கனவு திரைப்பட இயக்கத்தின் சார்பாக ஜூலை மாதத்தில் திருப்பூர் மாவட்ட பகுதியைச் சேர்ந்த குறும்பட இயக்குனர்களின் குறும்படங்கள் திரையிடப்பட்டு ஒரு விழா நடத்தப்பட்டது.

சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் செப்டம்பர் மாதம் இதே போல ஒரு ஆவணப்பட பயிற்சியும் ஆவணப் படங்கள் மற்றும் குறும்படங்கள் திரையிடல் செப்ட்ம்பரில் நடைபெற்றது. சென்னை சார்ந்த ஆவணப்படை இயக்குனர் ஆர்பி அமுதன் அவர்கள் இதை முன்னின்று நடத்தினார். இதில் இடம்பெற்ற சில படங்கள் பற்றி;

"ஜூ" மனிதர்கள் இயல்பு எப்படி இருக்கிறது அவற்றின் தத்துவார்த்தை வெளிபாடுகளை ஒரு மிருக காட்சி சாலை மூலமாக சொன்ன படம் இது. இந்த படத்தில் ஸ்கிரிப்ட் முறையாக கிடையாது. ஆனால் ஒரு சின்ன மையத்தை எடுத்துக்கொண்டு விரிவாக்கப்பட்டு இருக்கிறது மனிதன் மிருகம் இவை இரண்டும் ஒரே மாதிரி தான் செயல்படுபவை மிருகம் பார்க்கும் பார்வை இதில் மனிதர்கள் கம்பிகளுக்குள் இருப்பது போல கோணங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கலாபூர்வமாக மனிதனுக்கும் மிருகங்களுக்கும் உள்ள உறவுகள் பற்றிய விஷயங்களை இந்த படம் சொல்கிறது இயல்பும் உண்மையும் அழகியலும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் வெளிவந்து சுமார் 75 ஆண்டுகள் ஆகிறது.

நெய்பர் என்ற அனிமேஷன் படம். இந்த படத்தில் வீடுகள் கட்டமைக்கப்படுகின்றன இரண்டு பேர் உட்கார்ந்து போர் சார்ந்த செய்திகளை படித்துக் கொண்டும் புகைபிடித்து கொண்டும் இருக்கிறார்கள் அங்கே மலரும் பூ யாருக்கு சொந்தம் என்று சர்ச்சை வருகிறது தங்கள் பகுதி தங்கள் சொத்து நிலம் சார்ந்தது என்ற ஒவ்வொருவரும் அதை சொல்லிக் கொள்கிறார்கள். பொருள் மீது வெறுப்பு வருகிறது. முழுக்க விரோதம் வருகிறது. அடித்துக் கொள்கிறார்கள். சாகிறார்கள். கல்லறைகள் தனித்தனியாக அவர்கள் இடங்களில் உருவாகின்றன. அந்த கல்லறைகளுக்கு முன்னால் அதேபோன்று பூக்கிறது. ”பூப்பூத்தல் அதன் இஷ்டம் போய் பார்த்தல் நம்மிஷ்டம் “ என்ற வண்ணதாசனின் கவிதை ஞாபகம் வருகிறது. முதல் காட்சியில் செய்தித்தாள் படிப்பவர்கள் படிக்கிற இரண்டு செய்தித்தாள்களின் விவரம் எப்படி உள்ளது என்று ஒரு செய்தி தாள் சொல்கிறது இன்னொரு செய்தித்தாள் போர் சமாதானம் வாழ்க்கை தேவை என்கிறது. இது குறியீடாக இந்த படத்தில் அமைந்து மனிதர்கள் அன்போடு இருக்க வேண்டும் போரை தவிர்க்க வேண்டும் என்பதை நகரும் காட்சிகள் மூலமாக சொல்கிறது. இது அந்த வகையில் ஒரு அனிமேஷன் படம் என்பதை பல கோணங்களில் சிந்திக்கலாம். மனித உருவங்கள் என்றாலும் அவற்றின் இயக்கம் துண்டாக வெட்டப்பட்டு உருவாக்கப்பட்ட அதன் மூலமாக ஒரு அனிமேஷன் உருவாகி இருக்கிறது

அடுத்த படம் பெயிண்டெட் ரெயின்போ : நகரும் இமேஜ்கள் மூலமாக உருவாக்கப்படும் சித்திரங்கள். இந்த படத்தில் அமைந்திருக்கிறது. ஒரு வீடு வயதானவர்கள் இருக்கிறார்கள் பூனை மீன் தேடி அலைகிறது. மழை பெய்து கொண்டிருக்கிறது வயதானவர்களும் பெண்களும் தங்கள் வேலையைச் செய்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இன்னொரு உலகத்தில் அவர்கள் செல்கிற போது இந்த கருப்பு வெள்ளை படம் வர்ணப் படமாக மாறுகிறது. காணப்படும் தீப்பட்டிகளுக்குள் அந்த மனிதர்கள் நுழைந்து அங்கு இருக்கிற வாகனங்களை ஓட்டுகிறார்கள். விளையாடுகிறார்கள் கற்பனை களத்தில் திளைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த இரு வேறு நிலைகளும் கருப்பு வெள்ளை படமாகவும் வர்ண படமாகவும் இரு பகுதிகளாக இந்த படம் காட்டியது. ஒரு உள்ளூர் கதை என்பது உலகளாவிய கதையாகி விரிவாவதை இந்த படம் சொல்கிறது. பெண்களின் சாதாரண உலகம் இருக்கும் பகுதி கருப்பு வெள்ளைக்குள் வீட்டுக்குள் காட்டப்படுவது. அந்தப் பெண்ணின் கற்பனை உலகத்துக்குள் வருகிறபோது வர்ணத்தில் காட்டப்படுவது ரொம்ப விசேஷமாக இருக்கிறது. கீதா கீதாஞ்சலி அய்யர் என்பவர் இயக்கிய இந்த படம் முழுக்க வசனங்கள் அற்று இருக்கிறது. ஒரு புதிய பார்வையை வாழ்க்கை பற்றி தருகிறது

