இயந்திரத் துவக்கை மத்தாய் நிறுத்தி
இனவெறிப் பாம்பைக் கயிறாய்ச் சுற்றி
அரசதிகார அமுதம் வேண்டி
அரசியல் கடலடிச் சேற்றைக் கடைந்த
அமரர் எவரோ அசுரர் எவரோ
அமுது விளைந்ததோ ஆர் கொண்டனரோ
அறியேன் ஆயினும் நஞ்சு மட்டும்
நன்றாய் விளைந்தது நாடு பரவலும்
ஆலகாலம் அருந்திக் கறுத்த
நீலகண்டனார் ஒதுங்கி நிற்கவும்
நாட்டு மக்கள் நஞ்சே உண்டனர்
(மகேசருக்குத் தீர்ந்தது; 106)
ஒரு கவிஞரை அவரது கவிதையின் வழியே அறிமுகப்படுத்துவதன்றி, வேறென்ன சிறப்பு இருக்கக்கூடும். மேற்கண்ட இக்கவிதையே சிவசேகரம் தன் படைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கும் கச்சாப்பொருள் குறித்து விளக்கிவிடும். பேராசிரியர் சிவசேகரம் இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் துறை மற்றும் இலண்டன் இம்பீரியல் கல்லூரி இயந்திரப் பொறியியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1970கள் முதலே கலை, இலக்கிய, அரசியல் தளங்களில் இயங்கித் தனது எழுத்துகளால் களமாடிய ஒரு படைப்பாளி. கவிதைப் படைப்பாற்றலுடன் சிறுகதை, விமர்சனம், நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகத் தன்மையுடையவர். சுமார் அரை நூற்றாண்டு காலம் தான்சார்ந்து இயங்கும் துறைக்கும் தமிழ்மொழி இலக்கியத்திற்கும் அவராற்றிய பங்களிப்பு அளப்பரியது எனலாம். சிவசேகரம் அடிப்படையிலேயே இடதுசாரிச் சிந்தனை கொண்டவர். கடந்த ஐம்பது வருடங்களாக இலங்கை அரசியல், சமூக அவலம், ஒடுக்கப்படும் மக்களின் துயரம், வல்லாதிக்க எதிர்ப்பு, சாதி - மதம் - இனம் - பால் - பொருளாதார வேற்றுமை போன்ற மனித சமூகத்தைப் பாகுபடுத்தும் அத்தனை கருத்தியல்களுக்கும் எதிராகவே தனது படைப்புகளை அமைத்துக் கொண்டார். குறிப்பாக, ஒடுக்கப்படும் மக்களின் குரலாய் ஒலிப்பதே இவர் கவிதைகளின் உள்ளீடு. அவ்வகையில் சிவசேகரத்தின் பெரும்பாலான கவிதைகள் அரசியல் உள்ளடக்கம் பொதிந்தே காணப்படும்.
தனது கவிதைகளில் மக்கள் பிரச்சினைகளை கவனப்படுத்திய அதேவேளையில், மக்களையே சாராது இயங்கும் அறிவு மேதமை கொண்ட புத்திஜீவிகளையும் கண்டித்துச் செல்லும் போக்கு அவரது நிலையை இயல்பாக வெளிக்காட்டிவிடும். உதாரணமாக: “புதரின் இருளில் மின்னும் மின்மினிகள், கடலின் தொலைவில் தெரியும் தோணியின் விளக்கொளி; இவையிரண்டைப் போல வானின் பெருந்தொலைவில் பலகோடி தாரகைகள் (நட்சத்திரங்கள்) மின்னிக் கொண்டிருக்கும். சூரியனை விட அளவில் பெரிய அத்தனை தாரகைகள் ஒருசேர்ந்தும், இரவல் ஒளியினால் ஒளிரும் நிலவின் ஒளியில் சிறு அளவைக் கூட உலகினுக்குத் தர முடியவில்லை. அப்படித்தான் நம் மக்களுக்கு அருகிலில்லாது அறிவுலகத்தில் இயங்கும் அறிஞர் பெருமக்களும் தாரகைகளைப் போன்றவர்கள்” (மக்களைச் சாராத புத்திஜீவிகள்; 7) எனச் சாடுகிறார்.
