பழந்தமிழரின் அகப் புற வாழ்வியலை நம் கண்முன் நிறுத்துவன சங்க இலக்கியங்கள். மன்னர்களின் வாழ்வை மட்டுமல்லாது மக்கள் வாழ்வையும் சங்கப் புலவர்கள் அதிகம் பாடியுள்ளனர். களவில் தொடங்கி கற்பில் நிறைவுறும் அகவாழ்வையும் நாட்டு நலனிலும் மக்கள் நல்வாழ்விலும் அக்கறை செலுத்தும் மன்னர்களின் புறவாழ்வையும் நமக்குப் பறைசாற்றும் சங்கப் பாக்களில் தகடூர் மண்ணை ஆண்ட அதியமானை பலர் பாடியிருப்பினும் ஔவையின் பாடல்களே அவனது பெருமைகளை நமக்கு அதிகம் எடுத்தியம்புகின்றன. ஔவை வரலாற்றையும் அதியமானின் வரலாற்றையும் முன்வைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.ஔவை எனும் புலமையாளர்
ஔவை என்பதற்குத் தவப்பெண், தாய், சகோதரி என்றும் பாட்டி, முதியவள் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது1. தமிழில் மட்டுமல்லாது துளு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஔவைக்கு அம்மை என்றே பொருள் வழங்கம் உள்ளது. ஔவை குறித்து மாலதி மைத்திரி,
“ஔவை என்பது அரசியல், சமூகவியல், நாட்டுப்புறவியல் நாடோடியியல், கவிதையியல் எனப் பல தளங்களில் சங்கம் தொட்டு இன்று வரை திகழ்ந்து வரும் ஒரு உருவகமாகும். இப்படி ஒரு கவிதையில் உருவகம் இரண்டாயிரம் ஆண்டுகளின் வரலாற்றில் எந்த ஒரு மொழியிலும் எந்த ஒரு காலச் சாத்திரத்திலும் உருவாகவில்லை”2
என்று கூறுகிறார், ஔவை என்னும் பெயர் சங்க காலம் தொட்டு இன்று வரையிலும் இயற்பெயராக இல்லாமல் ஒரு குறியீடாகவே புலவர்களாலும் மக்களாலும் கையாளப்பட்டு வருவதை உணரமுடிகிறது. இதனை பழ. அன்பு மீனாள்,
"பெண் புலமைக்கு ஒரு குறியீடாக அவ்வையார் என்னும் பெயர் ஆளப்படுவதே, அவரது ஒப்பற்ற சிறப்புக்குச் சிறந்ததொரு சான்றாகும்”3
என்று விளக்குகிறார். மேலும்,
“ஔவை என்னும் பெயர் நமது பண்பாடு முழுவதையும் உளவாங்கி ஊடுறுத்தி அதன் சின்னமாக - ஒரு குறியீடாக - பயன்படுத்தப்படுகிறது”4
என்பதை கா. சிவத்தம்பி ‘ஔவையார் கவிதைக் களஞ்சியம்' என்னும் நூலின் முகப்புரையில் கூறுகின்றார்.
ஔவையாரை உலகப் பெண்பாற் புலவர்களோடு ஒப்பீடு செய்து ஆராய்ந்த பெ.சு.மணி,
“சங்ககால ஔவையாரின் ஆளுமையின் விளைவே பிற்கால பல ஔவையார்களின் தோற்றத்திற்கு மூல காரணமாகும்”5
எனக் கூறுகின்றார். சங்க காலத்திற்கு அடுத்து கல்விவிற் சிறந்தோங்கிய பெண்பாற் புலவர்கள் சிலர் தமது இயற்பெயரை விடுத்து தமக்கு முன்பு பெருமைமிக்க ஆளுமையாக விளங்கிய சங்க கால ஔவையின் பெயரைத் தமக்குச் சூட்டிக்கொண்டனர் என்பது மிகையில்லை.
