கீற்றில் தேட...

ஜன்னலுக்கு வெளியே கருப்பு புகை மூட்டம்

யானையின் தும்பிக்கை
லாவகத்துடன்
கபளீகரம் நிகழ்த்தும்
பொக்ளியர் இயந்திரத்தின் இரைச்சல்
பீறிட்டழும் மரங்களின் மரணஓலம்
வேர் நரம்புகளை
பிடுங்கியெறிந்து
நிரத்திய மண்பரப்பு
ஆலை கட்டிடங்களுக்கு அடியில்
பறவைகளின் கிறீச்சிடல்கள்
தொலைந்து போனதொரு வெளியில்
பரவியிருக்கிறது
சைரனின் சங்கொலி அலறல்
சாயக் கழிவு
கலந்த குளத்துநீரில்
நமக்கான சூரியனின் பிம்பம்
மங்கிய ஓளிர்தலில்
இன்னமும்
என் அறையில்
பசுமையும் நீர்செழிப்புமான
பச்சை நிறக்காடுகளை
ஒளிபரப்பிக் கொண்டேதானிருக்கின்றன
டிஸ்கவ்ரியும்
நேஷ்னல் ஜியோக்ரபிக் சேனலும்.

வெயில்கால இரவு

தூரத்து மலையில்
நீண்டு நெளிந்து
பற்றியெறியும்
நெருப்பின் வேட்கை
வனம் விழுங்கிவிட்ட பிறகும்
நீள்கிறது
அஸ்தமன இருளின்
மலைமுகட்டில்
ஒரு இரவுச் சூரியனை
உயிர்ப்பித்துவிடும்படியாய்!