திராவிட இயக்கம் என்பது பார்ப்பனரல்லாத மக்களுக்கு அதிகாரத்தில் சமபகிர்வு தரவேண்டும் என்ற நோக்கில், நீதிக்கட்சி ஆட்சியில் கம்யூனல் ஜி ஓ வில் தொடங்கி, இன்று கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில், 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு இருந்து கொண்டிருக்கிறது.
1987இல் அஇஅதிமுக ஆட்சியில், இட ஒதுக்கீட்டுக்காக போராடிய 21 வன்னியர்கள் கொல்லப்பட்டார்கள்.
எம்.ஜி.ஆர். அரசு கடைசிவரை இடஒதுக்கீடு வழங்காத நிலையில், 1989 - ஆண்டு மூன்றாம் முறையாக முதல்வர் பொறுப்பேற்ற கலைஞர்தான் வன்னியர்கள் உள்ளிட்ட சீர்மரபினர்(DNC) மற்றும் இன்னும் சில ஜாதிகளை இணைத்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) என்ற வகுப்பை உருவாக்கி, 20% இடஒதுக்கீட்டை வழங்கினார் கலைஞர். எம்.ஜி.ஆர் ஆட்சியில் போராட்டத்தில் உயிரிழந்த வன்னியர்களுக்கு இழப்பீட்டு தொகையாக 3 லட்சத்தையும், அவர்களின் குடும்பங்களுக்கு மாதம் 3 ஆயிரம் ஓய்வூதியத் தொகையையும் வழங்கினார் கலைஞர்.
ஒரு சிலரின் சுயநல அரசியல் நோக்கத்திற்காக அவர்களின் சமுதாயத்தை புறக்கணிக்கும் வழக்கம், திராவிட இயக்கத்திற்குக் கிடையாது.சீர்மரபினருக்கான இடஒதுக்கீடு, கொங்கு வேளாளர் சமுதாயத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது, முஸ்லிம்களுக்கு 3.5% தனி ஒதுக்கீடு, அருந்ததியர் சமுதாயத்திற்கு 3% உள்ஒதுக்கீடு, பழங்குடியினருக்கு 1% இடஒதுக்கீடு என அனைத்தும் கலைஞர் தலைமையிலான தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்டவை. 2020இல் வன்னியர்களுக்கு 10.5% தனி ஒதுக்கீடு வேண்டும் என்ற அடிப்படையில் போராட்டமும், சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு அரசியல் பேரமும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. பாமக இரண்டிலும் வெற்றி பெற்றது.
10.5% வன்னியர் இட ஒதுக்கீடு
தேர்தல் அறிவிப்பு வருவதற்கு 4 மணி நேரத்துக்கு முன் அவசர அவசரமாக தாக்கல் செய்யப்பட்ட மசோதா தான் இந்த வன்னியர் உள்இடஒதுக்கீடு மசோதா.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நேரத்தில், இந்த உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் தேர்தல் ஆதாயத்துக்காக, அன்றைய எடப்பாடி பழனிசாமி அரசு அவசர கதியில் இடஒதுக்கீடு வழங்கியதாக விமர்சனம் எழுந்தது.
பா.ம.க-வின் நீண்டகால கோரிக்கைக்கு கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்பட்டாலும், சட்டமன்றத் தேர்தலில், இந்த உள்ஒதுக்கீடு எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. பா.ம.க., போட்டியிட்ட 23 தொகுதிகளில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகள் வந்து ஓராண்டாவதற்குள் இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது. ஒரு தொகுப்பிற்குள் உள்ள பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால் அந்தத் தொகுப்பில் உள்ள மற்ற சமூக பிரிவுகளைக் காட்டிலும் அவர்கள் மிகவும் பின்தங்கியவர்களாக இருக்க வேண்டும். என்பதை வன்னியர் உள்ஒதுக்கீட்டை ரத்து செய்த தீர்ப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் அரசமைப்புச் சட்ட விதிகளையும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் மறைத்து விட்டு, ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க மறுக்கும் ஒன்றிய பிஜேபி அரசுடன் கூட்டணியில் இருந்து கொண்டே, தன்னுடைய வாக்கு வங்கி அரசியல் நலனுக்காக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்களும், அன்புமணி அவர்களும் தொடர்ச்சியாக உள்ஒதுக்கீட்டுக்குத் தடையில்லை என்று தவறாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணிகளில் 2013 முதல் 2022 வரையிலான 10 ஆண்டுகளில் வன்னியர்கள் பெற்றிருக்கும் பிரதிநிதித்துவம் குறித்த RTI தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் அடிப்படையில், பா.ம.க. தற்போது கோரிவரும் 10.5% உள்ஒதுக்கீட்டை விட அதிகமான பதவிகளை வன்னியர்கள் பெற்றுள்ளனர்.
1. MBC / DNC 20% இட ஒதுக்கீட்டின் கீழ் முதுகலை மருத்துவச் சேர்க்கை பெற்ற 1,363 மாணவர்களில், வன்னியர்கள் 694 பேர் (10.2%), மற்றவர்கள் (MBC) 636 பேர் (9.1%) மற்றும் DNCயினர் 279 பேர் (4%) .
2. மொத்தமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட 1,919 சப்-இன்ஸ்பெக்டர்களில், 327 (17%) வன்னியர்கள். பிற MBC ஜாதியினர் 152 பேர் (7.9%) , DNC 126 பேர் (6.6%).
3. மொத்தமுள்ள 8379 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பதவிகளில், வன்னியர்கள் 1,185 (10.8%) பேர், மருத்துவத் துறையின் மொத்த ஆட்சேர்ப்பில் 1,433 (17.1%) வன்னியர்கள் உள்ளனர்.
4. ஆசிரியர்களைப் பொறுத்தவரை, 2021இல் மட்டும் TRBஆல் MBC/DNC ஒதுக்கீட்டின் கீழ் பணியமர்த்தப்பட்ட 634 முதுநிலை ஆசிரியர்களில், 383 பேர் வன்னியர்கள். மொத்தமுள்ள 3,044 முதுநிலை ஆசிரியர்களில் வன்னியர்களின் பங்கு 17.5% ஆகும்.
5. எஞ்சினியர் பதவிகளில் வன்னியர்கள் எண்ணிக்கை 14.4% ஆகும்.
6. நீதித்துறையில் சிவில் நீதிபதி பதவியில் வன்னியர்கள் 9.9%, பா.ம.க. மருத்துவர் இராமதாஸ் கேட்கும் 10.5% என்ற கோரிக்கை உண்மையாகவே வன்னியர்களுக்கு எதிரான கோரிக்கை என்பதையும் இந்தத் தரவுகள் உறுதி செய்கின்றன.
உண்மையான தரவுகள் வெளிவந்த பின்னரும் தங்களின் தனிப்பட்ட அரசியல் இலாபத்திற்காக, அரசியல் நாகரிகத்தை புறந்தள்ளி, முதல்வரை ஒருமையில் பேசும் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் பேச்சும், வாய்க்கு வந்தபடியெல்லாம் பொய்ச் செய்திகளை பேசி பரப்பி வரும் அன்புமணி அவர்களின் பேச்சும் கண்டிக்கத் தக்கதாகும்.
- திருப்பூர் மகிழவன்