சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு எழுதிக் கொடுப்பதைப் படிக்க வேண்டிய ஆளுநர் பெரியார், அண்ணா, கலைஞர், திராவிடம் என்ற சொல்லாடலைத் தவிர்த்து விட்டு வாசிப்பதும், திராவிடம் இன்று காலாவதியாகி விட்டது என்பதும், தமிழ்நாட்டின் பொதிகைத் தொலைக்காட்சியில் இந்தி மாத நிறைவு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் இடம் பெறும் “திராவிட நல் திருநாடும்” என்கின்ற வரியைக் கூட ஆளுநர் தவிர்க்கச் சொல்வதும் (அ) ஆளுநருக்காகத் தவிர்க்கப்படுவதும் திராவிடத்தின் மீதான பகைமையைப் பறைசாற்றும் சான்றாகவே உள்ளன.
திராவிடம் என்ற சொல்லை மறைத்து விட்டால், திராவிடத் தத்துவம் ஒழிந்து விடும் என்று நினைக்கிறார் ரவி. தமிழ்நாட்டின் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆளுநரா? ஆரியநரா? என்று குறிப்பிட்டது போல கடைசி ஆரிய ஆதிக்கவாதி இல்லாமல் ஆக்கும் வரை திராவிடம் இந்த மண்ணில் பரவிக் கிடக்கும் என்பதை ரவி போன்றோர் உணர வேண்டும்.
“தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழகம், தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியதுதான். ஆனால் தற்போது திராவிடம் என்றால் தமிழ் இனம் என்று கூறக்கூடிய அளவிற்கு சுருக்கப்பட்டுள்ளது” என்று ஆளுநர் கூறி இருப்பது அறியாத பிள்ளைக்கு பேச்சைப் போன்று உள்ளது.
தமிழ் இலக்கியங்களில் பார்ப்பன எதிர்ப்புணர்ச்சி பல இடங்களில் இருப்பதை நினைவூட்ட வேண்டியது அவசியமாகிறது.
“பார்ப்பானைத் தீப்போல கருதி ஒதுக்கி வை” என்கிறது திரிகடுகம்.
“பற்பல நாட்டிலும் பார்ப்பாரில்லையால்…” என்கிறது கபிலரின் அகவல்.
தெலுங்கர்கள், மலையாளிகள் போன்ற மற்ற திராவிட மொழிக்காரர்களைக் காட்டிலும் ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தைத் எதிர்ப்பதிலும், பார்ப்பனப் பண்பாட்டுத் திணிப்பை, மொழித் திணிப்பை, அதிகாரச் சுரண்டலை, வர்ணஜாதி முறையை அழித்தொழிப்பதிலும் தமிழர்கள் எப்போதும் தயக்கம் காட்டியதில்லை. எனவேதான் திராவிடக் குடும்பத்தின் சகோதர மொழிக்காரர்கள் ஆரியப் பார்ப்பன சமஸ்கிருதப் பண்பாட்டை ஏற்றுக் கொண்டாலும், பார்ப்பன எதிர்ப்பு எனும் நிலைத்த தன்மையோடு தமிழர்கள் கடுமையான பார்ப்பன எதிர்ப்புணர்வுடன் இருப்பதற்குக் காரணம் திராவிட இன உணர்வே ஆகும்.
திராவிடம் தமிழ்நாட்டோடு சுருங்கி விட்டது என்று பாஜக சொல்கிறது. ஒவ்வொரு முறையும் ஒன்றிய அரசு ஆரிய ஆதிக்கத்தை, இந்தித் திணிப்பை மற்ற மாநிலங்களின் மீது திணிக்கும் போது கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் திராவிட நாடு கோரிக்கை எழுவதை ஆளுநர் ரவி மறந்து விட்டார் போலும். இந்திய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஆரிய திமிர்த்தனத்தின் நடு மண்டையில் இடி விழுந்தாற் போல் “You all Aryan tribes came from the outside; we (dravidians) are the natives of the land ” இந்த மண்ணின் பூர்வ குடிகள் நாங்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முழங்கியதை ஆளுநருக்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது.
திராவிடம் தமிழ்நாட்டோடு நின்றுவிடவில்லை. நீறு பூத்த நெருப்பாய் மக்களின் உரிமையை ஆரியம் அபகரிக்கும் போது, இயல்பாய் எழுகிறது திராவிட நாடு கோரிக்கை என்பதை உணர்ந்தால் ஆளுநர் ரவிக்கும், அவரது கட்சிக்கும் நல்லது.
“தமிழ் என்றாலே பார்ப்பானுக்கு வேம்பு” என்று 1954இல் குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலையில் எழுதினார். திராவிடத்தைப் (பார்ப்பன எதிர்ப்பை) பேசும் தமிழையும் தமிழரையும் கண்டால், ஏன், காதால் கேட்டால் கூட பார்ப்பனர்களுக்கு வேம்பாகத்தான் உள்ளது என்று இத்துணை ஆண்டுகளுக்குப் பிறகும் நிரூபிக்க வந்தவர்தான் ரவி.
ஆங்கிலம் இல்லாவிட்டால் சமஸ்கிருதம் நிலைநாட்டப்பட்டிருக்கும், அது முடியாவிட்டால் ஹிந்தி! இதுதான் அக்கிரகார சதி திட்டம். ஆனால் இந்தியை விரட்டி ஆங்கிலத்தை அமர்த்தி தமிழர் வாழ்வில் வெளிச்சத்தை நிரந்தரமாய்த் தந்துவிட்டனர் பெரியாரும், அண்ணாவும். திராவிடத்தின் மீது தீரா கோபமாய் வெடிப்பது தமது சுபாவமாய் கொண்டிருக்கிறார்கள் ரவி வகையறாக்கள்.
தமிழ் தொலைக்காட்சியில் எதற்கு இந்தி மாத நிறைவு விழா? விழாவில் தமிழ்நாட்டு மக்களின் தமிழ்த்தாய் வாழ்த்தின் “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்” என்ற வரியை மட்டும் தவிர்த்துப் பாட வேண்டியதன் அவசியம் என்ன? 50 ஆண்டுகாலம் திராவிடம் பேசுவோர் நாட்டைப் பிரிக்க முயற்சிக்கின்றனர் என்கிறார் ரவி. ஆனால்
பிரிவினைக்கு நாம் முயலவில்லை. இந்த நாட்டின் இறையாண்மையை, சகோதரத்துவத்தைக் காக்க, நாம் தான் முன்னணியில் நிற்கிறோம். பிரிவினையை உருவாக்க வேண்டும் என்று எண்ணி, மக்கள் விரோதப் போக்கில் நாள்தோறும் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ். பிஜேபியினர் நம்மைப் பிரிவினைவாதிகள் என்பது இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை.
பாஜக ரவிக்களின் நினைவில் நிற்கத்தான் பேரறிஞர் அண்ணா அன்றே எச்சரித்திருக்கிறார். “திராவிட நாடு கோரிக்கைதான் கைவிடப் பட்டது. ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன” என்று. திராவிடத்தை, தமிழர்களைப் புறந்தள்ளி ஆரிய, பார்ப்பனச் சிந்தனையைப் புகுத்த நினைக்கும் ஆளுநர் ஆரியநரே. திராவிடம் என்றாலே பார்ப்பனருக்கு வேம்பு என்பது உண்மைதான்.
- த.மு.யாழ்திலீபன்