ஔவையாரின் வரலாறு குறித்து ஞானாமிர்தம், திருவள்ளுவர் கதை, கபிலரகவல், புலவர் புராணம், விநோதரச மஞ்சரி, பன்னிரு புலவர் சரித்திரம் முதலான பல நூல்கள் கதைகளாகக் கூறுகின்றன. கபிலரகவல், ஞானாமிர்தம், புலவர் புராணம் ஆகிய மூன்று நூல்களும் ஔவையாரோடு உடன் பிறந்தவர்களின் எண்ணிக்கை ஏழு எனப் பகர்கின்றன. கபிலர், உப்பை, அதிகமான், உறுவை, வள்ளி, வள்ளுவர், சேரமான் போன்றோர் அவ்வெழுவராவர். ஔவையாரின் பிறப்புப் பற்றி வி.கிருஷ்ணமாச்சாரியார் பன்னிரு பன்னிரு புலவர் சரித்திரம் என்னும் நூலில்,
“பூர்வத்தில் தமிழ் நாட்டில் ஆதி என்றவருக்கும் பகவன் என்னும் ஒரு பிராமணனுக்கும் பெண் மக்கள் நால்வரும் ஆண் மக்கள் மூவரும் பிறந்தனர். இவருடைய தம்பிமார்தான் குறள் எழுதிய திருவள்ளுவ நாயனாரும், அகவல் எழுதிய கபிலர் ஆவார்”6
என்று கூறுகின்றார். இவ்வாறு ஔவையாரைப் பற்றி இன்னும் பல கதைகள் பேசப்படுகின்றன. இக்கதைகள் யாவும் பிற்காலத்தவரால் சங்க இலக்கியங்களை அடியொற்றிப் படைக்கப்பட்டவையாகும். இவை படிப்பதற்குச் சுவை தருவதாக இருப்பினும் நம்பத்தகுந்தவைகளாக இல்லை. ஔவையாருக்குக் கூறப்படும் புனைகதைகளைப் போன்று வேறு எந்த பெண்பாற் புலவருக்கும் கூறப்பட்டதாகத் தெரியவில்லை.
ஔவையார் சங்கப் பெண்பாற் புலவர்களில் தலைமைச் சான்றவர். இவர் பாடியனவாகத் தொகை நூல்களில் ஐம்பத்தொன்பது பாடல்கள் காணப்படுகின்றன. இப்பாடல்கள் அனைத்தும் அகவற்பாவல் பாடப்பட்டவை. ஔவையாரின் பாடற்திறம் பற்றி வ.சுப. மரணக்கம், “இவர் புறம் பாடுவதில் வல்லவர் என்பதனைப் பலர் அறிகுவர். இவர்தம் புறப்பாடல்கள் 33: அகப்பாட்டுகள் இருபத்தாறே. களவிற்கு உரியவை 8: கற்பிற்கு உரியவை 18: அகம் பாடுவதிலும் வல்லுநர் ஔவையார் என்பதனைக் கூறவிரும்புகிறேன்”7 என்று கூறுவதன்வழி அறியலாம். ஔவையார் சங்கப் புலவர்களில் ஒப்பற்றவராகவும், உலகியல் ஞானமும் அரசியல் அறிவும் ஒருங்கே பெற்றவராகவும் திகழ்கின்றார். இவர் முடிவேந்தர் மூவரைப் பற்றியும் பாடியுள்ளார். சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு, பல்லவநாடு, நாஞ்சில் நாடு போன்றவற்றையும் அங்கிருந்த பல ஊர்களையும் அங்கு ஆட்சி புரிந்த மன்னர்களையும் தமது பாடல்களில் சிறப்பித்துள்ளார்.
அதியமான் மட்டுமல்லாது, அதியமானது மகன். பொகுட்டெழினி, நாஞ்சில் வள்ளுவன், தொண்டைமான், பாரி, உக்கிரப்பெருவழுதி, சேரமான் மாவெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கிள்ளி வளவன், முடியன், நன்னன் உள்ளிட்ட பதினொரு மன்னர்கள் குறித்து ஔவையார் பாடியுள்ளார்.
மன்னர்களைப் போன்றே பரணர் (புறம்.96), கபிலர் (புறம்.303), வெள்ளி வீதியார் (அகம்.147) ஆகிய புலமைச் சான்ற புலவர்களையும் பாடிச் சிறப்பித்துள்ளார், தகடூர் எறிந்த பெருந்சேரலிரும் பொறையின் காலத்தைக்கொண்டு ஔவையாரின் காலம் கி.பி.முதல் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதி எனக் கணக்கிடப்படுகிறது.