யாதொன்றையும் விமர்சிக்கும் சமரசமற்ற துணிவுப் போக்கினை, தான் சார்ந்தியங்கிய இடதுசாரி இயக்கம் வழியாகவே பெறுகிறார். ஓரிடத்தில் அவ்வியக்கத்தின் சிறப்பை,
எங்கள் இயக்கம்
ஓரிரு வழிகளில்
காலை வானில் காரிருள் பிளந்து
செங்கொடி எழும்பும் சூரியன் போன்றது
தொடரும் விடிவை வருமுன்கூறும்
இத்துணை மங்கிய ஒளியில் உலகம்
விடியுமோ எனச் சிலர் ஐயுறினும்
உறுதி கொண்டு வளர்ந்து புதிய
நாள் செயும் வகையில்
எங்கள் இயக்கமும் எழும் சூரியனும்
ஒன்று போல்வன!
ஒன்று போல்வன!! (எங்கள் இயக்கம்; 9)
என்ற கவிதையில் விளக்குகிறார். அத்துடன் தன்னைக் கவிதை எழுதத் தூண்டியதும் மார்க்சியச் சிந்தனையே என ‘நதிக்கரை மூங்கில்’ எனும் புத்தகத்தின் முன்னுரையில் கூறியதாக இத்தொகுப்பின் முன்குறிப்பில் எம்.ஏ. நுஃமான் சுட்டியுள்ளார். குறிப்பாக, எனது கவிதைகள் எவரையும் மகிழ்விக்கும் நோக்குடையன அல்ல; என் கருத்துடன் எவரும் உடன்பட வேண்டியதும் தேவையல்ல என்கிறார் சிவசேகரம்.
இலங்கை, தமிழகம் மற்றும் புகலிடமாகச் சென்ற சில நாடுகளில் வசித்து வந்தவர், அங்கு வெளியாகிவரும் சிறு சஞ்சிகைகளில் தனது பங்களிப்பைச் செலுத்தியுள்ளார். கட்டுரைகளின்வழி காத்திரமான விமர்சனங்களை எழுப்பியதைப் போலவே கவிதைகளையும் இயற்றி வந்துள்ளார். தீவிரமான சமூகநீதி அரசியலே இவர் கவிதையின் பாடுபொருள் என்றாலும் அதனை அணுகும் உத்திகளில் மட்டும் பல்வேறு மாற்றங்கள் காணப்படும். அவ்வகையில் வரலாறு காட்டும் தொன்மப் படிமங்களை விமர்சித்து, வரலாற்றைக் கட்டுடைக்கும் பாணியிலும் சில கவிதைகள் அமைந்துள்ளன. மகேசருக்குத் தீர்ந்தது (106), அகலிகை (26), ஏகலைவ பூமி (140) போன்ற கவிதைகள் அவ்வகைமையைச் சார்ந்தவையாகும். இதுபோன்ற தொன்மக் கட்டுடைப்புகள் சிவசேகரத்தின் சமூகவியல் பார்வைக்குச் சான்றாகி நிற்கின்றன.
அதிசயங்கள் (38) எனும் தலைப்பிட்ட கவிதை, நகர்மயமாக்கலால் கண்ட புதுமைகளையும் விளைவுகளையும் பேசுகிறது. அதேவேளை உன் மண்ணும் என் மண்ணும் (41) என்ற கவிதை, சொந்த மண்ணில் காணப்படும் பிரிவினை குறித்துப் பேசுகிறது. இங்ஙனம் தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமையைப் பறைசாற்றிய ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவு கூரலாம். அதுநாள் வரையிலும் இது ‘எனது மண்’ எனப் பிரிவினை பேசியவர்கள் பொதுவானதொரு பிரச்சினை வரும்போது, இது ‘நமது மண் - ஒன்றிணைவோம்’ என்பர். மாடு பிடித்தல் தமிழனின் வீரத்திற்கு அடையாளம்; அதைக் காக்க ஒன்றிணைவோம் எனக் கூக்குரலிட்டு அனைத்துத் தமிழர்களையும் ஒருசேர அழைத்தவர்கள், சாதிப் படிநிலையில் கீழ்நிலையிலுள்ள சாதியைச் சேர்ந்தவன் மாட்டை அடக்கிவிட்டான் என்றதும் அவனைக் கொலை செய்யும் அளவிற்கும் துணிவதுதான் மிகப்பெரும் அபத்தம். அதுபோலத்தான் இம்மண் யாருக்கானது எனக் கேட்கிறார்.
