சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாம். போதைப் பொருள் பெருகி விட்டதாம். டாஸ்மாக்கில் ரூபாய் 1000 கோடி ஊழலாம். பொழுது விடிந்தால் போதும், இப்படி எல்லாம் உளறத் தொடங்கி விடுகிறார் அண்ணாமலை.
அவருக்கு பாஜக ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், மகராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது என்று தெரியாதா?
போதைப் பொருள் கடத்தலில் முதலிடம் குஜராத், இரண்டாவது இடம் மகாராஷ்டிரம் என்று ஒன்றிய அமைச்சர் ஒருவர் சொன்னது கூடத் தெரியவில்லை போலும்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஊழல் ரூபாய் 1000 கோடி என்று அலறுகிறார் அண்ணாமலை.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் விவகாரத்தில் அ.தி.மு.க.வின் ஆட்சியின்போது பதிவு செய்யப்பட்ட FIR 34. திமுக ஆட்சியில் 7, மொத்தம் 41. இங்கே அமலாக்கத்துறை தலையிட வேண்டும் என்றால் ரூபாய் 30 லட்சத்திற்கு மேல், குற்றம் நடந்திருக்க வேண்டும். தி.மு.க ஆட்சியில் பதியப்பட்ட 7 வழக்குகளில் 30 லட்சம் வராது. அதனால் அ.தி.மு.க. ஆட்சியின் 34 ஐயும் சேர்த்து வழக்கு 41 என்று அமலாக்கத் துறை நுழைந்து இருப்பதாக ஒரு ஊடகவியலாளர் சொல்லி இருப்பது அண்ணாமலையின் காதுகளில் விழவில்லையோ?அ.தி.மு.க. ஆட்சியின்போது என்ன செய்து கொண்டு இருந்தார் அவர்? அப்போது ஒன்றிய ஆட்சியும் பா.ஜ.க.தானே!
சரி அது போகட்டும். 1000 கோடி ஊழல் என்பதற்கு என்ன சான்று இருக்கிறது? சொல்வாரா மிஸ்டர் அண்ணாமலை!
தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் பெருகி விட்டதாம். இல்லையென்று சொல்லவில்லை, அதற்குரிய நடவடிக்கைகளைக் காவல்துறை எடுத்து வருகிறது.
அ.தி.மு.க. ஆட்சியில் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை குறித்து அண்ணாமலை ஏன் பேசுவது இல்லை? மணிப்பூர், உத்தரப் பிரதேசம் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பாலியல் குற்றங்கள் சீரழிகிறதே! அண்ணாமலைக்கு இது தெரியாதா?
இந்தி- சமஸ்கிருதத்தை எதிர்த்துத் தாய்மொழி காக்கப் போராடும் தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் அண்ணாமலை, ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியைப் பாடமொழியாக்கி மும்மொழித் திட்டத்தை அமுல்படுத்தி விடுவாராம்.
அத்தைக்கு மீசை முளைத்து சித்தப்பாவானால்தான், தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சி! அதுவரையும் அவர் இப்படித்தான் இருப்பார் போலும், ஐயோ பாவம்!
- கருஞ்சட்டைத் தமிழர்