கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

அவர்களால் ”உங்களுக்கெல்லாம் படிப்பு எதற்கு? எல்லோருக்கும் அவா அவா குடும்பத் தொழில் குலத் தொழில் ஒன்னு இருக்கோ இல்லையோ? ஒழுங்கா அதைக் கவனிங்க. இல்லேனா தர்மம் கெட்டுடும். என்று மிரட்டவும் முடியும். குலத்தொழிலை மறுக்கிறவனின் கட்டை விரலையோ தலையையோ அரசர்களின் தயவோடு மனுதர்மச் சட்டத்தைக் காட்டிக் காவு வாங்கவும் தெரியும்”.

kulakalvi 337அதெல்லாம் இப்போ நடக்குமா? மனுதர்மம், சனாதனம் எல்லாம் இப்ப எங்கே இருக்கு? இப்போ இருப்பதெல்லாம் அரசியல் சட்டம் தான். ஓ... அப்படியா ? இந்தியா விடுதலை பெற்று, 1950 இல் புதிய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்து, இந்தியா குடியரசாகி, வாக்குரிமை பெற்ற குடிமக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த அரசாங்கம் ஆட்சிக்கும் வந்தபிறகு, 1952 ஆம் ஆண்டில் ஒருநாள் சென்னை திருவான்மியூரில் நடந்த சலவைத் தொழிலாளர்கள் மாநாட்டில் அன்றைய சென்னை மாகாண முதல் மந்திரி ஸ்ரீ மான் ராஜகோபாலாச்சாரி கேட்டார், ”உங்களுக்கெல்லாம் ஒரு கைத்தொழில் இருக்கிற போது நீங்கள் ஏன் படிப்பு, உத்தியோகம் என்று வீணாக அலைகிறீர்கள்?” இந்தக் கேள்வியின் பின்னணியில் உள்ள சூழ்ச்சியை உடனடியாகப் புரிந்துகொண்டவர் பெரியார்தான். உடனடியாக எதிர்வினை ஆற்றினார். கண்டித்தார்.

ஆனாலும் ராஜகோபாலர் எதற்கும் அசரவில்லை. தான் திட்டமிட்டபடி 1953 ஆம் ஆண்டு முதல் பள்ளிகளில் ஒரு நேரம் படிப்பு இன்னொரு நேரம் அவனவன் அப்பன் தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டியது என்று அமைச்சரவையைக் கூட்டாமல், யாரோடும் கலந்தாலோசனை செய்யாமல் அவசர அவசரமாக பத்திரிக்கைகளுக்குச் செய்தி அனுப்பி அரசாணையாக்கினார். குலக் கல்வித் திட்டத்தை. உடனடியாக ஆறாயிரம் பள்ளிக் கூடங்களை இழுத்து மூடினார். நீதிக்கட்சி ஆட்சியில் கிடைக்கப் பெற்ற கல்வி ஓடையை வர்ணாசிரம அணைபோட்டுத் தடுத்தார். அதாவது அரசியல் சட்டத்தை அப்படியே ஓரத்தில் தூக்கிப் போட்டு விட்டு மனுதர்மத்தை நிலைநாட்டினார் திருவாளர் ராஜகோபாலர். மூதறிஞர் என்றால் சும்மாவா?

இப்படித்தான் நடக்கும் என்பதை முன்னரே உணர்ந்திருந்த பெரியாரும் விடுவாரா இதை ? உடனடியாக களத்திற்கு வந்தார் பெரியார். குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் படையமைத்தார். நாள்தோறும் கூட்டங்கள், போராட்டங்கள் வெடித்தன. முடிவுக்கு வந்தது மூதறிஞர் ஆட்சி. 1954 ஆம் ஆண்டு பெரியார் அண்ணா ஆதரவோடு பச்சைத் தமிழர் காமராசர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். தமிழ்நாட்டில் மீண்டும் கல்வி ஓடை பெருகியது.

