கவி கா.மு. ஷெரீப் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், நாவலாசிரியர், சிறுகதையாசிரியர், நாடகாசிரியர், கட்டுரையாளர், கடித இலக்கியம் படைத்தவர், பயண நூலாசிரியர், நுட்பமான வரலாற்று நூலாசிரியர், மிகச் சிறந்த உரையாசிரியர், நேர்த்திமிகு அரசியல்வாதி எனப் பன்முக ஆளுமையுடையவர்.
“தமிழகத்தின் முன்னணிக் கவிஞர் வரிசையில் நாட்டுப் பற்றார்வத்துடன் சமதர்ம சமுதாய ஆக்க ஆர்வமும் குழைத்தூட்டும் தமிழ்க்கவிவாணராகக் கவிஞர் கவி கா.மு. ஷெரீபைத் தமிழகம் நன்கறியும். அத்துடன் அவர் தேசியக்கவி பாரதி, பாரதிதாசனைப் போலத் தேசத் தொண்டராகவும், சொற்பொழிவாளராகவும், தமிழார்வலராகவும் மக்களிடையே பீடுநடை போட்டு வருபவர் ஆவார் ” என்பதுடன் “தமிழர் வாழ்க்கை மரபில் தோன்றி மறையும் கவிஞர், எழுத்தாளரைப் போலத் தமிழ் மரபில் வேரூன்றி நின்றே புத்துலகப் பேரொளியில் புதுமை மலர்ச்சி காணத் தக்க ஒரு காலங் கடந்த உயர் மரபுக்கவிஞர் எழுத்தாளராக இலங்குகிறார்” என்று பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் மதிப்பிடுகிறார்.
தமிழுக்கும் தமிழ்ச் சமுதாயத்துக்குமாகவுமே வாழ்ந்து சிறந்த கவிஞரின் கவிதைகளில் தமிழ் பற்றிய பதிவுகளும் தமிழ்நாடு பற்றிய பதிவுகளும் நிறைந்துள்ளன. 1939 ஆம் ஆண்டு ‘சந்திரோதயம்’ எனும் ஏட்டில் எழுதி,
“கமழ்தே னினுங்கனிப் பாகினுமே
காய்ச்சிய பாலினும் சுவைமிகுந்த
தமிழே உனக்கு இணையாகத்
தரணியி லுண்டோ வேறுமொழி?”
என்று வினாத் தொடுக்கும் கவிஞர்,
“எந்தாய் மொழிநீ என்பதினால்
இயம்பினே னில்லை உனைப்புகழ்ந்து
முந்த உரைப்பேன் நீஉலக
மொழிகட் கெல்லாம் தாயாவாய்!“
எனப் போற்றி மகிழ்கிறார். மகாகவி பாரதியார் ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம், உண்மை வெறும் புகழ்ச்சியில்லை’ என்று பாடியிருப்பதை எதிரொலிப்பதைப் போலக் கவிஞரும் பாடுகிறார். இயல்பிலேயே தமிழ் மீது மாறாத அன்பும் பற்றும் கொண்டு திகழும் கவிஞருக்குச் சீனிப்பாகு கசக்கிறது.
“சீனிப் பாகுஞ் செழிய தமிழுஞ்
சேர்த்தே உண்டு பார்த்திட்டேன்; - நான்
சேர்த்தே உண்டு பார்த்திட்டேன்!
சீனிப் பாகு கசந்தது; எனது
செழிய தமிழ்தான் இனித்தது - என்
செழிய தமிழ்தான் இனித்தது! “
எனப் பாடும் கவிஞர் சுகந்த மலரும் தூய தமிழுக்கு இணையில்லை என்கிறார். இயற்கை அழகும் தமிழுக்கு இணையான அழகில்லை எனப் பாடுகிறார். வேற்று மொழியின் இனிய பாட்டையும் நம்முடைய வெற்றுத் தமிழையும் ஒப்பு நோக்கினால் - அதிலும் நம்முடைய வெற்றுத் தமிழ்தான் வெல்கிறது எனக் கவிஞர் பாடிக் களிக்கிறார். அதனால் நலன்களெல்லாம் அளிக்கும் தமிழை நாளும் வாழ்த்தல் நம்முடைய கடமை எனக் குறிப்பிடுகிறார். தமிழை அன்னையா கன்னியா என்று வினாத் தொடுக்கிறார்.
“எத்தனை காப்பியம் ஈன்றவள் அன்னைநீ
இன்னமும் கன்னிதானா?
