கடந்த பொதுத்தேர்தலில் பா.ஜ.கவுக்குப் பெரும்பான்மை பலத்தைக் கொடுக்காமல் 'மைனாரிட்டி' அரசாக உட்கார வைத்து விட்டார்கள் மக்கள்.
பா.ஜ.க. வுக்குத் தெலுங்கு தேசமும், ஐக்கிய ஜனதா தளமும் முட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறன.
மாநிலங்கள் அவையில் மசோதா நிறைவேற 113 உறுப்பினர்கள் ஆதரிக்க வேண்டும்.
இதில் மாநிலங்கள் அவையில் ராகேஷ் சின்கா, ராம்சகல், சோனல் மான்சிங், மகேஷ் ஜெத்மலானி ஆகிய நான்கு நியமன உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிந்ததால் பா.ஜ.கவின் பலம் 86 ஆகக்குறைந்து விட்டது.
இது இப்படி என்றால் பா.ஜ.கவின் நம்பிக்கையான 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் 36 தொகுதிகளில் வெற்றிபெற முடிந்தது.
அதிலும் கடந்த தேர்தலில் வாரணாசியில் 6 லட்சத்து 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பிரதமர் மோடி, இம்முறை 1.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வாக்குகள் சரிந்து வெற்றி பெற்றுளார்.
அயோத்தி ராமர் கோயிலை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பாஜகவை வீழ்த்தியது சமாஜ்வாதி கட்சி, இங்கே ராமரும் கூட காப்பாற்றவில்லை.
உ.பி.யில் முதல்வர் ஆதித்யநாத், துணை முதல்வர் கே.பி.மவுரியா இடையே கடுமையான மோதல் முற்றுவதாகத் தெரிகிறது.
கே.பி. மவுரியா, ஆதித்யநாத்தை நோக்கிச் சொல்கிறார், "ஆட்சியைவிட கட்சியே முக்கியம்" என்று. ஆதித்தியநாத் முதல்வர் பதவியை விட்டுத்தரத் தயாரில்லை. இவர்களின் 'கோஷ்டி' மோதல், விரைவில் வர இருக்கும் உ.பியின் 10 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் என்ன ஆகுமோ என்று கன்னத்தில் கைவைத்துக் கொண்டிருக்கும் நட்டாவிடம் சென்று மோடி, அமித்ஷா வரை பஞ்சாயத்து போயிருக்கிறது.
சரி! ஆட்சியாவது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று பார்ப்போம்!
- கருஞ்சட்டைத் தமிழர்