உண்மையான பெண்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்தாமல், எதிர்க்கட்சிகள் இதனை அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கின்றன என்று உயர்நீதிமன்றமே சொன்னதற்குப் பிறகும், தமிழ்நாட்டில் பல கட்சிகள் அதே போக்கினைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றிருக்கும் பாலியல் வன்கொடுமை கண்டிக்கத்தக்கதும், எதிர்காலத்தில் இப்படி ஏதும் நடந்து விடாமல் தடுக்கப்பட வேண்டியதும் ஆகும்! இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
இப்போது அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதோடு, நீதிமன்ற விசாரணையும் தொடங்கி இருக்கிறது.
இதனை மேலும் விரைவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ள வேண்டிய கடமை, எதிர்க்கட்சியினருக்கு இருக்கிறது.
ஆனால் இதனையே காரணமாகக் காட்டித் தமிழ்நாடு அரசுக்கு இடையூறு செய்ய வேண்டும் என்று கருதுவது நல்ல அரசியல் ஆகாது!
ஆனால் அதனைத்தான் பல எதிர்க்கட்சிகள் செய்து கொண்டிருக்கின்றன.
அவர்களோடு சேர்ந்து, நம் கூட்டணிக் கட்சியில் இருப்போர் சிலரும் இதனைப் பெரிதாக்க முயற்சி செய்வது விரும்பத்தக்கதாக இல்லை!
இதனைச் சட்ட - ஒழுங்குப் பிரச்சினையாக மாற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது!
அதற்கு என்ன உள்நோக்கம் இருக்கக்கூடும் என்பதும் எல்லோருக்கும் புரிந்த ஒன்றுதான்!
இப்படித்தான் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய போதும், அதனை மிகப் பெரிய சிக்கலாக மாற்றிட முயற்சிகள் நடைபெற்றன.
ஒருவர் அந்தத் தொழிலாளர்கள் மத்தியில் போய் நின்று, அடி உதை என்று பேசி, வன்முறையைத் தூண்டியதையும் நாம் பார்த்தோம்!
தமிழ்நாடு அரசு இந்த வழக்கில் மேலும் கூடுதல் கவனம் செலுத்தி, மிகக் கடுமையாகத் தண்டித்திட ஆவன செய்திட வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாக உள்ளது!
- சுப. வீரபாண்டியன்