ஒரு சொல் அல்லது தொடர் அல்லது வாக்கியம் அல்லது பிரதி ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழியில் ஆக்கப் பெறுதல் அல்லது அதற்கான செயல்பாடு நடைபெறுதல் மொழிபெயர்ப்பு என்பதாக அனைத்து அகராதிகளும் பொருளுரைக்கின்றன. மொழிபெயர்ப்பு பற்றிய கோட்பாடுகளை ஜே.சி.காட்ஃபோர்டு, யூஜின் நைடா, தியோடர் சவேரி போன்ற மேலைநாட்டு அறிஞர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள். தமிழில் மொழிபெயர்ப்பு குறித்துக் கருத்துரைத்தவர்கள் பெரும்பாலானோரைப் பற்றியும் சமகாலத்தில் சண்முகவேலாயுதம் தனது ‘மொழிபெயர்ப்பியல்’ பாடநூல் வழி ஓரளவிற்கு நல்ல அறிமுகத்தைச் செய்துள்ளார்.
‘மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல்’ என்று தமிழில் முதலில் கிடைத்துள்ளதாகக் கூறப்படும் தொல்காப்பியம் முதலே நமக்கு மொழிபெயர்ப்புச் செயல்பாடுகள் என்பன மனித (தமிழின) நாகரிக வளர்ச்சியுடன் இயைபுடையதாகக் கருதச் செய்கின்றன; ஆக ஒருவகையில் மனித குலத்திடம் மொழிகள் வழக்கிலாகும் காலம் முதலே பெயர்ப்புச் செயல்பாடுகளும் நடைபெற்று வருகின்றன என்பதை உணர்த்துகின்றது.‘அதர்ப்படுதல்’ என்பதற்கு ‘நெறிப்படுதல்’ என்று அகராதி பொருள் தருகிறது. இங்குச் சுட்டப்பட்ட ‘அதர்ப்பட யாத்தல்’ என்பதற்கு ‘மூலமொழிக்கு ஏற்றார்ப் போல் தருமொழியிலும் அமைய வேண்டும்’ என்ற கருத்துப்பட, அஃதாவது நெறிப்பட யாத்தல். வழியின்வகை நான்கனுள் ஒன்று ‘மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல்’. மொழி பெயர்த்தலாவது பிற பாடையாற் செய்யப்பட்ட பொரு ளினைத் தமிழ்நூலாகச் செய்தல். மொழிபெயர்த்துச் செய்யுமிடத்து அது கிடந்தபடியே செய்யப்பட வேண்டுமன்றித் தொகுத்தும் விரித்தும் தொகைவிரியாகவும் செய்தல் ஆகாது.அவ்வாறு செய்யின் அஃது இருமொழியார்க்கும் பயன்படாது.(தொ. பொ. 652 பேரா.)
எஃப் எக்ஸ் சி நடராசா என்பாரும் தன்னுடைய ‘மொழிபெயர்ப்பு மரபு(1954) நூலில் பின்வருமாறு கருத்துரைக்கிறார். “அந்தக் காலத்தில் சங்கத மொழியினின்றும் பல நூல்கள் தமிழ் மொழியினதர்ப்பட மொழி பெயர்க்கப்பட்டுண்டு. இந்தக் காலத்தில் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டு, தமிழ் நூல்கள் ஆக்கப்பட்டு வருதல் கண்கூடு.ஆனால் அதர்ப்பட யாத்தல் நடைபெறுவது குறைவு. தற்காலத்தில் மொழிபெயர்க்கின்ற ஆசிரியர்கள் வார்த்தைக்கு வார்த்தை வைத்து மொழிபெயர்க்கிறார்களேயன்றி நெறிப்பட யாத்துத் தமிழ்மரபு வழுவாது வேற்றூமொழி கோரிய பொருளைப் போற்று தமிழில், சீரிய வார்த்தைகளிற் பொதிந்து தருகின்றார்களில்லை. மொழி பெயர்ப்புக் கலைக்கு எடுத்துக் கொண்ட இருமொழி மரபினையும் அறிதல் வேண்டற்பாற்று(ப.4)”. ஆனால் தொடர்ந்து நடராசா முன்வைக்கும் எழுத்து - சொல் - தொடர் - வாக்கியச் சான்றுகள் பல தனித்தமிழ் நடையை ஆதரிக்கும் பாங்கும் தமிழ்ப்பண்பாட்டிற்கு இயைய அமையக்கோரலுமாய் உள்ளன. அந்த வகையில் அவை ‘அதர்ப்பட யாத்தல்’ தன்மையிலிருந்து விலகிச் செல்கின்றன.
