நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, வரும் 05.03.2025 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 82-வது பிரிவு, மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு, மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வதற்கு வழிவகை செய்கிறது. இத்தகைய மறுசீரமைப்பு தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் அழுத்தத்தின்மூலம் 2026-ஆம் ஆண்டு வரையிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், 2026-க்குப் பிறகு நடக்கவிருக்கும் ஆபத்தை உணர்ந்து முதல் குரலை எழுப்பியுள்ளார் தமிழ்நாடு முதல்வர்.Delimitation Commissionதொகுதி மறுசீரமைப்பு நிறுத்தி வைக்கப்பட்டதற்குக் காரணமே மக்கள்தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கம்தான். தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் எடுத்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால்தான், மக்கள்தொகை வளர்ச்சி கணிசமாகக் குறைந்துள்ளது. ஆனால் இவ்வாறு மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களை, தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் ஒன்றிய அரசு தண்டிக்க உள்ளதுதான் மிகப்பெரிய அநீதி.

ஏற்கெனவே மாநிலங்களவை உறுப்பினர்கள் நியமனம் மக்கள்தொகையின் அடிப்படையில் அமைக்கப்படுகிறது. இதுவே ஜனநாயக விரோதமானது. மக்களவைக்கு மக்களின் பிரதிநிதிகள் அனுப்பப்படும் வேளையில், மாநிலங்களவைக்கும் மக்கள்தொகையின் அடிப்படையில் பிரதிநிதிகள் அனுப்பப்படுவது நியாயமல்ல. அமெரிக்காவில், மக்களுக்கான பிரதிநிதிகள் அவையில் (House of Representatives) மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் நியமிக்கப் படுகிறார்கள். ஆனால் செனட் சபை எனப்படும் மாநிலங்களுக்கான அவையில் (Senate) ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரண்டு பிரதிநிதிகள் நியமிக்கப்படுகிறார்கள். மொத்தமாக 50 மாகாணங்கள் அல்லது மாநிலங்கள் அமெரிக்காவில் உள்ளன. எனவே மாகாணத்திற்கு இருவர் என்று மொத்தம் 100 பேர் செனட் சபையில் உள்ளனர். மாநிலங்களுக்குள் சிறியவை, பெரியவை என்று வேறுபாடு இல்லை. இது உண்மையான கூட்டாட்சியைக் குறிக்கிறது. ஆனால் இந்திய அரசியலமைப்பிலோ இத்தகைய கூட்டாட்சிப் பார்வை இல்லாமல், மாநிலங்களவையும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பாக உள்ளது.

மக்களவைக்கும் மாநிலங்களிடையே பெருத்த பாகுபாடு ஏற்கெனவே நிலவும் சூழலில், இந்நிலையில் முதல்வரின் குரல் முக்கியமானது. “தற்போதைய மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கையின் அடிப்படையில்கூட, பல்வேறு நியாயமான கோரிக்கைகளை, தமிழ்நாடு பெற இயலவில்லை. ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்பு, ஒன்றிய அரசு சார்ந்த திட்டங்களில் நிதி குறைக்கப்படுவது அல்லது விடுவிக்கப்படாமல் தடுப்பது, ஒன்றிய அரசு அதிகாரத்தில் நமது பிரதிநிதித்துவம் குறைந்து வருவது, நிதிப் பகிர்வில் காட்டப்படும் பாரபட்சம் என அனைத்து வகைகளிலும், தமிழ்நாட்டின் உரிமைகளும், சுயாட்சியும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், நமது மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டால், தமிழ்நாட்டின் குரல்வளை முழுமையாக நசுக்கப்படும்…………நீட் நுழைவுத் தேர்வு, பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலமாக மாநில அரசுகளின் உயர்கல்வித் துறையின் உரிமைகளை அபகரிப்பது, நமது தனித்துவமான பண்பாடு மற்றும் மொழிப்பாதுகாப்புக் கொள்கைகளை நமது மாநிலத்தின் மீது திணிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து ஒன்றிய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், இப்பிரச்சினைகளுக்கு எதிராகக் கிளர்ந்து, நமது தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கான ஆற்றலும், அதிகாரமும் இல்லாத நிலை ஏற்படும் அபாயத்தை நாம் எதிர்நோக்கியுள்ளோம்” என்ற முதல்வரின் கூற்று மிகச் சரியானது.

இந்த செய்தி மக்களிடையே பேசுபொருளாக வேண்டும். மக்களிடம் இந்த ஆபத்து குறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்து, பாதிக்கப்படும் மற்ற மாநிலங்களோடும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே வரவிருக்கும் ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தலை எதிர்கொள்ள முடியும்.

- வெற்றிச்செல்வன்