தனித்தமிழ் இயக்கம் மற்றும் சுயமரியாதை இயக்கம் தொடங்கிய காலம் தொட்டு திராவிட இயக்கத்தைச் செழுமைப்படுத்தியதில், போராட்டங்களில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பெண்களின் தியாக வரலாற்றை உலகுக்கு எடுத்துக் கூறும் நோக்கில் திராவிடர் கழகம் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள்

arulmozhi book on dravidiansமுத்தமிறிஞர் கலைஞரின் மூத்த பிள்ளையாகிய முரசொலியில்,

நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கம் கடந்து வந்த வலி நிறைந்த பாதையைத் திராவிட இயக்க வரலாற்றை அடுத்தத் தலைமுறை இளைஞர்களுக்கு எடுத்துச் செல்லும் நோக்கில்,மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் தி.மு.க. கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளர் முன்னெடுப்பில் உருவாக்கப்பட்ட பாசறைப் பக்கத்தில்

எழுதிய தொடர் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் வெளியிடாக வந்திருக்ககூடிய நூல் திராவிடப் போராளிகள்.

சங்க இலக்கியக் காலம் தொடங்கிப் பெண்களுடைய பங்களிப்பும் முக்கியத்துவம் பெரிதும் பேசப்படாத ஒன்றாகவே இருந்திருக்கிறது.

“பெண்கள் வருவதன் மூலமும் அவர்கள் வளர்ச்சி பெருகுவதன் மூலமும்தான் நமது கொள்கைகள் வீறிட்டெழ முடியுமே தவிர, “ஆண்களின் வீர உரைகளால் மாத்திரம்” காரியங்கள் சாத்தியமாகி விடாது” என்று 1931 ஆம் ஆண்டு ஈரோடு சுயமரியாதை மாநாட்டுக்கு பெரியார் அழைப்பு விடுத்தார்.

திராவிட இயக்கம் இந்த மண்ணில் வேரூன்றியதற்குப் பின்னால் தான். பெண்களுக்குச் சம வாய்ப்பு சம உரிமையும் கிடைத்திட வேண்டும் என்ற முழக்கம் வலிமை பெற தொடங்கியது.

பெரியாரின் பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம், சட்ட எரிப்புப் போராட்டம், குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டம், மாநாடுகள், கைது, சிறைவாசம் கண்ட பெண் போராளிகளுடைய வாழ்க்கை நமக்கு வியப்பை தரக்கூடியது.பேசப்பட வேண்டிய அந்த பெண் போராளிகளின் வரலாற்றை ஆழமான தரவுகளுடன் விரிவாகப் பேசும் நூல் திராவிடப் போராளிகள்.

தனித்தமிழ் இயக்கத்தையும் நீதி கட்சியையும் உருவாக்கிய அதில் ஈடுபட்ட தலைவர்கள் என மறைமலை அடிகள், டாக்டர் நடேசன், தியாகராயர், டி.எம். நாயர் உள்ளிட்ட ஆண்களின் வரலாற்றைப் படித்திருக்கிறோம்.

தனித்தமிழ் இயக்கத்தின் தாயாக நீலாம்பிகை அம்மையார் இருந்தார், நீதிக்கட்சியின் தோற்றத்திற்காகக் கூடிய முதல் கூட்டத்தில் அலர்மேலு மங்கை தாயாரம்மாள் என்ற ஒரு பெண் ஆளுமை இருந்தார்.

தந்தை பெரியார் காங்கிரஸ் இயக்கத்தில் செயல்பட்டு வந்தபோதே மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் காங்கிரஸ் இயக்கச் செயலாளராகத் தேவதாசி முறையை ஒழிப்பதற்காகப் போராடி வந்தார்.

பின்னாளில் 1938ஆம் ஆண்டுத் திருச்சியில் இருந்து அஞ்சான், பட்டுக்கோட்டை அழகிரி ஆகியோர் தலைமையில் தமிழர் பெரும்படை தலைநகரம் சென்னையை நோக்கி வழிநெடுக இந்தியை எதிர்த்துப் போர் பரணி கொட்டி பிரச்சாரம் செய்து வந்த 100 பேரைக் கொண்ட அந்த  தமிழர் பெரும்படையில் பங்கேற்ற மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் என்றால் அது சாதாரணமா. அவருக்கு அப்போது வயது 60 .

காந்தியார் அறிவித்த மதுவிலக்குப் போராட்டத்தில் தந்தை பெரியாரின் துணைவியார் ஈ.வே.ரா நாகம்மை அவர்களும் பெரியாரின் தங்கை எஸ்.ஆர் கண்ணம்மாள் அவர்களும் தடையாணையை மீறி களத்தில் இறங்கி போராடி ஒரு மாதம் சிறை தண்டனை பெற்றார்கள்.மதுவிலக்குப் போராட்டத்தைக் கைவிடுவதா? அல்லது தொடர்வதா ? என்பது நம் கையில் இல்லை ஈரோட்டில் இருக்கும் இரு பெண்களின் கைகளில் தான் இருக்கிறது என்று பம்பாய் காங்கிரஸ் மாநாட்டில் காந்தியார் குறிப்பிடும் அளவுக்குக் கடும் பணியாற்றினர்.

பெரியார் அறிவித்த இந்திய எதிர்ப்புப் போராட்டத்திலும்,சட்ட எரிப்பு போராட்டத்திலும் சற்றும் அஞ்சாது நிறைமாத கர்ப்பிணிகளாக, கைக் குழந்தைகளுடன் குடும்பத்தோடு சிறை சென்று சிறையிலேயே குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்களின் பங்களிப்பைப் பற்றி எல்லாம் அதிகம் பேசப்படவே இல்லை .

சங்க இலக்கியத்தில் 44 பெண்கள் எழுதிய பாடல்கள் கண்டறியப்பட்டுள்ளன. அழிக்கப்பட்டவை எத்தனையோ கிடைக்காதவை எத்தனையோ என்று நாம் அறிய முடியாது.சங்க இலக்கியக் காலத்திற்குப் பின்னால் ஒரு தொகுப்பாகப் பெண்களின் தியாகத்தையும் பங்களிப்பையும் பற்றிப் பேசும் வாய்ப்பு திராவிட இயக்கத்தில்தான் அமைந்துள்ளது.

அத்தகைய வரலாற்றையெல்லாம் தேடி கண்டுபிடித்து வெளிவுலகத்திற்குப் பறைசாற்றும் வகையில் அமைந்திருக்கக் கூடிய அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் திராவிடப் போராளிகள்.

- திருப்பூர் மகிழவன்