ஔவையார் அதியமானிடம் நெல்லிக்கனி பெற்று உண்ட வரலாறு நாடறிந்தது. அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்ததை சிறுபாணாற்றுப்படை கூறுகின்றது. அதியமான் கொடுத்த நெல்லிக் கனியைத் தாம் பெற்று உண்டதை ஔவையார் தமது பாடல் ஒன்றில் (புறம். 91) குறிப்பிடுகின்றார். கிடைத்தற்கரிய நெல்லிக் கனியை உண்டதால் ஔவையார் பல காலம் வாழ்ந்தார் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து உ.வே.சா,
“அதிகன் கொடுத்த நெல்லிக் கனியைத் தின்றதால் ஔவையார் சிரஞ்சீவியாக இருந்திருக்கக் கூடும் என்பது சில பெரியோர் கருத்து”8
என்று கூறுகின்றார். அதியமான் ஔவைக்குக் கொடுத்த நெல்லிக் கனியானது அமுதம் போன்றது என்பதைப் பரிமேலழகர்,
“இனிய கனிகளென்றது, ஔவையுண்ட நெல்லிக்கனி போல அமிழ்தாவனவற்றை”9
என்று இனிய உளவாக (குறள்.100) என்னும் குறளின் உரையில் கூறிச் சிறப்பித்துள்ளார். இவ்வாறு ஔவையின் புகழ் சங்க காலம் முதல் சம காலம் வரை நின்ற நிலைப்பேறுடையதாக இருந்து வருகிறது.
அதியமான் நெடுமான் அஞ்சி
சங்க காலத்தில் இருந்த சிறப்புற்ற நகரங்களில் ஒன்று தகடூர். சேரர் மரபைச் சார்ந்த அதியமான் அஞ்சி இந்நகரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செலுத்தினான். தகடூர் பல மாடமாளிகைகளைக் கொண்டிருந்தது. அன்பர் என்பவர்க்கு மட்டுமே அங்கு இடமிருந்தது. பகைவர் எவரும் உள்நுழைய முடியாத அளவிற்கு வீரர்களால் காவல்செய்யப்பட்டு வந்தது. இத்தகைய சிறப்பு மிக்க, இந்நகரை ஔவையார்,
"ஆர்வலர் குறுகி னல்லது காவலர்
கனவினுங் இறுகாக் கடியுடை வியனகர்
மலைக்கணத் தன்ன மாடஞ் சிலம்ப"10
என்று காட்சிப்படுத்துகிறார்.
அதியமான் “அதிகர்” மரபில் தோன்றியவன். அஞ்சி என்னும் இயற்பெயரை உடையவன். தனது பெயரையும் தான் தோன்றிய குலமரபையும் இணைத்து ‘அதியமான் நெடுமானஞ்சி' என அழைக்கப்பட்டான். இவனது பெயர்,
"கடுமான் றோன்ற னெடுமா னஞ்சி”11
என்றும்,
“அணிபூணணிந்த யானை யியறேர் ரஞ்சி
அதியமான் ...”12
என்றும்,
“மடவர் மகித்துணை நெடுமானஞ்சி”13
என்றும் ஔவையாரால் குறிப்பிடப்பட்டுள்ளது. அதியமான் சேரர் மரபைச் சார்ந்தவன் ஆகையால் பனம்பூ மாலையை அணிந்திருந்தான் என்பதை ஔவையார்,
“ஈகையங் கழற்காலிரும் பனம் படையல்”14
எனக் குறிப்பிடுகிறார்.
அதியமான் தகடூர் பகுதி முழுவதையும் ஆட்சிச் செலுத்தியதோடு மட்டுமல்லாது, இறும்பொறையூர், ஆரைக்கால் என அழைக்கப்பட்ட இன்றைய நாமக்கல் பகுதியையும் ஒருசேர ஆண்டு வந்தான் எனக் கல்வெட்டுகள் சான்றளிக்கின்றன.
