jeevasundari bookஇராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பெண்ணாகப் பிறப்பதே ஒரு சாதனையாகத்தான் இருக்கிறது என்ற செய்தியுடன் தொடங்குகிறது நூலின் முதல் கட்டுரை. பிறப்பதே சவாலாக இருக்கும் சூழ்நிலையில், பெண்கள் வளர்ந்து, ஆளாகி, கல்வி கற்று, சாதிப்பது என்பவைகளுக்கெல்லாம் எத்தனை சோதனைகளைத் தாங்க வேண்டியிருக்கிறது! அவற்றில் சில பிரச்சினைகளை விவாதித்திருக்கிறது *“விலக மறுக்கும் திரைகள்”* என்னும் நூல். தோழர் பா. ஜீவசுந்தரி எழுதிய இந்நூல், அண்மையில் ‘இந்து தமிழ்திசை’ நாளிதழில் தொடராக வெளிவந்தது. இப்போது நூல்வடிவம் பெற்றுள்ளது.

 ”நான் எப்போதேனும் மந்திரியாக நேர்ந்தால், பெண்களின் படிப்புக்காக மட்டுமே பணத்தைச் செலவிடுவேன்” என்ற தந்தை பெரியாரின் வாசகத்தை மேற்கோளாகக் காட்டி முடிவடைந்துள்ள முதல் கட்டுரையானாலும் சரி, மாதவிடாய் பிரச்சினை தொடங்கி, பெண்கள் அரசியல் அதிகாரம் பெறுவது வரையிலுமான கட்டுரைகளானாலும் சரி, பெண்களுக்கான பிரச்சினைகளின் பல்வேறு பரிமாணங்களை விவாதமாக்குவதிலும், கேள்விகளை எழுப்புவதிலும் மிக முக்கியமான வேலையை இந்நூல் செய்துள்ளது.

சுயமரியாதைத் திருமணங்கள் குறித்த கட்டுரை ஒன்றில், அத்திருமணத்தின் வரலாறை விரித்துரைப்பதோடு, “தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களேயானாலும்கூட இந்தியாவின் வேறு எந்த ஒரு மாநிலத்திலும் சுயமரியாதைத் திருமணத்தை நடத்திவிட முடியாது” என்றும் சொல்லியிருப்பது நிதர்சனமான உண்மை. இந்த நிலைமைக்குப் பெரியாரும், திராவிட இயக்கமும் அன்றி வேறு யார் காரணமாக இருக்க முடியும்? வட மாநிலங்களோடு ஒப்பிடும்போது, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சமூகநலக் குறியீடுகளில் மட்டுமின்றி முற்போக்கான சமூகப் பார்வையும், பெண்களின் உரிமைக்கான தளமும் இயங்குவது தமிழ்நாட்டில் மட்டும்தான்.

சட்டம் இயற்றுவதால் மட்டுமே ஆணவக் கொலைகளைத் தடுத்துவிட முடியுமா என்ற கேள்வி சிந்திப்பதற்கு உரியது. இந்த நவீன யுகத்திலும் ஜாதி என்பது மேட்ரிமோனியல் வலைத்தளங்கள் மூலம் பாதுகாக்கப்படுவதைச் சுட்டிக் காட்டி, பெரியார் இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் இம்மண்ணில் ஜாதி, மதம் கடந்த திருமணங்களை நடத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதையும் நினைவுபடுத்துகிறது. ஆணவக்கொலை என்பதை ஜாதியை மையப்படுத்தி மட்டுமே பலரும் பேசி வருகின்றனர். ஆணவக் கொலைகளுக்கான முக்கிய காரணமான ஆணாதிக்க மனப்பான்மை பெரும்பாலும் விவாதிக்கப்படுவதில்லை. ஆனால் அந்த இடத்தில் பெண்களை உடைமையாகக் கருதும் மனப்போக்கைச் சுட்டி, அந்த மனப்போக்கு மாற வேண்டும் என்கிறது இந்நூல்.

பெண்களுக்கு மாதவிடாய் கால விடுமுறை அளித்த முதல் நாடு சோவியத் ஒன்றியம் என்ற முக்கிய தகவலோடு, மாதவிடாய் விடுமுறையை வலியுறுத்திச் சொல்கிறது ஒரு கட்டுரை. பெண்கள் வாக்குரிமைக்கான போராட்ட வரலாற்றை எடுத்தியம்பும் கட்டுரையில், 1921 இலேயே நீதிக்கட்சி ஆட்சியின்போது பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது என்ற தகவலையும் சேர்த்திருக்கலாம்.

ஆயுத பூஜை, தீபாவளி, விநாயகர் சதுர்த்தி என்று கடவுளின் பெயரால் நடத்தப்படும் பண்டிகைகளின் விளைவினால் சுற்றுச்சூழல் எவ்வாறெல்லாம் கெடுகிறது என்பதை எளிதில் புரிய வைக்கிறது ஒரு கட்டுரை. உணவில் கலப்படம் செய்யப்படுவதால் ஏற்படும் தீமைகள், துரித உணவுகளால் உண்டாகும் சிக்கல்கள் ஆகியவற்றை விவரிக்கும்போது, “ *உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே* என்ற உயர்ந்த சிந்தனையுடன் செயல்பட்டு வந்த தமிழ்ச்சமூகம் இன்றைக்கு அந்தச் சிந்தனையினின்றும் பிறழ்ந்து தடுமாறித் தள்ளாடிக் கொண்டிருக்கிறது” என்ற வரிகள் கவனத்திலும், கருத்திலும் வைக்க வேண்டியவை. பெண்ணுரிமை தாண்டிய இதுபோன்ற சில கருப்பொருள்களும் இந்நூலில் விவாதிக்கப் பட்டுள்ளன.

பெண்களின் படைப்புத் திறனை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து பெண்களுக்கான ஆக்கங்களை வெளியிட்டு வரும் “ஹெர் ஸ்டோரிஸ்” பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் இந்நூல் காலத்திற்கேற்ற கருத்துப் பெட்டகம்.

நூலின் பெயர் : விலக மறுக்கும் திரைகள்

ஆசிரியர் : பா. ஜீவசுந்தரி

பதிப்பகம் : ஹெர் ஸ்டோரிஸ்

விலை : ரூ. 150

- வெற்றிச்செல்வன்