‘தருமொழிக்கு ஏற்றார்ப் போல் மூலமொழிக்குரியதைத் தருவிக்க வேண்டும்’ என்பாரும் இருந்துள்ளனர். கம்பராமாயணம், மனோன்மணியம் இரண்டும் மொழிபெயர்ப்பினோடு தொடர்புடைய முறையே ஆரிய, ஐரோப்பியப் பண்பாட்டுப் பிரதிகளின் தமிழ்ப் பண்பாட்டுத் தழுவல் ஆக்கங்களே.இவ்விரு தழுவல் பிரதிகளும் மூலப்பிரதி சார்ந்திருக்கும் பண்பாட்டை முழுமையாகத் தருமொழி வாசகர்கள் அறிய முடியாத வகையிலானவை.சேக்ஸ்பியரின் நாடகங்களைத் தழுவி தமிழில் எழுதி நிகழ்த்தப் பெற்ற பம்மல் சம்பந்த முதலியாரின் ஆக்கங்களும் இவ்வாறானவையே. இத்தகைய மரபை நாம் பாரதியாரின் பாடல்களிலும், புதுமைப்பித்தன் கதைகள் வழியும் வாசிக்க முடியும்.
இக்கட்டுரை, மொழிபெயர்ப்பின் வழி மூலமொழிப் பிரதி வெளிப்படுத்தும் பண்பாட்டோடு கூடிய உள்ளடக்கத்தைத் தருமொழிப் பிரதியின் வாசகர்களும் அறிந்து கொள்ளல் நியாயப்பாடுடையது என்ற தொனியில் அமைகிறது. சமகாலத்தில் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுள்ள சிலர் தமது மொழிபெயர்ப்பு அனுபவங்களின் போது அடையும் பண்பாட்டுப்பெயர்ப்பு தொடர்பான சிக்கல்களை அடையாளம் காட்டுகின்றனர். அவை தமிழ்ச் செவ்வியல் படைப்புக்களை ஆங்கிலம் போன்ற மொழிகளுக்குப் பெயர்ப்பதாகவோ, சீனச் செவ்வியல் பிரதிகளைத் தமிழுக்குப் பெயர்ப்பதாகவோ கூட அமையலாம். ‘ஒரு கவிதையை உருவாக்குவதைப் போன்றே கவிதையின் மொழியாக்கமும் மிகவும் அவசியமானது, கவிதை சிறப்பு உணர்வுகளைத் தொடர்புகொள்வதற்காகப் படிமங்களை வழங்குகிறது, மேலும் மொழி எவ்வளவு உறுதியானதாக இருந்தாலும், ஒவ்வொரு படிமும் வேறு எதையாவது குறிக்கிறது. இந்தப் படிமங்கள் உலகளாவிய தன்மையில் மட்டுமின்றி பண்பாட்டு அடிப்படையிலும் தனிப்பட்ட ஆதாரங்களைக் கொண்டிருப்பதால், கவிதையின் மொழிபெயர்ப்பாளர் தனது வாசிப்புப் பார்வையாளர்களுக்கு அயல் பண்பாட்டை தன்னுடைய பண்பாட்டிற்குச் சமமானதாக மாற்றுவது போன்ற எந்த சலுகையையும் அளிக்க முடியாது. எனவே ஒரு கவிதையின் வெளிப்பாடு அல்லது அழகியல் செயல்பாடு மிக முக்கியமானதா என்பதைத் தீர்மானிக்கும் இக்கட்டான நிலைக்கு அவர் தள்ளப்படுகிறார். படைப்பாளர் - மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் சமகால மொழிபெயர்ப்புக் கோட்பாட்டாளர்கள் இருவரும் முன்வைத்த கோட்பாடுகள் கவிதையின் மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றப்படுவதல்ல மாறாகக் கவிதையிலிருந்து கவிதைக்கு மாற்றப்படும் என்ற உண்மையை எடுத்துக் காட்டுகிறது’.(ஜெயந்தி பாலகிருஷ்ணன், Academia.edu). இது தொடக்கத்தில் ஐரோப்பியர்கள் சிலர் மற்றும் ஏ.கே. ராமானுஜன் போன்றோர் சங்கக் கவிதைகளுக்கான அடிநிகரன்களில் ஆங்கிலேய நிகரன்களைக் கொடுத்து தமிழ்ப் பண்பாட்டுணர்வை ஆங்கில மொழியில் கடத்த முற்படாத போக்கை உணர்ந்து, தற்காலத்தில் முன்னெடுக்கப்படும் முயற்சியை ஆதரிக்கிறது.