பண்டையத் தகடூராகத் திகழ்ந்த இன்றைய தருமபுரியில் இன்றளவும் அதியமான் கோட்டை என்னும் ஓர் ஊர் அதியமானின் புகழைப் பறைசாற்றிய வண்ணம் இருந்து வருகிறது. இவனது வாழ்வியல் குறிந்துப் பெ. கோவிந்த மூப்பனார்,
“வடிவார் குழலி என்ற மங்கையை மணந்து உடலும் உயிரும் போல ஒன்றி இல்லறம் நடத்தினான். அவன் தன் தந்தை விண்ணுலகடைந்த பின்தான் தன்னுடைய நாட்டை அரசாண்டு வந்தான். அதியமான் குடையும், அவன் தன்னிடத்தே முறை வேண்டினர்க்கு நடுநிலையறிந்து கூறும் விடையும் அவன்நாட்டு மக்களை மகிழ்வித்தன”15
என்று கூறுவதால் மேலும் அறியப்படுகிறான்.
அதியமான் பண்பு நலன்
அதியமான் தன் குடிமக்களைச் சிறப்புடன் போற்றிப் பாதுகாத்தான். பொருள் இருந்த காலத்து அனைவருக்கும் உணவளித்தும், அவை இல்லாத காலத்து தம்மிடம். இருப்பதைக் கொண்டு பலரோடு பகிர்ந்து உண்டும் வாழ்ந்தான். இத்தகைய குணமுடைய அதியமான் வறியவராகிய சுற்றத்திற்கெல்லாம் தலைவனாகவும் திகழ்ந்தான். இதனை,
“உண்டாயிற் பதங்கொடுத்
தில்லாயி னுடனுண்ணும்
இல்லோ ரொக்கற் தலைவன்”16
என்று வரும் புறப்பாடலடிகள் சுட்டுகின்றன. அதியமான் மிகுந்த வீரமுடையவனாக இருந்தபோதும் அறம் தவறி போர் புரிந்ததில்லை. தீக்கடைக்கோல் கடையாதபோது தீயை வெளிப்படுத்துவதில்லை. அதுபோல் அதியமான் தன் வலிமையை அடக்கிவைத்தும், போர் உண்டானபோது தீக்கடைக் கோவிலிலிருந்து வெளிப்படும் தீ போல் தன் வலிமையைப் பலரும் அறியும்படி வெளிப்படுத்தும் பண்புடையவன். இதனை,
“இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத்
தோன்றா திருக்கவும் வல்லன் மற்றதன்
கான்றுபடு கனையெரி போலத்
தோன்றவும் வல்லன்றன் தோன்றுங் காலே”17
என்று வரும் பாடலடிகள் எடுத்துரைக்கின்றன.
அதியனின் கொடைத் திறம்
கைமாறு கருதாமல் பொழியும் மழைபோல் அதியமான் தன்னை நாடிவரும் வறியவர்க்குக் காலமும் இடமும் தகுதியும் பாராது கொடையளிக்கும் பண்புடையவன். இவனிடம் பரிசில் வேண்டி ஒருநாள் சென்றாலும் இருநாள் சென்றாலும், அவரே பலநாள் பலரோடு கூடிச் சென்றாலும் முதல்நாள் எவ்வாறு முகமலர்ச்சியுடன் வரவேற்று இரவலர் வேண்டிய பொருட்களை விரும்பிக் கொடுத்தானோ, அதேபோல் விருப்பத்துடன் கொடையளிக்கும் தன்மையுடையவனாக இருந்தான். இதனை ஔவையார்,
“ஓவா தீயுமாரி வண்கைக்
கடும்பகட்டியானை நெடுந்தேரஞ்சி”18
என்றும்,
“ஒருநாட் செல்லல மிருநாட் செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ”19
என்றும் வரும் பாடலடிகள் எடுத்தியம்புகின்றன.
