கீற்றில் தேட...

அன்று மாலையே
வெண்ணிற விடியலுக்கான
சுவடுகள் தென்படத் துவங்கின.
மிகப்பெரிய நிலவொன்று
இரவின் விடியலை கொண்டுவந்தது.
இரவின் விடியல்
ஒருபோதும் பகலென்றாக முடியாது.
இருள்மண்டிக் கிடக்கும்
பகல்களை விடவும்
கண்கூசும் பகல்களை விடவும்
இந்த இரவின் விடியலை
இந்த இரவின் தனிமையை
இந்த இரவின் சுதந்திரத்தை
இந்த வெண்ணிற விடியலை
நட்சத்திரங்களோடு கொண்டாடுகிறேன்.
தயிர்சோற்றையும் நிலவையும்
அன்னை ஊட்டிய பிராயத்தில்
எவ்வளவு வெண்மையாக
இந்த இரவு ஜொலித்தது.
அதன்பிறகு
அதன்பிறகு
இன்றைய இரவுதான்
அதே வெண்மையை மீட்டு வந்திருக்கிறது.
பகலிடமிருந்து
இந்த இரவுதான் என்னை பாதுகாத்தது.
விடியலைத்தேடி
நான் இரவிடமே தஞ்சமடைகிறேன்.
இரவே
எனக்கு ஆழ்ந்த உறக்கத்தைக் கொடு.

கை நழுவிய மாம்பழக் கவிதை

ஒரு மாம்பழம் கனிந்து
கண்முன் தொங்குகிறது
ஒருகையில் செல்போனையும்
மறுகையில் கம்யூட்டரையும்
வைத்துக்கொண்டு
என்னசெளிணிவதென்று தெரியவில்லை
கையறுநிலையில் வீடுசேர்ந்தபோது
மாம்பழம் MAZAA பாட்டிலாக
உருமாறியிருந்தது.

***

சரியாக மூடப்படாத
தண்ணீர்குழாய்
இரவு முழுவதும்
கடிகாரத்துக்கு இணையாக
சொட்டிக்கொண்டேயிருக்கிறது
கீழ்வைத்த குடத்தில்
ஓர் இரவு
பாதுகாப்பாக
சேகரமாகிக்கொண்டிருக்கிறது.

***

டாலி தன் கடிகாரத்தை
துவைத்துக் காயப்போட்டிருக்கிறான்
வெயில் தாளாமல்
அது உருகி வழிந்தபடியிருக்கிறது
குளிர் நாளென்றில்
அது அப்படியே உறைந்து
பின் மீண்டும் உருகி
பின் உறைந்து
உருகி
உறைந்து
இறுதியாக
என் செல்போன் திரைக்குளத்தில்
மிதந்துகொண்டிருக்கிறது.
டாலி வந்து எட்டிப் பார்க்கிறான்
திரைக்குளம் கொதிக்கத் துவங்குகிறது