‘சீன மொழிக்கும் தமிழுக்கும் இடையேயான மொழிபெயர்ப்பு பல சிக்கல்களை உள்ளடக்கியது’ என்றிடும் பயணிதரன் ‘என்னைப் போன்ற ஒரு நபர், மொழியியல் திறன் குறைவாக, மொழிபெயர்ப்பு துறையில் செயல்படுவது, சூழ்நிலையின் தீவிரத்தை காட்டுகிறது. நிலைமையை விரைவில் மாற்ற வேண்டும் என்ற எனது விருப்பத்திலிருந்து எனது முயற்சிகள் உருவாகின்றன.மொழிபெயர்ப்புப் பணியின் உள்ளார்ந்த சிக்கல்களை ஒருவர் போதுமான அளவில் விரிவாகக் கூற முடியாது. அடிப்படையில், மொழிகளின் தோற்றம் பற்றிய புரிதலை மொழிபெயர்ப்பு கோருகிறது. மொழி பெயர்ப்பு என்பது ஒரு மொழியின் ஒரு சொல்லை மற்றொரு மொழியில் மற்றொரு சொல்லுடன் மாற்றுவது அல்ல. மொழிபெயர்ப்பது என்பது ஒரு வாக்கியத்தில் பொதிந்துள்ள சமூகக் கூறுகளை மற்றொரு வாக்கியத்தைப் பயன்படுத்தி மற்றொரு சமூகத்திற்கு மாற்றுவதாகும். இந்த பணி சாத்தியமற்றது மற்றும் அவசியமானது. எனவே மொழிபெயர்ப்புகள் மிகுந்த ஆசை மற்றும் ஆழ்ந்த அவநம்பிக்கையுடன் உருவாக்கப்படுகின்றன; சோர்வு மற்றும் காட்டு ஆர்வத்துடன்.ஒரு சீன இலக்கியம் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்படும் போது, ..அது மொழி அமைப்பு, உச்சரிப்பு, வரலாறு மற்றும் புனைவுகள் கர்ப்பமாக இருக்கும் வார்த்தைகள் போன்ற சவால்களை வீசுகிறது. நான் மொழிபெயர்ப்பதற்குத் தேர்ந்தெடுத்த புத்தகங்கள் அவற்றின் அழகு, இலக்கியத் தரம், வரலாற்று முக்கியத்துவம், பகிரப்பட்ட கலாச்சார அனுபவங்களின் சாத்தியக் கூறுகள் ஆகியவற்றால் என்னைக் கவர்ந்தன. சிறந்த மொழித் திறனும் இலக்கிய உணர்வும் கொண்ட ஒருவர் இந்தப் படைப்புகளைப் பிற்காலத்தில் மொழிபெயர்ப்பார் என்ற ஒரே நம்பிக்கையுடன் இந்தத் திட்டங்களில் பணியாற்றினேன். இந்த இன்றியமையாத இலக்கியப் பரிணாமத்தில் நான் குரங்காக இருக்க முன்வந்தேன்’. பயணிதரன் இப்பதிவு வழி ஒரு பண்பாட்டுக்கான பிரதி மற்றொரு மொழி சார்ந்து மீண்டும் மீண்டும் பெயர்த்துச் செம்மையாக்கத்திற்கான இசைவை மொழிபெயர்ப்பாளர் கொண்டிருக்க வேண்டும் என்ற புரிதலை வெளிப்படுத்துகிறார். பயணிதரன், SPARROW Literary Award 2016 citation - முகநூல் பதிவு.