எத்தனை வித்தகப் பிள்ளைகள் பெற்றவள்
எந்தாய் கன்னியாநீ?
என விளக்குமுறக் கேட்கிறார். முடிவிலே அவரே,
“மன்னிய கன்னியாய்ச் சொன்னவர் உன்றனை
வளர்க்க உரைத்ததல்லால்
மண்ணில் பலபிள்ளை பெற்றவள் பெறுபவள்
மாதாநீ யாவருக்கும்!
எனும் பாடலில் மாதா - அன்னை என முடிவு தருகிறார்.
‘நேயமிகு வையத்தில் நிலைபெற்ற மொழி பலவுள் நிமிர்ந்து நிற்கும் தூயமனம் கொண்டவரே! தொல்மொழிகள் ஆய்ந்தவரே! சுடர்தமிழ்போல் ஆயஒரு மொழியதனை யாங்கேனும் கண்டதுண்டோ? ஆதலாலே ஏயவரும் அறியும்படி இயம்பிடுவோம் தமிழிற்கிணை எதுவு மில்லை!’ எனப் பாடும் கவிஞர், தமிழைக், “ காலத்தை வென்றமொழி கணக்கற்ற புலவர்தமைக் கண்டு மேலாம் சீலத்தை உலகினருக் கீந்தமொழி சீர்த்திமொழி சிறுமை தன்னை ஆலமென ஒதுக்குமொழி அறிவுலகம் வியக்குமொழி ஆற்றலுள்ள கோலமொழி கொன்றொழிக்க இயலாத ஜீவமொழி தமிழா மன்றோ! “ எனப் பாடித் தமிழை என்றைக்கும் நின்று நிலைக்கும் ஜீவமொழி எனக்கூறி மகிழ்கிறார்.
தமிழைப் பாடிய கவிஞர் தமிழ்ப் புலவர்களையும் வியந்து பாடி மகிழ்கிறார்.
“தெள்ளமு தனைய தேவர்தம் குறளை
உள்ளினேன் மனத்தால் உயர்தமிழ் வளத்தால்
உள்ளம் பறிபோனதே! - என்
உள்ளம் பறிபோனதே!
என்று வள்ளுவர்செய் திருக்குறளில் உள்ளத்தைப் பறிகொடுத்த கவிஞர்,
“தீஞ்சுவை செந்தமிழ் மாந்தினேன் நானே
வாழ்க்கை செழித்ததையே - என்றன்
வாழ்க்கை செழித்ததையே!
வள்ளுவன் தந்த இன்னமு துண்டேன்
வான்புகழ் வாச்சுதையே
வான்புகழ் வாச்சுதையே!
பாரதி கீதம் பாடினேன் நாட்டில்
பசிப்பிணி போச்சுதையே - நாட்டில்
பசிப்பிணி போச்சுதையே!
சிலப்பதி காரம் மேகலை யணிந்த
செல்வியாம் தமிழரன்னை - புவியில்
செல்வியாம் தமிழரன்னை! “
என்று வள்ளுவருடன், பாரதி, இளங்கோ, சாத்தனார் எனும் புலவர்களையும் பாடுகிறார். தமிழை எந்த அளவிற்குக் கவிஞர் நேசித்தாரோ அதே அளவிற்குத் தமிழ்நாட்டையும் தமிழ் இனத்தையும் தமிழ்ப் பெரு மக்களையும் கவிஞர் சேர்த்தே நேசித்தார்.
“ஆன்றோர்கள் போற்றுகின்ற நல்லநாடு - தமிழ்
அன்னைகொலு வீற்றிருக்கும் எங்கள்நாடு!
சான்றோர்கள் வாழுகின்ற இன்பநாடு - கடல்
தன்னையுங் கடந்துபுகழ் கொண்டநாடு! “
ஜீவநதி யோடுகின்ற கன்னிநாடு - கலையைத்
தெய்வமாக எண்ணுகின்ற பொன்னிநாடு!