ஔவைக்கு நெல்லிக்கனி ஈதல்
அதியமான் ஆண்டு வந்த தகடூர் உயர்ந்த மலைப்பகுதிகளைக் கொண்டது. அத்தகைய மலைப் பிளவின் உச்சியில் விளைந்த கருநெல்லிக்கனி ஒன்றை அதியமான் பெற்றான். அக்கனி உண்பவரின் வாழ்நாளை நீட்டிக்கும் தன்மையுடையது. இதனை அறிந்த அதியமான் தான் உண்டு நீண்டகாலம் ஆட்சி செலுத்தி உலக இன்பங்களைப் பெற வேண்டும் என நினைக்காமல் புலமைச் சான்ற தனது அவைக்களைப் புலவர் ஔவைக்கு ஈந்து உண்ணச் செய்தான். உண்ட பின்பு அக்கனியின் அருமை உணர்ந்த ஔவை சிவபெருமான் தான் நஞ்சினை உண்டு அமிழ்தத்தைத் தேவர்களுக்குக் கொடுத்ததுபோல் இறப்பினை உண்டாக்காத கனியைத் தந்து ஆயுளை நீட்டிக்கச் செய்த அதியமான் பிறையை தலையில் சூடியிருக்கும் சிவனைப்போல் நெடுங்காலம் வாழவேண்டும் என வாழ்த்தினார். இதனை,
“நீலமணிமிடற் றொருவன் போல
மன்னுக பெரும நீயே
........................................
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா
தாத னின்னகத் தடக்கிச்
சாத னீங்க வெமக்கீந் தனையே”20
என வரும் ஔவையின் பாடலடிகள் சுட்டுகின்றன.
அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்த செய்தியைச் சிறுபாணாற்றுப்படை,
“........................................ மால்வரைக்
கமழ் பூஞ்சாரல் தீம்கனி ஔவைக்கு ஈந்த
உரவுச் சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
அரவக் கடல்தானை அதிகனும்”21
என்று உறுதிப்படுத்துகிறது. ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்த நிகழ்வே அதியமான் கடையேழு வள்ளல்களில் ஒருவனாகத் திகழக் காரணமாக இருந்தமைப் பெறப்படுகிறது.
அதியமானின் மறைவு
பெருஞ்சேரலிரும்பொறையுடன் நடைபெற்ற போரில் அதியமான் கொல்லப்பட்டான். அவன் இறந்தபோது, பெற்ற தாயினால் கைவிடப்பட்ட குழந்தையைப் போல் சுற்றங்கள் அனைத்தும் வருந்தின. அதியமானின் மார்பில் தைத்து அவனது உயிரைப் போக்கிய வேலானது, பாணரது உண்கலத்தைத் துளைத்து இரந்து வாழ்பவரின் கையிலும் தைத்து, அவனால் பாதுகாக்கப்பட்ட சுற்றத்தாரின் கண்ணொளியை மழுங்கச் செய்து இறுதியில், சொல்லாராய்ச்சியுடைய புலவர் நாவில் சென்று தைத்தது. அதனால் இனி பாடுவோரும் இல்லை. அவ்வாறு பாடினாலும் அன்பு பாராட்டிப் பொருள் கொடுப்பாரும் இல்லை என்பதை ஔவையார்,
“அருந்தலை யிரும்பாண ரகன் மண்டைத் துளையுரீஇ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவைசோர
அஞ்சொனுண் தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்று வீழுந்தன்று அவன்
அருநிறத்து இயங்கிய வேலே
ஆசாகு எந்தை யாண்டு உளன் கொல்லோ
இனிப் பாடுநரும் இல்லை பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை”22
என்று தமது துயரினை வெளிப்படுத்துகிறார். அதியமான் மாய்ந்தபின் அவனால் பாதுகாக்கப்பட்ட சுற்றங்கள் அனைத்தும் ஆதரவின்றித் தவித்தன என்பதும், அவனது மறைவால் புலவர், வறியவர் எனப் பலரும் மீளாத் துயருக்கு ஆளாயினர் என்பதும் அறியப்படுகிறது.
அதியனின் உடல் ஈமத்தீக்கு இரையானபோது உடல் அழிந்து சிதைந்தாலும், அழியாமல் போனாலும் வானில் தோன்றும் சந்திரனைப் போன்ற குளர்ச்சியையும், ஞாயிற்றைப் போன்ற ஒளியையும். உடையவனின் புகழ் என்றும் அழிவில்லாதது என்பதை ஔவையார்,
“திங்க ளன்ன வெண்குண்ட
ஒண்ஞாயி றன்னோன் புகழ்மா யலவே”23
என்று பாடுகிறார்.