நீ கூறும் மண்
அதனை உழுபவனின் மண்ணென்றால்
அவனுக்கே சேரட்டும்
முன்னாலே நிற்கிற ஆண்டைகளின் பங்கென்ன?
ஒரு கவிதையின் சிறப்பு என்னவென்றால், மிக இயல்பாக நம்முடன் பொருந்திப்போவது தான். அவ்வகையில் உழுபவனே நிலத்திற்குச் சொந்தக்காரன் எனப் பொதுவுடைமை பாடிய கவிஞர் தமிழ்ஒளி போன்றே சிவசேகரமும் தனது கவிதையைக் கட்டமைக்கிறார். நபர்கள் வெவ்வேறாயினும் இருவரின் சிந்தனை ஒன்றுபட்டதற்கு அவர்கள் பின்பற்றிய இடதுசாரி இயக்கமே முக்கியக் காரணமாகும்.
பெரும்பாலும் இயற்கை வர்ணனைகளின் ஊடாகவே வாழ்வின் அர்த்தப்பாடுகளைப் பேசுகிறார். கவிதையை வாசிக்கும்போது, இயற்கை அழகு பற்றி பேசுவது போலத் தெரிந்தாலும் அதன் உள்ளே பூடகமான அரசியல் பதிவினையே கையாண்டிருப்பார். மேலும் ‘பகடி’ வகைக் கவிதைகளும் இதனுள் அடக்கம். பேரில் என்ன இருக்கிறதாமோ (45), பாட்டன் பரம்பரை (48), காரணங்கள் (53) போன்றவை அவ்வகையின. அதற்கு ஓர் எடுத்துக்காட்டாய்,
பலநூறு ஆண்டுகள் முன் பண்ணிவைத்த
கோபுரத்தை
அண்ணாந்து பார்த்து அதை அதிசயித்து
உன் மனதுள்
பாட்டனுக்குப் பாட்டனுக்குப்
பாட்டனுக்குப் பாட்டனெவன்
பண்ணியவன் என்றெண்ணிப் பரவசித்து நிற்பவனே
பழைய பரம்பரையில் பாட்டன்மார் பலபேர் காண்
கல்லுடைத்த பாட்டன்மார் கல்சுமந்த பாட்டன்மார்
பேருனக்குத் தெரியாது
ஆராரோ தேரேறி வீதிவலம் வருவதற்காய்க்
கையிழந்த பாட்டன்மார் கண்ணிழந்த பாட்டன்மார்
காலொடிந்த பாட்டன்மார் கதையுனக்குத் தெரியாது
கதைமுடிந்த பாட்டன்மார் கணக்குனக்குத் தெரியாது
கோபுரத்தில் பேர்பொறித்துக்
கொலுவிருந்த மன்னரிடை
பாட்டன் உனக்கொருவன் எவனிருப்பான் எண்றெண்ணிச்
செல்லரித்த ஏடுகளைத் தேடுகிற பைத்தியமே!
பணக்கார உறவுகளைப் பழமையிலும் நாடுகிறாய்
(பாட்டன் பரம்பரை; 48)
என்ற கவிதையைக் குறிப்பிடலாம்.
1983 - 1997 வரை புலம்பெயர் இலக்கியங்களின் முக்கியமான காலகட்டமாகக் குறிப்பிடப்படுகிறது. அவ்வேளையில் உருவான இலக்கியங்களை மதிப்பீடு செய்கையில், தனது படைப்புகளின்வழி சிவசேகரம் தவிர்க்க முடியாததொரு ஆளுமையாகத் திகழ்வார். இவரது கவிதைகள் அங்கதம், கேலி, துயரம், ஆற்றுப்படுத்தல், இயற்கை வர்ணனை, அதனூடான அரசியல் பேச்சு, ஆதிக்கத்திற்கெதிரான கோபம், விடுதலை உணர்வு, மனிதம் பேசுதல், தீண்டாமை எதிர்ப்பு எனப் பல கருப்பொருள்களைத் தாங்கி நிற்கிறது. இப்புத்தகத்தின் முன்னுரையில் கூட, சிவசேகரம் கவிதைகளின் அழகியல் குறித்து விரிவாகப் பேசப்படவில்லை எனக் குறைபட்டுள்ளனர். இனிவரும் காலங்களில் அக்குறையை நீக்குவதற்கு இத்தொகுப்பு முழுமையாக உதவி புரியும்.
