நகரின் வடதிசையில்
குதூகலம் பாவித்துக் கிடக்கும்
வாழ்வின் இசையை
தன் அடர்ந்த குரலால்
முனகிய படியே வாப்பா
கறி வெட்டிக் கொண்டிருந்தார்.
மலர்ந்து சில நிமிடங்களேயான
பன்னீர் ரோஜாவின்
நிறத்திலிருந்தன
வெட்டுப்படும் இளங்கன்றின் மாமிசத் துண்டுகள்!
வாப்பாவிற்கு இது பழக்கமானது.
ஆப்பிள் துண்டுகளை நறுக்குவது போல
ஒரேயளவில் பிசிறில்லாமல் அவரால்
மாட்டிறைச்சியை வெட்டிவிட முடியும்!
ஆனால் ஆப்பிள் துண்டுகள் நறுக்குவதற்கு
மாமிசத்தை விடவும்
எத்தனை இலகுவானவையென அவர் அறிந்ததில்லை!
மினுக்கும் கரிய தோலுடையவர்களும்
தாடி நீண்டு கிடந்தவர்களும்
முக்காடிட்ட பெண்டிரும்
கூலி வேலைக்குக் கிளம்ப வேண்டியவர்களும்
ஒளி மிகுந்த கண்களோடு
வாப்பாவின் அரிவாளில்
தாள லயத்தோடு வெட்டுப்படும்
இளங்கன்றின் மாமிசத் துண்டங்களை
நோக்கியபடியிருந்தனர்.
ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளும்போது
அவர்களது கண்கள் அன்பைப் பரிமாறிக் கொண்டன.
ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளும் போது
அவர்களது உதடுகள் இளஞ்சிரிப்பை உதிர்த்தன.
பின்னர், ஒருசேர எல்லோரின் உதடுகளும்
குதூகலம் பாவித்துக் கிடக்கும்
வாழ்வின் இசையை முனகத் தொடங்கின.
புரட்சி வெடிக்கப் போகும் தருணத்தைப் போல
எல்லோர் மூளையிலும்
தகதகவென மாட்டிறைச்சி வெந்து கொண்டிருந்தது.
முந்தைய இரவு தம் பிள்ளைகளோடு
வட்டமாக அமர்ந்து
மனைவி மரியம் பீவி
மணக்க மணக்கச் சமைத்த
இதே போன்றதொரு இளங்கன்றின் வறுவலை
அன்றைய நாளின் கடைசிக் கதைகளை
பகிர்ந்தபடியே உண்டு கொண்டிருந்த அப்துல்லாவின்
வயிற்றைக் கிழித்துக்
கறித்துண்டுகள் நிறைந்த குடலை உருவி
வெளியே வீசியெறிந்திருந்த
அச்செய்தியை அவர்களனைவரும்
அறியாமல் இல்லை!
பொழுது புலர்ந்த போது
மனிதத்தின் எல்லாச் சாலைகளும்
அன்று மாட்டிறைச்சிக் கடையை நோக்கி
வந்தடைந்ததைப் போல
வாப்பாவின் கடை வாசல் முன் அவ்வளவு கூட்டம்.
அப்துல்லாவின் கொலைக்கான நீதியைக்
கறிக்கடையில் கேட்க வந்ததைப் போலிருந்தது
அவர்களின் வருகை!
ஒரு சிறுமி தன் தாயிடம் கேட்டாள்
ஏனம்மா இவ்வளவு அதிகாலையில்
இன்று கறி வாங்க வந்துவிட்டாய்?
மறுக்கப்படுவது உணவுரிமை எனில்
அதைத் தின்பதுதான் நமது எதிர்வினை மகளே!
‘அவர்கள் நம்மைக் கொன்றுவிட மாட்டார்களா?’
கொல்லட்டும் மகளே
‘நமது குடலைக் கொலைக்கும்பல் உருவும் போது
அதில் நிரம்பியிருக்கும் மாமிசத் துண்டங்கள்
அவர்களைப் பார்த்துக் கபடமற்ற சிரிப்பை உதிர்க்கட்டும்.’
வாப்பா, குதூகலம் பாவித்துக் கிடக்கும்
வாழ்வின் இசையைப் பாடுவதை நிறுத்தவே இல்லை.
புரட்சி வெடிக்கப் போகும் தருணத்தைப் போல
அவர்களனைவரின் மூளையிலும்
மாட்டிறைச்சி தகதகவென வெந்து கொண்டிருந்தது.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
மாட்டிறைச்சிக் கடை
- விவரங்கள்
- மீனா மயில்
- பிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 16 - 2015