1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டுப் பிள்ளைகளின் கல்வி நலனைக் கருதி இருமொழிச் சட்டத்தை நிறைவேற்றினார். 1969ஆம் ஆண்டு முதலமைச்சர் பொறுப்பேற்ற கலைஞர் புதுமுக வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி என்றார். தாலுக்கா என்கிற ஒவ்வொரு வட்டத்திற்கும் அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கினார். இட ஒதுக்கீடு அளவை அதிகரித்தார். அரசுப் பணியிடங்களை அதிகரித்து சாமானிய மக்களையும் அரசாங்கப் பணியாளர்களாக்கினார். போக்குவரத்தை அரசுடமையாக்கி சாதாரண ஒடுக்கப்பட்ட சமூகத்து இளைஞர்களை அரசுப் போக்குவரத்துப் பணியாளர்களாக்கினார்.

ஆனாலும் கல்வியறிவற்ற குலத் தொழில் மட்டுமே தெரிந்த அதாவது விஸ்வகர்மாக்கள் நிறைந்த வடநாட்டு அப்பாவிகளை ஏமாற்றி இந்திய ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தது வர்ணாசிரமம். 2014 ஆம் ஆண்டு இந்திய ஒன்றியத்தின் ஆட்சி வர்ணாசிரம சங் பரிவார் கும்பலின் அடியாட்கள் வசம் சென்றது. மருத்துவக் கல்விக்கு நீட் திணிக்கப்பட்டது. நுழைவுத்தேர்வுகளுக்குள் மாணவர்கள் திணிக்கப்பட்டனர். மீண்டும் ஏகலைவன்கள் சம்பூகன்கள் பலியிடப்பட்டனர்.

2019 ஆம் ஆண்டு துரோணாச்சாரி வகையறாவுக்கு அரசாங்க உத்தியோகங்களில் காலங்காலமாகக் கோலோட்சி வருகிற ஆரியப் பார்ப்பனர்களுக்கு கூடுதலாக 10% இடங்களைப் பட்டாப் போட்டுக் கொடுத்தார் நன்றிக்கடனாக மோடி. ஆனாலும் திருவாளர் மோடிக்கு ஒரு போதாமை இருந்தது. இன்னும் இன்னும் தன் எஜமானர்களுக்கு விசுவாசமாக ஏதாவது செய்தாக வேண்டும் என்று முடிவு செய்து 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாளில், ஆம்! தந்தை பெரியார் பிறந்த நாளில் , மீண்டும் குலத் தொழில் மனுதர்மம் என்கிற சட்டத்தை விஸ்வகர்மா என்ற பெயரில் நடைமுறைப்படுத்தி அக்ரஹாரங்களுக்கு ஆராதனை காட்டினார் மோடி.

இப்போது, பெரியார் இல்லை, அண்ணா இல்லை, கலைஞரும் இல்லை. எனவே 1953 ஆம் ஆண்டைப் போல இப்போது பெரிய அளவில் எதிர்ப்பு இருக்காது என்பது சங் பரிவார் கும்பலின் எண்ணம். ஆனால் மூன்று பேரின் மொத்த உருவமாய் நிற்கிற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திருவாளர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், பிறப்பின் அடிப்படையில் குலத் தொழிலை வலியுறுத்தி ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் உங்கள் விஸ்வகர்மா திட்டத்திற்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார்.

தமிழ்நாட்டு அரசும், சமூகநீதி இயக்கங்களும் விஸ்வகர்மாவை ஆழக் குழி தோண்டிப் புதைப்போம் தமிழ்நாட்டில். ஆனால், ஆண்ட பரம்பரைப் பெருமையில் மிதப்போர் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குருடாக்கப்பட்டு ஜாதித் தொழிலுக்குள் தள்ளப்படுகிற ஆபத்தை உணர்ந்து அதைத் தடுத்திடும் முயற்சிக்கு உடனடியாக ஆதரவளிக்க வேண்டும். தமிழ்நாடு ஓரணியில் நின்று சனாதனத்தை வீழ்த்தி சமூகநீதியைப் பாதுகாக்கும் என்பதை டில்லியின் காதுகளில் அறைந்து சொல்ல வேண்டும்.

வடக்கிருந்து வீசி எறியப்படும் எலும்புத் துண்டுகளுக்காகக் குரைப்போரை அம்பலப்படுத்தி அப்புறப்படுத்துவோம்!

நம் நாளைய தலைமுறையின் சுயமரியாதை வாழ்வுக்கு உறுதியேற்போம்!!

- காசு. நாகராசன்