வைட் ஸ்லாம் : சிட்டி ஆப் சாம்பியன் என்பது சென்னை வட சென்னை பகுதி ராயபுரத்தில் இருக்கிற சாதனை புரிந்த கேரம் போர்டு விளையாட்டு காரர்கள் பற்றிய படம். வறுமையில் இருக்கிறார்கள். சமூக விரோதிகள் பகுதி என்று சொல்லப்படுகிறது. காவல்துறை வஞ்சிக்கிறது. ஆனால் அங்கு கேரம் ற்றுக் கொடுக்க பல இருக்கிறார்கள் விளையாட்டை தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார்கள். கேரம் விளையாடுகிறார்கள் சுமார் நூற்றுக்கணக்கான பேர் அகில இந்திய அளவில் கேரம்போர்டு விளையாட்டு வீரர்களாக பயணம் செய்வதை இந்தப் படம் சொல்கிறது. இது அவர்களுக்கு வேலை வாய்ப்பாகும். மனதில் இருந்து பயத்தை ஒரு வெட்டிவிட்டு திறமை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு முன்னேற்றும் விஷயங்களையும் சொல்லி வாழ்க்கையில் விளையாட்டும் சாதனைகளும் தான் மாறுதலை அளிப்பதை படம் சொல்கிறது

 ”பாலை“ இந்த படம் குறும்படம் இல்லாமல் ஆவணப்படம் அல்லாமல் இரண்டும் இணைந்த ஒரு ஹைபிரிட் வடிவத்தைக் கொண்டிருந்தது. மூன்று பகுதிகளை கொண்டிருந்த இந்த படத்தின் முதல் பகுதி காதல் என்ற தலைப்பில் உள்ளது. இறந்து போன ஒருவருடைய ஆன்மா பேசுவது போல அவன் இறந்த போன பின்னால் அவன் மனைவியை சோகமாக பார்ப்பது அவனுக்கு பிடிப்பதில்லை என்று ஆரம்பிக்கிறது. ஆனால் அவரை தெரியாது பெற்றோர் சொன்னதால் திருமணம் செய்து கொள்கிறாள் அந்தப் பெண்

இரண்டாவது பகுதி பிரிவு. கணவன் வெளிநாடு போய்விட்டான் இருக்கிற பணத்தை எல்லாம் சேமித்து கொண்டு செல்வழித்துப் போகிறான். ஆனால் போனவன் சில சமயம் பணம் அனுப்புகிறான். 12 மணி நேர வேலை. கொஞ்ச நாளில் சம்பளம் இல்லாமல் போகிறது. இறந்து போகிறான் காவல்துறையின் அத்துமீறலால் தூக்கு போட்டு செத்துப் போவதாக சொல்கிறார்கள். திருட்டு நடந்ததால் அவனை விசாரித்ததாக காவல்துறை சொல்கிறது. எப்படியோ அவன் இறந்து போகிறான் இறப்புக்கு பின்னால் அவருடைய உடம்பை வாங்குவதற்கே கடன் பட்ட பெண் பல்லாயிரம் ரூபாய் அனுப்பி செலவு செய்து அவனுடைய உடம்பை வாங்குகிறாள். உடம்பு வருகிறது சாம்பல் ஆகிறான். கடன் தர யாரும் இல்லாதபோதும் அவள் செலவு பண்ணுகிறாள் இறந்தபோதும் சார்ந்த சடங்குகள் பூஜைகள் நடக்கின்றனம் துபாயில் நடந்த சாவு. இங்கு சாம்பலாகிப் போனது சாம்பலாகிப் போனவனே கதை சொல்கிறான். கதை கேட்டவர் எல்லாம் சொர்க்கம் போவார்கள் என்று ஒரு கூத்து வசனத்தோடு படம் முடிகிறது. இடைஇடையே இந்தக் கூத்து இந்தக் கதையைச் சொல்கிறது. அந்த வீட்டு குழந்தைகள் எல்லாம் அப்பா கடவுள் ஆகிவிட்டார் என்று நம்புகிறார்கள். ஒரு பகுதி கூத்து பாடல் தன்மையும் இன்னொரு பகுதி நடப்பு சம்பவங்களாலும் நிறைந்த படம். அந்த படத்தின் காட்டுப் பகுதி, தோட்டப்பகுதிகளும் பாலைவனமும் என்று மாறி மாறி காட்டப்படுகிற பாலை இடங்களும் பின்னணியில் ஒலிக்கிற துயரம் மிகுந்த பெண்ணின் குரலும் மனதை சிரமப்படுத்துவதாக இருந்தது.

- சுப்ரபாரதிமணியன்