அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவிக்கு நேர்ந்துள்ள கொடூரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை இந்நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது.
இவ்வழக்கில் குற்றம் புரிந்தவருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதைத் தாண்டி, வழக்கின் முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளியாகியுள்ளது காவல் துறையின் மீது கடும் அதிருப்தியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் நம்பகத் தன்மை கேள்விக்குள்ளாக்கப் பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை உரிமை இவ்விஷயத்தில் மீறப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையைப் பொறுத்தே காவல்துறையின் நம்பகத்தன்மை மீட்டெடுக்கப்படும்.
மறுபக்கம் வழக்கம் போல கலாச்சாரக் காவலர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் நடத்தையைக் குறித்து கேள்வியெழுப்பியுள்ளது அருவருக்கத் தக்கதும் அநாகரிகமானதும் ஆகும். பெண்கள் எவ்வாறு உடை உடுத்த வேண்டும், எப்போது வெளியில் செல்ல வேண்டும் என்று வழக்கம் போல பாடம் எடுக்கத் தொடங்கிவிட்டனர். குற்றத்திற்குக் காரணமான ஆண்களுக்கு அறிவுரை சொல்வதை விட்டுவிட்டு பெண்களுக்கான அறிவுரை மட்டுமே எப்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் எல்லா துறைகளிலும் பெண்களின் பங்கேற்பு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சிறப்பானதாகவே இருந்து வருகிறது. அதற்குப் பெரியாரிய இயக்கங்களின் தொடர் பரப்புரையே காரணமாகும். இது போன்ற நிகழ்வுகளில் அரசு பாடம் கற்றுக் கொண்டு கடுமையான நடவடிக்கை எடுப்பது தமிழ்நாட்டின் சமூக நீதிக் களத்திற்கு அரணாக இருக்கும்.
- கருஞ்சட்டைத் தமிழர்