மதத்தின் பெயரால் நடக்கும் பல்வேறு வன்முறைகளையும் சில கவிதைகள் எடுத்துரைக்கின்றன. அதற்கு உதாரணமாக நத்தார் நாள் வெறுவயிற்றில் பெரிய வெள்ளிக்கிழமை நினைவுகள் (78) எனும் கவிதையின் ஒருபகுதி பின்வருமாறு:
ஒரு கன்னத்தில் அறைந்தவனுக்கு
மறு கன்னத்தைக் காட்ட
நம் குழந்தைகளின் முகத்தில் கன்னங்கள் இல்லை -
குழிகள் இருக்கின்றன
சிலுவை ஏறி அலுத்ததனால்
சிலுவை ஏற்றுகிறவர்களைச்
சிலுவை ஏற்றப் போகிறோம்
பரமபிதாவுக்கு
இனி ஒரு நாளும் தன் குமாரன் எவனையும்
சிலுவையில் அறைபடப்
பூமிக்கு அனுப்பும் அவசியம் ஏற்படாது
என்பதன்வழி தனது தலைமுறைக் கோபத்தை வெளிப்படுத்துகிறார். போர்ச் செயல்பாட்டை வெறுத்து மனிதத்தை நிலைநாட்டுவதே அவரின் இயல்பாக இருந்துள்ளது. போரினால் கண்ட பல்வேறு துயரங்களும் அதன்மீதான ஆற்றாமையும் கோபமுமே அவரது பல கவிதைகளிலும் வெளிப்படுகிறது. ஏனெனில் போரின் கோரமுகத்தைக் காட்டாத ஈழத் தமிழ்ப் படைப்பாளிகளைக் காண்பது அரிது; அவர்களுள் சிவசேகரமும் விதிவிலக்கல்ல. அவ்வகையில்,
புத்தரைக் காண விஹாரைக்குப் போனேன்
கண்களை ஏன் தாழ்த்தியிருக்கிறீர்கள்
எனக் கேட்டேன்
என் பேரால் நடக்கும் எதையுமே
காண மனமில்லை என்றார்
கைகளைக் கட்டியிருந்தால் ஆகுமோ என்றேன்
விரித்த கைகளில்
அரசாங்கம் துவக்கை வைத்துவிடுமே என்றார் (199)
என்ற கவிதை இடம்பெற்ற ‘போரின் முகங்கள்’ என்கிற கவிதைத் தொகுதி முக்கியமான இடம் வகிக்கிறது. இது ஈழத் தமிழர்களின் போர்க்கால வலிகளை எடுத்தியம்புகிறது. அதைப்போலவே போரும் அமைதியும் (208) என்ற கவிதையும் ‘முட்கம்பித் தீவு’ என்கிற கவிதைத் தொகுப்பும் போரின் பல்வேறு அவலங்களைப் பேசுகிறது. இத்துடன் ஆள்வோரின் அதிகாரச் சார்பை விமர்சித்தல், விடுதலைப் புலிகளின் அரசியற் செயல்பாடு குறித்த கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.
சட்டமும் சமுதாயமும் (266) எனும் கவிதையில், பஸ் மோதி பெண் ஒருத்தி இறந்ததால் மக்கள் ஒன்றுசேர்ந்து பஸ்களை அடித்து நொறுக்கினர். இதனை அதிகாரப் பின்புலம் சார்ந்தவர்கள், “மக்கள் சட்டத்தைத் தம் கையிலெடுப்பது தவறு” என கண்டிக்கின்றனர். ஆனால், உண்மையிலேயே மக்கள் சட்டத்தைக் கையிலெடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என அதிகாரத்தின் ஒருபக்கச் சார்பைக் கோடிட்டுச் செல்கிறார். மேலும் உலக நாடுகளின் போக்குகள், வல்லாதிக்க எதிர்ப்பு, நுகர்வுப் பொருளாதாரச் சிந்தனை, இயற்கைப் பேரிடர்களான சுனாமி, கொரோனா குறித்த கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. இவைதவிர காதல் குறித்த பதிவுகளாக இன்னும் ஒரு காதலின் கதை (182), நினைவழித்தல் (256) போன்ற கவிதைகளைக் கூறலாம். ஆனால், இது நாம் வழக்கமாக எதிர்பார்க்கும் காதல் கவிதைகளிலிருந்து மாறுபட்டது.