அதியமான் மறைவிற்குப் பிறகு அவனுக்கு நடுகல் எடுக்கப்பட்டது. அப்போது அதியமான் விரும்பி உண்ட கள்ளுணவு வைத்து வழிபாடு செய்யப்பட்டதனை ஔவையார்,
“நடுகற்பீலி சூட்டி நாரரி
சிறுகலத் துகுப்பவுங் கொள்வன் கொல்லோ”24
என்று பாடுகிறார். நாடு முழுவதையும் கொடுத்தாலும் வேண்டாதவன் அதியமான். இங்குப் படைக்கப்பட்ட கள்ளுணவை ஏற்பானோ, மாட்டானோ என ஔவையார் வினவுவதாக அமைகிறது அவரது பாடற்கருத்து.
நிறைவுரை
சங்கப் பெண்பாற் புலவர்கள் ஐம்பதுபேரில் ஐம்பத்தொன்பது பாடல்களைப் பாடி ஔவையே தலைமைச்சான்ற புலவராகத் திகழ்கிறார். பதினோரு மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் ஔவையின் பாடல்களில் காணக்கிடைக்கின்றன. சங்கம் மருவிய காலத்திற்குப்பின் வந்த பெண்புலமையாளர்கள் பலர், ஔவையை தமது முன்னோடியாகக் கொண்டு அவரது பெயரைத் தமக்கும் சூட்டி மகிழ்ந்தனர். முடிவேந்தர்களைக் காட்டிலும் அதியமான் இன்றுவரை தமிழ்ச் சான்றோர்களின் மனதில் நிலைத்து நிற்பதற்குக் காரணம் ஔவையின் காலத்தால் அழியாத பாடல்களே எனலாம். முடிவேந்தர்களுக்கு நிகரான புகழுடைய அதியமான் வீரத்திலும். கொடையிலும் தன்நிகரற்ற தகைமையாளனாகத் திகழ்கிறான். அதியமானின் புகழ் ஈராயிரம் ஆண்டுகளாகத் தொடர்வதைப்போல் சந்திரனும் சூரியனும் உள்ளளவும் இருந்துவரும். இருக்கும் என்பதில் மாற்று கருத்திற்கு இடமில்லை.
குறிப்புகள்
1. நா.கதிரைவேற்பிள்ளை, தமிழ்மொழி அகராதி, ப.967.
2. மாலதி மைத்திரி, விடுதலையை எழுதுதல், பக்.89-90
3. பழ. அன்பு மீனாள் (ப.ஆ)., இலக்கியத் தரவுகளில் மகளிர் பதிவுகள், ப.20.
4. ப. சரவணன், ஔவையார் கவிதைக் களஞ்கியம்,ப.7.
5. பெ.சு.மணி, சங்ககால ஔவையாரும் உலகப் பெண்பாற் புலவர்களும், ப.309.
6. வி.கிருஷ்ணமாச்சாரியார், பன்னிரு புலவர் சரித்திரம், ப.167.
7. வ.சுப.மாணிக்கம், தமிழ்க்காதல், ப.366.
8. உ.வே.சா., சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும், ப.107.
9. பரிமேலழகர் உரை, திருக்குறள்,ப.40.
10. புறம்.390:5-7
11. புறம்.206:6
12. புறம்.101:4-5
13. புறம்.315:3
14. புறம். 99:5
15. பெ.கோவிந்த மூப்பனார், சங்க காலத்து வேந்தரும் வேளிரும், ப. 106.
16. புறம். 95:6-8
17. புறம்.315:4-7
18.குறுந். 91:5-6
19. புறம்.101:1-3
20. புறம். 91:6-11.
21. சிறுபாண். 99-103.
22. புறம். 235:10-17
23. புறம். 231:5-6
24. புறம். 232:3-4
- முனைவர் சு.சதாசிவம், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, சென்னை கிறித்தவக் கல்லூரி (தன்னாட்சி) தாம்பரம், சென்னை