சாவுதனைக் கண்டஞ்சிப் பொய்கள் கூறி-வாழும்
தன்மையை வெறுக்குமக்கள் உள்ளநாடு! “
என்று நாட்டையும் மக்களையும் கவிஞர் போற்றுகிறார். ‘தாய்த் தமிழ்நாடு கமழ்தேனாம் அமுதூறும் பொன்மேடு!‘ என்கிறார். எந்தாய் நாடு செந்தமிழ் நாடு என்றென்றும் வாழியவே! எல்லைகள் மீண்டு தொல்லைகள் தீர்ந்து இன்பமாய் வாழியவே!” என்று கவிஞர் தமிழக எல்லை மீட்புப் போராட்டமான திருத்தணி மீட்சிக்காகப் போராடிச் சிறைப்பட்டுச் சென்னைச் சிறைச் சாலைக்குள் தமிழரசுக் கழகப் போராட்ட வீரர்கள் இருந்தபோது, அவர்களை உற்சாகப்படுத்தும் பொருட்டு காலையிலும் மாலையிலும் ஒன்றுகூடிப் பாடும் நாட்டுவாழ்த்துப் பாடலாக 11.11.1956இல் இயற்றினார். இப்பாடல் சாட்டை இதழில் அந்நாளிலேயே வெளிவந்தது.
தமிழக எல்லை மீட்புக்காகப் போராடிய இயக்கம் தமிழரசுக் கழகம். அதன் பொதுச் செயலாளராக இருந்து பாடுபட்டும் தமிழக எல்லை மீட்புக்காகப் போராடியும் பலமுறை சிறை சென்றவர் கவிஞர் கவி கா.மு.ஷெரீப்.
ஆந்திரம் அகன்று, கருநாடகம் அகன்று, கேரளம் அகன்று 11.11.1956 அன்று தாய்த்திருநாடான தமிழகம் தனிமாநிலமாக உருப்பெற்றது. அப்போது கவிஞர் பாடிய பாடல்தான்,
“தமிழகம் தனியாட்சி ஏற்றதுபார் - நமது
சங்கடம் யாவுமே ஓடுதுபார்!
அமிழ்தான தமிழ்அர சேறிடும்பார் - இனி
அன்னிய மொழிமோகம் அகன்றிடும்பார்!
குறள்வழி அரசியல் வளர்ந்திடும்பார் - நாட்டில்
குற்றங்கள் குறைந்திடும் நிச்சயம்பார்!
இருள்மனக் காரரும் திருந்துவர்பார் - நல்ல
ஈடேற்றம் நாட்டிலே தோன்றிடும்பார்!
உழைப்பிற்கு உயர்வினி வந்திடும்பார் - மக்கள்
உண்மையை மதித்திட முந்துவர்பார்!
பிழைப்பற்றோர் என்னும்சொல் தீய்ந்திடும்பார்
- வாழ்வில்
பிற்பட்டோர் என்பது மாறிடும்பார்!
கலைகளில் புதுமைகள் மலர்ந்திடும்பார் - தமிழ்
கற்றவர் வாழ்வெலாம் சிறந்திடும்பார்!
நிலையற்ற சாதீய வாதங்கள்தான் - இனி
நில்லாது சரிந்திடும் பொய்யில்லைபார்!
மூவேந்தர் கொடிபறந் தாடுதுபார் - நல்ல
முச்சின்னம் உச்சியில் விளங்குதுபார்!
பாவேந்தர் பாடிய குமரிமுனை - வந்து
பழந்தமிழ் நாட்டிலே சேர்ந்ததுபார்!
வேங்கடம் மீட்டிடும் வேலையைப்பார் - இனி
வீண்காலம் கழிக்காதே தோழனேவா!
ஓங்கிடும் தமிழின உயர்வினக்கே - தினம்
உழைத்திட உறுதியும் ஏற்போம் நீவா! “
எனும் பாடல்.
தனித் தமிழகம் அமைந்த பிறகும் கவிஞர் நம்முடைய எல்லைகள் பறிபோனதை எதிர்த்துக் கிளர்ந்து எழுந்து போராடினார். பலமுறை சிறை சென்றார். கவிதைகளையும் பத்திரிகைத் தலையங்கங்களையும் கட்டுரைகளையும் எழுதிக் குவித்தார். உணர்வோடும் உயிர்ப்போடும் போராடி வாழ்ந்த கவிஞர் பெருமகனார் தம் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவும் தமிழ் இனத்திற்காகவும் தமிழ்நாட்டிற்காகவும் குரல் கொடுக்கத் தவறவே இல்லை. இருந்தபோதும் தமிழ்நாட்டாலும் தமிழ் மக்களாலும் மறக்கப்பட்டராகவே கவிஞர் அறியப்படுகிறார் என்பதுதான் உண்மை.
- ப.முத்துபாண்டியன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளி
& பேராசிரியர் உ. அலிபாவா, நெறியாளர், தலைவர், தமிழியல்துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளி