கீற்றில் தேட...

1

அலுப்படையாமல் உழைக்கும்
உனது செயல்
என்னை ஆத்திரங் கொள்ள வைக்கிறது

ஒரு வாழ்த்தோ எதிர்விளைவோ
பாராட்டோ எதிர்பார்ப்பின்றி
நிகழ்த்திக் கொண்டிருக்கிறது உனது செயல்

ஜடத்துவத்தை உயிர்ப்பிக்கும்
உனது செயலின் மகாகாயத்தை
நானறிவேன்

ஒரு விஷயம்...
உனது நீதி ஒரு விஷமுள்ளாய் என்னை
தைத்துவிடும் அபாயத்திலிருந்து
தப்பித்துக் கொள்ள
கண்டும் காணாமல் இருந்து விடுவேன்
இருந்தும்
உனது செயல் என் அமைதியைக்
குலைக்கிறது
உனது செயலின் தர்மம்
என்னுள் ரூபம் கொள்கிறது

எத்தனை முறைதான் அதைக்
கொலை செய்வது
ஒவ்வொரு முறையும் ரூபம் கொண்டெழும்
போது
எனது அறக் கோட்பாடுகள் கண்களை
மூடிக்கொள்கின்றன
முளையிலேயே கிள்ளி எறிந்தாலும்
சதா முளைத்துக்கொண்டேயிருக்கிறது

உனது செயலைக் கொல்ல
உன்னைக் கொல்ல வேண்டும்
ஆனால்
அது சாத்தியமா எனத் தெயவில்லை.

உனது செயலைக் கொல்லும்
இரகசியத்தை நீ மட்டும்
அறிவாய்
அதை எனக்குச் சொல்லித் தொலையேன்

2

மிகப் பெரிய சதிகாரனாக
உன் பெயரைச் சிதைக்க
நண்பன் வலை விரித்தான்

நண்பனின் வலையை அறியாமல்
நீயும் விழுந்தாய்
(எனக்குத் தெரியும் நீ விழமாட்டாய் என)

திடீர் புகழாரங்கள். பூச்சுகள்
கேள்வி பதிலும்கூட

எங்கே என உவனைப் பற்றி
கேட்டாயோ இல்லையோ
எனக்குத் தெரியாது

ஆனால்
அந்நாடகத்தை நான் இரசித்தேன்
ஓடுவதும் அலைவதும்
உருகுவதுமான காட்சிகள்

உனது செயலை முடக்கி விட்டார்கள்
போல் தோன்றியது
(எனக்குத் தெயும் அது பொய் என)

அடுத்த காட்சியில்
உனது செயலின் ஒரு பொறி
ஒரே ஒரு பொறிதான்
உண்மையின் பக்கத்தில் நின்று
மெல்லத் தீண்டியது

சதிகார நண்பன் திரும்ப வந்தான்
கண்டீரா இதைப்போல்
துரோகத்தை
தீட்ட வேண்டாமோ பிரம்மத்தை
எழுதிக் கொடு உன் கோபத்தை
என்றான்
மௌனித்தேன்

(எனக்குத் தெயும் இதுவும் நிகழும் என)

வசையின் வடிகாலாயின
பான்றத் தாள்கள் கண்டபடி
பரவின விஷத்தின் நாவுகள்.

கொதித்து
உரையிட்ட நூலைக் கிழித்தெறிந்தேன்.
அன்று
நான் மனிதனானேன்.

3

ஒருகணம் துடித்து
மறுகணம் நிதானித்த
உனது செயல்
மீளுரை எழுதி மடித்தது
அதன் கடைசி வார்த்தைகள்

“நீங்கள் கழிசடைகள்”

தனது சுவரொட்டியைத்
தானே ஒட்டியனுப்பும்
அசடன் ஆவிளயன்.
அவனுக்குச் சுட்டுப் போட்டாலும்
பாடங்கள் வாரா
சுயமாய் தீட்டும் பாடலும் வராது
ஆனால் அவனது பள்ளியில்
150 ரூபாய்க்கு ஒரு சீட்
கொடுப்பவர் மட்டுமே படிக்கலாம்

ஏதோ ஆழக்கருத்துகள்
வெட்டி நீட்டுவதாக எண்ண வேண்டாம்
பாறைதாள்களில்
இருப்பினும்
ஏதோ வாசம்

எட்டிப் பார்த்தால் பார்ப்பனிய
திராவிடிய. கம்யூனிச தமிழிய
தலித்திய
பொத்த கதம்ப வாசம்.
உனது செயல் கேட்டது

எந்தக் கோட்பாடும்
நிரந்தரமல்ல
ஆனால் அவற்றைப் பற்றி
அ ஆ தெரியுமா என்று.

இன்னும் பதிலைக் காணோம்.