கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

சென்ற 2023 ஆம் ஆண்டு பெரும் புயலைக் கிளப்பியது அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அதானி குழுமத்தின் பங்குச் சந்தை ஊழல் குறித்த அறிக்கை. அதானியின் பங்குகள் பங்குச் சந்தையில் பெரும் அடி வாங்கின. உடனடியாக அந்த நிறுவனம் பல சொத்துகளை விற்று அந்த நட்டத்தை ஈடு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் அந்த முறைகேடு குறித்து விசாரிக்க வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித உச்ச நீதிமன்றம், இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையமான செபி (SEBI) யிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தது. அந்த 6 பேர் கொண்ட குழு விசாரனைக்குப் பின் தன் அறிக்கையை இந்த ஆண்டு மே மாதம் அளித்தது. அதில், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டு பரிவர்த்தனைகளில் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் இருப்பதாகவும், ஆனால், எப்படி விதிமீறல்கள் நடந்தன எனக் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் அது அறிக்கை அளித்திருக்கிறது.

அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றமும், அதானி குழுமத்தின் மோசடிகள் குறித்த எந்த முகாந்திரமான தரவுகளும் இல்லை என்றும், அது தொடர்பான செபியின் விசாரணையில் தாங்கள் தலையிட முடியாதென்றும் ஒதுங்கிக் கொண்டது. மோடியின் நட்பு இது கூடச் செய்யாதா? பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் மீண்டும் ஏறத் தொடங்கின. அப்பாடா என அவர்கள் மூச்சு விடுவதற்குள், இதோ இரண்டாவது அறிக்கையைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டது ஹிண்டன்பர்க் நிறுவனம்.

யாரோ ஒரு விசில் ப்ளோயர் (whistle blower), செபியின் இன்றைய தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோருக்கு அதானி குழுமத்தின் வெளிநாட்டு நிறுவனங்களில் கணிசமான பங்குகள் இருப்பதாக விசில் அடித்து (அதாவது பெயர் குறிப்பிடாமல், ஒரு அமைப்புக்கு உள்ளே நடக்கும் முறைகேடுகளை ஏதேனும் வகையில் தெரியப்படுத்திவிடுவது) விட்டதாகச் சொல்லி இருக்கிறது.

யாரிந்த மாதபி புச்? இந்தப் பெண்மணி நிதி அமைச்சகத்தின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் செபி அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டவர். அவ்வாறு நியமிக்கப் படுவதற்கு முன், அவர் முன்பு ஹிண்டன்பர்க் குறிப்பிட்ட அதானியின் போலியான வெளிநாட்டு நிறுவனங்களில் பங்குகள் வைத்திருந்ததாகவும், அவற்றை அவசர அவசரமாக தன் கணவர் பெயருக்கு மாற்றியதாகவும் தெரிகிறது. ஐபிஇ ப்ளஸ் என்ற மொரீஷியஸ் நாட்டில் தங்களுக்குச் சொந்தமான ஒரு நிதி மேலாண்மை நிறுவனத்தின் மூலமாக மாற்றியதாகத் தெரிகிறது. மொரீஷியஸ் நாடு, முதலீட்டாளர்கள் விரும்பும் வரிச் சலுகைகள் கொடுக்கும் நாடு. இதே போன்று வரி புகலிட நாடான பெர்முடாவில் குளோபல் டைனமிக்ஸ் ஆப்பர்சுனிட்டி ஃபண்ட் என்ற அதானி குழுமத்திற்குச் சொந்தமான நிறுவனம் தான் பங்குச் சந்தையில் அதானியின் பங்குகள் செயற்கையாக விலை உயர உதவி செய்தன என்றும் ஹிண்டன்பர்க் அறிக்கை கூறுகிறது. அப்படியான அந்த நிறுவனம் ஐபிஇ ப்ளஸ்சில் முதலீடு செய்துள்ளதும் ஹிண்டன்பர்க்கின் இரண்டாவது அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

2023 இல் அதானி குழுமத்தின் மோசடிகளை விசாரிக்க அமைக்கப்பட்ட 6 பேர் கொண்ட குழுவில் மாதபி புச் இருந்தாரா என்றால், அதை விசாரித்த செபி நிறுவனத்தின் தலைவராகவும், அந்த விசாரணையில் தன் விளக்கமும் அளித்துள்ளார் எனவும் தெரிகிறது. அதானி குழுமத்தின் மீதான விசாரணை அத்தோடு கைவிடப்பட்டதில் அவருடைய ஆர்வமும் பங்கும் நிச்சயம் உண்டு என இப்போது சந்தேகப்பட வேண்டி இருக்கிறது.

2022 ஆம் ஆண்டுதான், இந்தியப் பங்குச் சந்தையின் நுட்ப ரகசியங்களை ஒரு இமயமலைச் சாமியாருக்குக் கசியவிட்டு, தேசிய பங்குச் சந்தைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள்

நட்டத்தை ஏற்படுத்தியதாக சித்ரா ராமகிருஷ்ணன் எனும் பெண் கைது செய்யப்பட்டார். இவர்கள் பா.ஜ.க. வின் ஆசியோடு தலைமைப் பதவிகளைக் கைப்பற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியின் அதானியுடனான நட்பை தொடக்கம் முதலே விமர்சித்தும் எச்சரித்தும் வரும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள், ஹிண்டன்பர்க்கின் இந்த அறிக்கை குறித்து பேசுகையில், பங்குச் சந்தையில் ஏழை எளிய, நடுத்தர மக்களின் பணம் கணிசமான அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது, அதைப் பாதுகாக்கும் இடத்தில் இருக்கும் ஒரு தன்னாட்சி அமைப்பே, முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக வரும் செய்தியை நாடாளு மன்றத்தின் கூட்டுக் குழுவின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என கேட்டுள்ளார். உள்ளூர பதறிப் போயிருக்கும் மோடி அரசு, வழக்கம் போல இந்திய நாட்டுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கூட்டுச் சதி செய்வதாகச் சொல்லி பசப்பப் பார்க்கிறது.

இதுபோன்ற போலி நிறுவனங்களைத் தொடங்கியும், அது குறித்தப் போலிச் செய்திகளைப் பரப்பியும், ரகசியங்களை பெரு நிறுவனங்களுக்குப் பகிர்ந்தும், இப்போது தான் சிறுசிறு பங்குகளில் தங்கள் பணத்தை முதலீடு செய்திருக்கும் சிறு முதலீட்டாளர்களின் பணத்தை எல்லாம் அபகரித்தால் என்ன செய்வது? ஒரு தன்னாட்சி நிறுவனம் கூட சுதந்திரமாகவும் மக்கள் நலனிலும் செயல்பட முடியாவிட்டால், மக்களின் கதி என்ன?

நாடு முழுதும் பரப்புரைகள் செய்யப்பட்டு போராட்டங்கள் வெடிக்கும் என எச்சரித்துள்ளன எதிர்க் கட்சிகள்! பொறுத்திருப்போம்!

- சாரதாதேவி