கீற்றில் தேட...

சாலையோரங்களில்
மரங்களை நட்டவன் கருணைமிக்கவன்
எனினும்
அந்திநேரங்களில் அடையவரும் பறவைகள்
வாகனப் பேரிரைச்சல்களைப்
பொருட்படுத்துவதில்லை
மரங்களை நட்டது
அசோகர்தான் என்று நம்புவது
சிறுவர்களின் வரலாற்றுப் பிரம்மைதான்
கோடை உலுப்பிய
புளியம் பழங்களைப் பொறுக்கிய
மூதாட்டிகளில் ஒருத்தி
சக்கரங்களில் நசுங்கிப் பிசாசாகத் தொங்குவதும்
சாலை வளைவுகளில்
தொடர்பலிகள் கேட்பதும்
பழங்கால வதந்திகள் என்று ஒதுக்குவதற்கில்லை
அரசாங்கம் என்பதும் சேவகம் செய்வது
அது சாலைகளை அகலமாக்கும்
அப்போது வெட்டிச் சரியும் மரங்கள்
பெருங் குரலெடுத்துச் சரியும் ஓசை
சாபமாக வானின் மீது படியும்
எனச் சொல்பவன் பயங்கரவாதி
வளர்ச்சிக்கு எதிரான அவன்
எங்காவது தொலைந்து போகலாம்
இப்போதும் வீழ்ந்த மரங்களிலிருந்து
கூடுகளைப் பத்திரப்படுத்திக் கொண்டு போகிறவர்கள்
சிறுவர்கள்தான்
ஒப்பந்தக்காரர்களின் கன்டெய்னர்கள்
சாலைகளை இறக்கிவைத்துவிட்டு
கிராமங்களின் நிழல்களை
தூக்கிச் செல்கின்றன
சாலையோர கல்லறைகளில் பிடுங்கி எறியப்பட்ட
கபால எலும்புகளைப் பதியனிட
மாற்றிடம் வேண்டி
பொக்லைன்களிடம் மன்றாடுவது வேடிக்கைதான்
அடையாத அந்திகளில்
சிறுவர்கள் சேகரித்த கூடுகளை
இரகசியமாய் திறந்து பார்த்துக் கொள்கையில்
திசை குழம்பிய பறவைகளின் உள்ளுறைந்த கூச்சல்
பெரும்பாலானோர் தங்களது இருப்பிடங்களை
கடந்தும் சென்றுகொண்டிருக்க
சிலர் சித்த பிரம்மையாகிவிட்டார்கள்
நீண்ட கன்டெய்ணர்களுக்காக
அகலமாக்கப்பட்ட சாலையின் முடிவில்
தெரியும் கட்டிடம் கூட
நமது பாராளுமன்றம் இல்லை என்று சொன்னால்
இனி அவர்களுக்குப் புரியப்போவதில்லை.