கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

வட இந்தியாவிற்குச் செல்லும்போது, நீங்கள் ஏன் எப்போதும் இந்தியை எதிர்க்கின்றீர்கள் என்று சிலர் கேட்கின்றனர். இந்தியை மட்டும் இல்லை, நாங்கள் எந்த மொழியையும் எதிர்ப்பதில்லை. பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாட்டில், பல்வேறு மொழிகள் நடைமுறையில் இருக்கும் போது, ஒரே ஒரு மொழியை மட்டும் எல்லோர் மீதும் திணிக்கும் அந்த ஜனநாயகத்திற்கு எதிரான போக்கையே எதிர்க்கிறோம் என்று விளக்கம் சொல்வதுண்டு!

tamils agitated against hindiமூன்றாவதாக ஒரு மொழியைக் கற்றுக் கொள்வது நல்லது தானே என்று சிலர் கேட்பார்கள். நல்லதுதான்! மூன்றாவதாக மட்டுமில்லை முப்பதாவதாகக் கூடப் பல மொழிகளை நாம் கற்றுக் கொள்ளலாம்! மொழி அறிவு நல்லது! அது அவரவர் விருப்பம்! எந்த ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதும், அவரவருடைய திறமைக்கும், தேவைக்கும் உரியது! இரண்டும் இல்லாதவர்கள் மீது, எந்த ஒரு மொழியைத் திணிப்பதும் சர்வாதிகாரத் தன்மையுடையது!

அந்தச் சர்வாதிகாரப் போக்கு, வட இந்தியாவில் இருக்கும் பலரிடமும், ஆட்சியாளர்களிடமும் இருப்பதால்தான் இந்தியாவில் வேறு எதனையும் விட, மொழிச் சிக்கல் மிகப்பெரியதாக இருக்கிறது!

பாடமொழி, பயிற்று மொழி, ஆட்சி மொழி, நீதிமன்ற மொழி, வழிபாட்டு மொழி என்று மொழியின் பயன்பாடு பலவகையானது! எல்லா நிலையிலும் அவரவர் தாய்மொழியே இடம்பெறுவது, எளிதானது, இயற்கையானது, எதிர்கால வளர்ச்சிக்குப் பயன்படுவது!

பிற மொழியினருடன் தொடர்பு கொள்வதற்கு, இன்னொரு மொழி எல்லோருக்கும் தேவைப்படலாம்! அந்த மொழியைத் தேர்ந்தெடுக்கும் போது, அது தொன்மையான மொழியா, சிறந்த மொழியா, அறிவியல் மொழியா என்றெல்லாம் கூடப் பார்க்க வேண்டியதில்லை! ஏற்கனவே அந்த மொழி பலரிடமும் பரவி உள்ளதா, பயன்படுத்துவதில் சிரமம் இல்லாமல் இருக்கிறதா என்று மட்டும் பார்த்தால் போதுமானது!

அந்த வகையில் பல பகுதிகளிலும் பரவி உள்ளது ஆங்கிலமே! அதனை உலக மொழி என்று நாம் அழைக்க வேண்டியதில்லை. அதே நேரம் உலகில் கூடுதல் மக்களால் அறியப்பட்டு இருக்கும் மொழி ஆங்கிலம் தான் என்பதை மறுக்க வேண்டியதும் இல்லை! உலகின் பல நாடுகளை அவர்கள் கைப்பற்றி ஆண்டதால், ஆட்சி அதிகாரத்தின் வழி மொழியும் பரப்பப்பட்டு விட்டது என்பதே எதார்த்தம்!

இந்த நடைமுறை உண்மையை மிகச் சரியாக உள்வாங்கிக் கொண்டு, தமிழ்நாட்டில் அன்றும் இன்றும் திராவிட இயக்கம் இரு மொழிக் கொள்கையையே முன்வைக்கிறது. ஒன்று, தாய் மொழியான தமிழ்! இன்னொன்று, தொடர்பு மொழியாகப் பயன்படக்கூடிய ஆங்கிலம்!

இந்த இயற்கை உண்மைக்கு மாறாக, பெரும்பான்மைவாதத்தின் ஒரு கூறாக, இந்தி திணிக்கப்பட்டதால்தான், தமிழ்நாடு அதனைக் கடுமையாக எதிர்த்தது. எத்தனையோ போராட்டங்கள், எத்தனையோ உயிர்ப்பலிகள் என்று தலைமுறை தலைமுறையாகத் தமிழ்நாட்டில் அந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது!

இந்த எளிமையான இயற்கையான மொழிக் கொள்கையை இந்தியாவில் பிற மாநிலங்களும் பயன்படுத்தி இருந்தால், அந்த மாநிலத்தின் இளைஞர்களும் கல்வியில் சிறந்து விளங்கி, பொருளாதாரத்திலும் மேம்பட்டு இருப்பார்கள்! இந்தியை மட்டும் படித்தால் போதும் என்ற நிலையை அங்கு உருவாக்கியதால் தான் அவர்கள் நாடு முழுவதும் கூலித் தொழிலாளர்களாகப் பயணப்பட வேண்டி இருக்கிறது!

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பல களங்களைத் தமிழ்நாடு கண்டிருக்கிறது! அவற்றுள் ஒன்று, 1965 ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கியது! அந்தப் போராட்டத்தில் தங்களைத் தாங்களே எரித்துக் கொண்ட, நஞ்சு அருந்தி மாண்ட , துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான அத்தனை மாவீரர்களுக்கும் நம் வீரவணக்கம்!

- சுப.வீரபாண்டியன்