இத்தகைய போக்குகளினூடே பெண் விடுதலை, பெண் சுதந்திரம் முதலிய பெண்ணியக் கருத்துகளையும் பேசத் தவறவில்லை.
அச்சம் அணிகலனோ
மடமை மணிமுடியோ
நாணுதலே பெண்மையோ
தளர்நடையும் மருள்விழியும்
துடியிடையும் கொடியுடலும்
ஆண்குலத்தின் வேட்கைக்காய் அமைந்ததுதான்
பெண்குலமோ
கற்பும் அறநெறியும் எல்லார்க்கும்
பொதுவென்போம்.. (புதிய படிமம்; 88)
என்ற மேற்காணும் சில வரிகள் பெண் என்பவள் எவ்வகை இலக்கணங்களுக்கு உட்பட்டவளாய் இருத்தல் வேண்டுமெனச் சமூகம் இதுவரை கட்டமைத்திருந்த பார்வையைத் தகர்த்தெறியும். கற்பு என்ற கருவியால் பெண்ணை அடக்கியாளும் தன்மையை மாற்றி, அதனைப் பொதுவில் வைப்போம் என்கிறார். இனி பெண்களைக் கற்பினை வைத்து ஆண் சமூகம் சோதிக்க முற்பட்டால்,
உடன்கட்டை ஏற எவனாவது ஆண்பிள்ளை
ஆயத்தமா என்று கேளுங்கள்
அவனது கற்பைப் பரீட்சிப்போம்
(கற்பு பற்றிய ஒரு பாடம்; 181)
என்கிற பழமைவாதச் சிந்தனையை அதன்போக்கிலேயே அடித்து விரட்டுகிறார். மேலும் காதல், பாசம், அன்பு எனும் பெயரில் பெண்ணை அடக்குவதை, அவன் என்னை நேசிக்கிறான் (173) என்ற கவிதையில் விமர்சிக்கிறார். அதில் எப்போதும் கண்ணே, மணியே, கரும்பே எனக் கொஞ்சினாலும் சிறகு செதுக்கிக் கூண்டில் இருத்தி அழகு பார்க்கும் கிளி போல பண்பாட்டுப் பாடம் எடுக்கும் ஆண்களின் இயல்பை ஒரு பெண்ணின் குரலாகவே விவரிக்கிறார். இது ஒருபுறமிருக்க, பெண்ணியக் கருத்தினால் ஆண்களின் அடக்குமுறையை விமர்சித்த அதேவேளையில் பெண்ணியவாதி என்பவரது நிலைப்பாடு எத்தகையதாக இருக்க வேண்டும் எனவும் சுட்டிச் செல்கிறார். தொழிற்பெயர் (290) எனப் பெயரிட்ட கவிதையில், விபச்சாரிக்குப் பாலியல் தொழிலாளர் என்று தொழில்முறையில் பெயரிட்டழைக்க வேண்டும். ஒரு பெண்ணியவாதி, அத்தொழிலாளியைத் தனது கணவனுடன் உறவிலோ அல்லது தனது மகனுக்கு மனைவியாகவோ இருக்கச் சம்மதிப்பாரா என்று வினவவும் தவறவில்லை. இப்படியான காத்திரமான எழுத்துகளைத் தான் சிவசேகரத்தின் இக்கவிதைத் தொகுப்பு வெளிக்காட்டுகிறது. பொழுதுபோக்கிற்கு எழுதியதாக எதுவொன்றையும் அவரது படைப்புகளில் சுட்டிச் செல்ல முடியாது. தான் கண்ட வலிகளையும், காண வேண்டிய மாற்றங்களையுமே முழுக்க முழுக்கப் பாடுபொருளாக்கியுள்ளார்.
