கவியரங்கில் பங்கெடுத்தவர்கள்
கேட்டுக் கொண்டிருக்க
கவிதையை வாசித்தேன்
வாசிப்பின் போது
அவர்களின் உணர்வுகளைப்
படித்துக் கொண்டிருந்தேன்!
கணநேரம்
முகம் சுளித்தனர் சிலர்
புரியாத புதிராக இருந்தது அவர்கள் செயல்!
''காரணம் யாது?" என
என்னுள் இருந்த கவிஞனைக் கேட்டேன்.
''எதிர்பார்த்ததுதான் நடத்துள்ளது
தேங்கிய குட்டையைக் கலக்கினால்
தெளிந்த நீரினைப் பார்க்கவா முடியும்?"
(கவியரங்கில்)
தொடர்ந்து வாசித்தேன்
எழுந்து சிலர் வெளியேறினர்
இருந்த சிலரின் இமைகளிலிருந்து
மழை காத்திருந்தது கொட்டுவதற்கு.
உள்ளுக்குள் உறைந்திருக்கும் கவிஞனைக் கேட்டேன்.
''இது இயற்கைதானே
சிறைப்பட்டிருந்த மேகம்
சீறிப் பாயத் துடிக்கிறது."
(கவியரங்கில்)
கவிதை தொடர்ந்தது...
அடுத்த கணங்களில்
பங்கெடுத்தோர் பார்வையில்
நெருப்பு கனன்றுகொண்டிருந்தது.
''என்னதான் இங்கு நடக்கிறது?"
கலவரத்துடன் கேட்டேன் என்னுள் இருந்த கவிஞனிடம்.
"இதற்கல்லவா காத்திருந்தேன் இதுவரையில்
எரிந்து பொசுங்கிய வெடி மருந்தின் திரி
வெடித்துச் சிதற முயற்சி செய்கிறது"-என்றான்.
(கவியரங்கில்)
வாசிப்பு தொடர-
காண்போரை மருள வைக்கும்
ஒளியைப் பாய்ச்சின அவர்களின் கண்கள்.
ஆவலோடு கேட்டேன் ஆழ்மனத்தின் கவிஞனை.
''இது தவிர்க்க முடியாத செயல்
கடுமையான இருட்டிலிருந்து
களம் நோக்கியே வீரநடை போடுகின்றார்"-என
பதில் வந்தது.
கீற்றில் தேட...
கவிதாசரண் - ஆகஸ்டு 2008
கவியரங்கம்
- விவரங்கள்
- இறையடியான்
- பிரிவு: கவிதாசரண் - ஆகஸ்டு 2008
தாமோதர் மோர் / தமிழில்: இறையடியான்