1. இறந்துபோன போராளிகள்
போராளிகள் செத்துப் போகிறார்கள்
பின் அவர்கள்
சும்மாயிருப்பதில்லை.
முதலில் உங்களிடமிருக்கும்
இயலாமையின் தோலை உரிக்கிறார்கள்.
நீங்கள் ஊடுருவ முடியாத
அதிகாரத்தின்
அரண்மனைக்குள் புகுந்து
உயிரின் மையத்தைத்
தொட்டுத் திரும்புகிறார்கள்.
கல்லறைகளில் நீங்கள்
முகாமிடும் போது
உங்களைக் காவல் காக்கிறார்கள்.
உங்கள் யுத்தங்களின் தவற்றைத்
தம் மரணத்தால்
திருத்தி எழுதுகிறார்கள்.
நீங்கள்-
நீண்ட பெருமூச்சு விடுவதற்கான
நிமிஷங்களை உருவாக்குகிறார்கள்.
இறந்த போராளிகள் சிரிப்பிலிருந்து
பெற முடியாத உணர்வுகளை
அவர்களின் வலிகள்
சொல்லி விடுகின்றன.
கண்ணி வெடியில் சிதறி விழுந்தாலும்
மிச்சமிருப்பவர்கள்
உங்களின் பாதைகளில் துகள்களாய்
கண்களைப் பிடுங்கி
நசுக்கும் சித்ரவதைகளிலிருந்து
உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சொட்டுச்சொட்டாய்
பெண்களைச் சிதிலப்படுத்தும்
பலாத்காரத்தின் நொடிகளிலிருந்து
உங்களை மீட்டெடுக்கிறார்கள்.
இறந்தபோதும்
உயிர்த்தெழுகிறார்கள்
உங்கள் வலிமையாய்
எந்தப் போராளியும்
இறந்தபின்
கல்லறைகளில் சும்மாயிருப்பதில்லை
இன்னொரு போராளியைச்
சுமப்பதற்கான
கருவறையை உருவாக்குகிறார்கள்.
அவர்களைப் பற்றி நீங்கள்
கவலைப்படத் தேவையில்லை.
ஏனெனில்
புதிய நாடு உதயமாகும்போது
அந்த நாட்டின் தேசிய கீதத்தில்
பாடல் வரிகளாய் அவர்களிருப்பார்கள்.
2. சிந்திக்கிறவனின் உலகம்
இரவில் உறங்கிக் கொண்டிருந்தவனை
எழுப்புகின்றன.
அநியாயங்களின் உத்திரவுகள்
நிராகரிக்க முடியாது.
சிந்திக்கிறவன்
ஒரு நொடியைக்கூட
அமைதியாய்க் கழிக்க முடியாது.
சிந்திக்கத் தொடங்கினால்
முதல் விநாடியில்
மூளை சிதறிவிடும்.
அடுத்த நொடியில்
இதயம் இடம் பெயர்ந்துவிடும்.
மூன்றாவது நொடிக்குள்
கால்கள் கழன்றுவிடும்.
அடுத்த நொடிக்குள்
அனைத்து அடையாளங்களும்
அழிந்துவிடும்.
தப்பிக்க முடியாது
ஒரு மனிதன் மிருகமாவதை
சிந்தனை சித்ரவதைக்குள்ளாகிறது
எப்படித்தான் தப்பிக்க முடியும்
சிந்தனையை அறுத்துக்கொண்டு
சிந்திக்கத் தெரியாதவர்கள்
பாக்கியசாலிகள்
வெறும் அடிமையென்ற
முத்திரையோடு திரியலாம் எங்கும்
இங்கே சிந்திக்கிறவன்
தற்கொலை செய்யப்படுகிறான்
தூக்கிலிடப்படுகிறான்.
விஷம் வைத்து கொல்லப்படுகிறான்.
ஆணிகளால் அடிக்கப்படுகிறான்.
சுட்டுக் கொல்லப்படுகிறான்
கடைசிபட்சம்
துயரங்கள் நிறைந்த வாழ்க்கையிலிருந்து
கவிதைகளின் புகைபோக்கி வழியே
ஆவியாக்கப்படுகிறான்.
கவிதை
3. தற்காப்பின் கணங்கள்
அரசமுருகு பாண்டியன்
உதிரும் கணங்களில்
எதுவும் நிகழலாம்
எம் கூரையின்மீது
குண்டுகள் விழுந்து
யாம்
மொத்தமாய் எரிந்து சாம்பலாகலாம்...
பாலருந்தும் என் பாலகனைப்
பற்றியெறிந்துவிட்டு
எனது தனங்களில்
துப்பாக்கிமுனைக் கத்தியால் கீறி
இரத்தம் சுவைக்கலாம்...
கொதிக்கும் உலையை
இராணுவ வெறி ஏற்றப்பட்ட
பூட்சுகளால் எத்தி உதைக்கலாம்
சிதறும் சோற்றுப் பருக்கைகளில்
சிறுநீர் கழித்துச் சிரிக்கலாம் நீ...
பள்ளியிலிருந்து திரும்பும் மகளை
வழி மறித்து
அடையாள அட்டை தேடுவதாய்
பிஞ்சு மார்புகளில் யோனியில் கை வைக்கலாம்...
தமிழன் என்பதாலேயே
என் கொழுநனின் விதைகளை நசுக்கி
பருந்துக்கு இரை போடலாம்....
உனது வன்முறை தேசப்பற்றானது
எனது தற்காப்பு
தீவிரவாதமாக்கப்பட்டது...
எல்லா இழப்புகளினூடாகத்தான்
வாழ நேருமெனில்
எங்கள்
தேசத்தை நாங்கள் இழப்பதாயில்லை
அதன் விடுதலையையும்
கீற்றில் தேட...
கவிதாசரண் - டிசம்பர் 2006
சிந்திக்கிறவனின் உலகம்
- விவரங்கள்
- கோசின்ரா
- பிரிவு: கவிதாசரண் - டிசம்பர் 2006