசம் என்ற பெயரால் நடைபெறும் அத்துமீறல்களை ஓரளவேனும் தடுக்கமுடியும்.
ஆசிரியர் குழு ச. தமிழ்ச்செல்வன் நாறும்பூநாதன் ஜா. மாதவராஜ் ஜே. ஷாஜகான் உதயசங்கர் கமலாலயன் நிர்வாகக்குழு ந. பெரியசாமி ப. சிவகுமார் சி. சிறி சண்முகசுந்தரம் இரா. ரமேஷ் ஆசிரியர் ஆதவன் தீட்சண்யா படைப்புகள் / நன்கொடை அனுப்ப: PUTHU VISAI B2, BSNL QUARTERS HOSUR - 635109 TAMIL NADU INDIA ஜூலை-05 இதழ் |