இவ்வாறான நவீன கவிதை வடிவங்களோடு, பிற வடிவ முயற்சிகளையும் தனது கவிதைகளில் கையாண்டுள்ளார். அவற்றுள்,
- சந்த நயம் வருமாறும் (சுற்றாடலுக்கு ஒரு எழுச்சிப் பாடல்; 153) சிந்து, கும்மி போன்ற பாடல் (குன்றத்துக் கும்மி; 155, பௌத்தத் திருநாடே; 302) வகையைச் சார்ந்தவையாகவும் சில உள்ளன.
- பஞ்சமர் பாட்டு (92), நாடற்றார் பாடல்கள் (359) போன்றவை நாட்டார் இலக்கியத்தின் பாடல்களைத் தழுவியது போல் அமைந்துள்ளன.
- கட்டுரை வகைமையினதாக பணங்காய்ச்சி மரம் (215), துருவன் (243), கடத்தல் பற்றிய ஒரு கதையாடல் (259), மயிர்க் கொட்டி (288), அமைதி வரும் போது (300), வாக்குக் கடதாசியைச் சரிவரப் பயன்படுத்துவது எப்படி? (374), ஆட்டமும் விதிகளும் (406) போன்ற கவிதைகளைக் குறிப்பிடலாம்.
- பரிசோதித்தல் முயற்சியாக, பச்சோந்தி: ஒருபுறம் (232), பச்சோந்தி: மறுபுறம் (234) என்ற கவிதைப் பகுதி இடம்பெறுகிறது. இது தமிழ் இலக்கியச் சூழலில் சிறந்தது மரபுக் கவிதையா? புதுக்கவிதையா? என்கிற சிக்கல் எழுந்த வேளையில் முதலில் மரபாக எழுதப்பட்டு, அதன் பின் சொற்களைப் பிரித்து புதுக்கவிதையாக்கித் தோற்றமளிக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பல வடிவங்களில் ஆதிக்கத்திற்கெதிராகத் தனது கவிதைகளைப் படைத்தளித்துள்ளார் பேராசிரியர் சிவசேகரம். தேசிய கலை இலக்கியப் பேரவையின் முயற்சியினாலே வெளிவந்துள்ள இக்கவிதைத் தொகுப்பு தமிழ்க் கவிதைப் பரப்பில் பெரும் தாக்கத்தை உண்டாக்கக் கூடியது. இவ்வாறு அடக்குமுறைக்கு எதிராக வலிமைமிக்க ஆயுதமாக ‘எழுத்தினை’க் கையாண்ட சிவசேகரம், பின்வரும் (இந்த எழுத்து; 134) கவிதையில் அதன் உயிர்ப்பினை அடிக்கோடிடுகிறார். ஒருவகையில் அதுவே அவரையும் அவரது அரசியல் நிலைப்பாட்டையும் விளங்கிக் கொள்ள வெளிப்படும் சிறந்த குறிப்பாக இருக்கிறது.
ஓ மதிப்பீட்டாளரே
பிறப்பவை யாவும் இறப்பது உறுதி
எனவே மீண்டும்
அடித்துச் சொல்கிறேன்
இந்த எழுத்து
கற்பகதருவிற் காகிதஞ் செய்து
அமிர்தங் குழைத்து அச்சிற் பதித்த
அமரகாவியம் இல்லவே இல்லை
மனித இனத்தின் மேன்மை பேண
ஒடுக்குமுறைக்கு எதிராய் இணைந்து
ஓங்கி உயருங் கைகளில் வாளாய்
நீளுந் துவக்காய்
அல்லது அதனுட் சின்னத் துணிக்கையாய்
விரையுங் கால்களிற் செருப்பின் தோலாய்
கொடுமைக் கெதிராய்க் கிளர்ந்தெழும் போரிற்
கோபக் கனலின் சிறுபொறி ஒன்றாய்
ஒரு கணப் பொழுதே உயிர்த்து மரிப்பினும்
இந்த எழுத்தின் அச் சிறு உயிர்ப்பு
எந்த அமர நிலையினும் உயரும்..
சிவசேகரம் கவிதைகள் (1973-2020) முழுத் தொகுப்பு | சமூகம் இயல் பதிப்பகம், லண்டன்
விலை: ரூ.500 (இந்தியா)
- மு.அஜித்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் இலக்கியத்துறை, மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை