“தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள், நவம்பர் 1!

தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்குப் போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் போற்றி வணங்குகிறேன்!”

 என்று தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். எனவே நவம்பர் 1ஆம் நாளுக்கு உரிய மதிப்பை யாரும் புறந்தள்ளி விடவில்லை. ஆனாலும், இதனைத் தமிழ்நாடு நாள் என்று கொண்டாடாத திராவிடம் என்று சொல்லித் தமிழ் தேசியர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் சிலர், நேற்று கடுமையாகப்  பேசி உள்ளனர். 

இந்தத் தருணத்தில் மட்டுமல்லாது, இந்தத் திராவிடமே தமிழுக்கு எதிரி என்பதாகத் தொடர்ந்து அவர்கள் பேசி வருகின்றனர். ஆரியமே தமிழுக்கு எதிரி என்பதை மறைப்பதற்கு அவர்கள் அரும்பாடு படுகின்றனர்.

திராவிடம் என்னும் சொல் சங்க இலக்கியத்தில் இருக்கிறதா? ஆங்கிலேயர் கொடுத்த பெயர்தானே என்று திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தங்களைத் தமிழ் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் அவர்கள், இந்து என்னும் சொல் மட்டும் சங்க இலக்கியத்தில் இருக்கிறதா என்பது பற்றிப் பேசுவதில்லை. இந்து என்கிற சொல் ஆங்கிலேயர்கள் நமக்குக் கொடுத்த பெயர் என்று அவர்களின் குருநாதர் சங்கராச்சாரியாரே தெய்வத்தின் குரல் நூலில் பதிவு செய்து இருக்கிறார். அது பற்றியும் அவர்கள் பேசுவதில்லை. 

ஈ.வெ.ரா. தான், திராவிடம் என்னும் சொல்லை அறிமுகப்படுத்தி, தமிழர்களின் பெருமையை மறைத்து விட்டார் என்று கூசாமல் பொய் பேசுகின்றனர். 1944ஆம் ஆண்டுதான் திராவிட கழகம் பிறந்தது. ஆனால் 1890களிலேயே, தங்கள் அமைப்பிற்கு திராவிடம் என்னும் சொல்லைச் சேர்த்து வைத்த அயோத்திதாசப் பண்டிதர் அவர்களைப் பற்றியோ, ரெட்டை மலை யார் பற்றியோ இவர்கள் பேசுவதில்லை!

பண்டிதர்,  தான் தொடங்கிய இதழுக்குத் தமிழன் என்றுதான் பெயர் வைத்தாரே தவிர, திராவிடன் என்று வைக்கவில்லை என்கிறார்கள். சரிதான். ஆனால் தமிழன் ஏட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில், திராவிடர் என்னும் சொல்லையே பண்டிதர் பயன்படுத்தியிருக்கிறார். 1910ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது (1911), தங்களின் பெயர்களை எல்லோரும் சாதி மதமற்ற திராவிடர்கள் எனப் பதிவு செய்து கொள்ளுங்கள் என்றும் பண்டிதர் எழுதுகின்றார். 

அவர்கள் தமிழர் என்று ஏற்றுக்கொள்ளும் நடேசனார் 1912 ஆம் ஆண்டே, திராவிடர் சங்கத்தையும், திராவிடர் மாணவர் விடுதியையும் தொடங்கினார் என்பது வரலாறு! 

1944 இல் தொடங்கப்பட்ட திராவிடர் கழகம், காலையில் தமிழர் கழகம் என்று பெயர் சூட்டப்பட்டு, மாலையில் பெயர் மாற்றப்பட்டது என்று எந்தச் சான்றும் இல்லாத ஒரு பொய்யைத் தொடர்ந்து கூறி வருகின்றனர். அந்த மாநாடு மாலையில்தான் தொடங்கிற்று என்பதையும், காலையில் பேரணி மட்டும்தான் நடந்தது என்பதையும் அவர்கள் அறிவார்களா என்று தெரியவில்லை. 

திராவிடம் தமிழுக்கு எதிரானது என்றால், மறைமலை அடிகளார் பெரியாரோடு கைகோத்து இருப்பாரா? தன் நாட்குறிப்பில், தன் இறுதி நாள்களில் கூட பெரியாரைப் பாராட்டி எழுதி இருப்பாரா? திராவிட மொழி நூல் ஞாயிறு என்னும் பட்டத்தைப் பாவாணர் 1957 இல் ஏற்றிருப்பாரா? திருவள்ளுவர், மறைமலை அடிகள், பெரியார் என்று தமிழர்களின் தலைவர்களைப் பாவாணர் வரிசைப்படுத்தி இருப்பாரா? பாவலரேறு பெருஞ்சித்திரனார் பெரியாரைப் பாராட்டி அப்படி ஒரு கவிதை எழுதி இருப்பாரா ? 

எனவே நவம்பர் ஒன்றில் மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளும் திராவிடத்தைத் தாக்குவதே தங்கள் பணி என்று கருதிச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள், சனாதனத்தின் கைக்கூலிகளே என்பது வெளிப்படையாகத் தெரிகிறது!

- சுப.வீரபாண்டியன்