மாட்டுக் கொழுப்பு தீட்டாம்; மாட்டு மூத்திரம் தீட்டைக் கழிக்கும் புனித நீராம். இவ்வளவு மூடநம்பிக்கை மலிந்து காணப்படும் நாட்டில் மத அரசியல் செய்வது எளிது. ஆனால் அது பொறுப்பற்ற செயல்.

உறுதி செய்வதற்கு முன்னரே விலங்குக் கொழுப்பு திருப்பதி லட்டில் கலந்து இருப்பதாகப் பொதுவெளியில் சொன்னார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு. அவரை நோக்கி, நீங்கள் கடவுளை வைத்து மதஅரசியல் செய்கிறீர்கள் என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக சந்திரபாபு, திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, மீன் எண்ணெய் போன்றவை கலந்திருக்கின்றன என்று ஆந்திர முன்னால் முதல்வர் ஜகன்மோகனைக் குறி வைத்துப் பேசியிருந்தார்.pavan kalyan and chandrababuஅதற்கு ஆன்மீகச் சொற்பொழிவாளர் சுகி.சிவம், கடவுள் விவகாரத்தில் சந்திரபாபு அரசியல் செய்கிறார் என்றும், மக்களிடம் உள்ள மென்மையான உணர்வுகளைச் சீண்டுகிறார், இது மிகவும் "சென்சிடிவான பிரச்சனை" என்றும் கூறியிருக்கிறார்.

ஜெகன் மோகனுக்கு எதிராக, தற்போதைய முதல்வர் சந்திரபாபு தொடங்கிய அரசியல் விளையாட்டில், சந்திரபாபுவையே முந்தி முன்னிலை பெறுமளவில் துணை முதல்வர் பவன்கல்யாண் செயல்பாடுகள் வேடம் எடுக்கின்றன. மாட்டுக் கொழுப்பு கலந்ததற்கு 11 நாள் தவம் செய்யப் போவதாகவும், காவி உடை அணிந்தும், கோயில் படிகளைத் துடைத்துப் பெருமாளிடம் மன்னிப்பு கேட்கப் போவதாகவும் அறிவித்தார். தன்னை சனாதனக் காவலராக மாற்றிக் கொண்டு அது குறித்துப் பேட்டியும் கொடுத்து வருகிறார். ஆனால் சனாதன முறைப்படி இவரே கோயில் கருவறைக்குள் போக அருகதை இல்லாதவர் என்பது அவருக்குத் தெரியாதா ?

நடிகர் கார்த்தி, கண்ணா லட்டு தின்ன ஆசையா என்று ஒரு நகைச்சுவை காட்சியில் நடித்திருப்பார். அதுகுறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு "நோ கமன்ட்" என்று விடை சொல்லமறுத்தார். உடனே பவன்கல்யாண் "வார்னிங்" கொடுத்து கார்த்தியை மன்னிப்புக் கேட்க வைக்கப்பட்டார். : (திருப்பதி) லட்டைப் பற்றியே யாரும் பேசக்கூடாது என்ற நிலைக்குக் கொண்டு சென்று உள்ளார் பவன்.

அதேசமயம் நடிகரும், சமூக செயல்பாட்டாளருமான பிரகாஷ்ராஜ், இவர்கள் மிரட்டலுக்கு அஞ்சாமல், தொடர்ந்து இதனை எதிர்த்துக் கேள்வி கேட்டு வருகின்றார். குற்றம் நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள், லட்டை வைத்து மத-அரசியல் நாடகங்களில் நடித்து வருவதை அவர் சாடியுள்ளார். பவன் கல்யாண் தேர்தலுக்கு முன் மதசார்பற்ற வேடமும், தேர்தலுக்குப் பின் சனாதனக் காவலர் வேடத்தையும் போடுவதைச் சுட்டிக்காட்டி, பவன் கல்யாணின் உண்மை ரூபம் என்ன என்றும் பிரகாஷ்ராஜ் பகுத்தறிவுச் சிந்தனையுடன் வினவியுள்ளார்.

இதுகுறித்துத் திருப்பதி தேவஸ்தானமோ, மோடி, அமித்ஷாக்களோ எதுவும் கண்டு கொள்ளவில்லை என்பது கவனிக்கத் தக்கது.

சந்திரபாபுவின் லட்டு மத-அரசியல் உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப் பட்டது என்பதுடன், திருப்பதியில் இப்பொழுதும் லட்டு அமோகமாக விற்கப்படுகிறது என்ற செய்தியும் வருகிறது.

திருப்பதி லட்டில் சந்திரபாபு கலந்த 'கொழுப்பு'க் கதை, புஸ்வாணம் ஆகிவிட்டது.

- அறம்மதி