“பொதுவான புரிதலின் அடிப்படையில், வார்த்தைகளை வாக்கியமும், வாக்கியங்களைப் பத்தியும், பத்திகளை இயலும், இயல்களைப் புத்தகமும், புத்தகம் சமூகத்தையும் சார்ந்திருக்கின்றன என்பதாக வைத்துக்கொள்வோம் என்றால், நாம் மொழியாக்கத்தில் பின்நோக்கிய பயணத்தை எப்படியாக வடிவமைத்துக் கொள்கிறோம்? ஏனெனில், நாம் வார்த்தைகளைக் கொண்டுதான் நம்முடைய மொழியாக்கத்தை உருவாக்க வேண்டியுள்ளது.ஒரு மொழியில் உள்ள வார்த்தைகளுக்கும் மற்றொரு மொழியில் உள்ள வார்த்தைகளுக்கும் இடையேயான உறவு என்ன? ஒரு மொழியிலேயே ஒரு வார்த்தை பல வார்த்தைகளாக ‘மொழியாக்கம்’ காணும்போது, இந்த வார்த்தையை நாம் வேறொரு மொழியில் உள்ள ஒரு வார்த்தையோடு மட்டும் எப்படி இணைத்துப்பார்க்க முடியும்? இந்தக் கேள்விகளுக்கு விடைகாண நான் சம்ஸ்கிருத இலக்கணவியலாளரான பர்த்ருஹரியையும் (Bhartrhari), குமரில பத்தா (Kumarila Bhatta), பிரபாகரா (Prabhakara) போன்ற மீமாம்சவாதிகளையும் எடுத்துக் கொள்கிறேன். இவர்களின் நிலைப்பாடு குறித்து பிமல் கிருஷ்ண மதிலால், ஏ.கே.சென், சுந்தர் சருக்கை போன்ற தத்துவவியலாளர்கள் முன்வைக்கும் வாசிப்பின் அடிப்படையில்” கருத்துரைக்கும் மொழிபெயர்ப்பாளர் சீனிவாச ராமானுஜன் தனது ‘மொழியியல் தத்துவத்தின் அடிப்படையில் மொழியாக்கம்’ என்ற ‘அருஞ்சொல்’ இணைய இதழுக்கான கட்டுரையில், “மூல மொழியில் ஒரு கருத்தாக்கச் சொல் கொண்டிருக்கும் அர்த்தத்தோடு நாம் மொழியாக்கத்தின் ஊடாக எதையோ சேர்க்கிறோம் அல்லது கழிக்கிறோம் என்றாகிறது. மூல மொழியில் உள்ள ஒரு வார்த்தை கொண்டிருக்கும் அர்த்தத்தை நாம் அப்படியே மொழியாக்கம் செய்து வேறொரு மொழிக்குள் கொண்டுவர முடியாது என்கிறார் சருக்கை. ஏனெனில், ஒரு பண்பாட்டில் கருத்துகளும் கோட்பாடுகளும் வேறு விதமான மீபௌதிக முற்கோள்களாலும் நம்பிக்கை சார்ந்த கட்டமைப்புகளாலும் ஆனது என்கிறார் சருக்கை. மேலும், சருக்கை முன்வைப்பதுபோல் ஒரு கருத்தாக்கச் சொல்லை மொழியாக்கம் செய்வது என்பது அந்தச் சொல் எப்படியான அர்த்தங்களை அதற்குள்ளாக அடக்க இடம் கொடுக்கிறது என்பதைக் கண்டெடுக்கும் செயலாகவே இருக்கிறது. எடுத்துக்காட்டாக நாம் செக்குலரிஸம் என்ற சொல்லைச் சொல்ல முடியும்.மேற்கத்திய சமூகத்தில் இந்தச் சொல் குறிப்பிட்ட அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது. இந்திய அனுபவம் இந்த வார்த்தைக்குள் கூடுதலான அர்த்தத்தைச் சேர்க்கிறது. தொகுத்துச் சொல்வதென்றால், மொழியாக்கம் என்பது, ஒரு வார்த்தை எப்படியான அர்த்தங்களைக் கொண்டிருக்க முடியும் என்று துருவியகழும் செயலாகவே இருக்கிறது”(அருஞ்சொல்_ சமஸ், இணைய இதழ் 1).
மொழி என்பது பண்பாட்டை வெளிக்கிளர்த்தும் ஊடகம் ஆகும்; மொழியைக் கையாளுபவர்கள் ஒவ்வொருவரின் தனித்தன்மையை அவர்கள் உற்று நோக்கும் சமூக நடப்புகள் வழி அவர்களுக்கு உணர்த்தும்; மொழியும் பண்பாடும் இரண்டறக்கலந்தவை; இயக்கப்பண்புடையவை; இயக்கத்தன்மை காரணமாக அவை காலந்தோறும் மாறும் பண்புடையன. அவ்வக்காலத்தில் எழுதப்பெறும் பிரதிகள் சமகாலப் பண்பாட்டை வெளிப்படுத்தக் கூடியதான ஒன்றாகும் போது பெயர்ப்பில் ஈடுபடுவோர் அவ்வக்காலப் பண்பாடு பற்றி அறிந்திருக்க வேண்டியவராகிறார். அவர் பெயர்க்கும் பிரதி சூழலியல் (தாவரங்கள், விலங்கினங்கள், காற்று, மலைகள்), பொருள்சார் பண்பாடு (உணவு, உடைகள், வீடுகள், நகரம், போக்குவரத்து, வேலை மற்றும் ஓய்வு நேரப் பொழுதுபோக்கு) நிறுவனங்கள் (அரசியல்/நிர்வாகம், மதம், கலை), பழக்க வழக்கங்கள், நடைமுறைச் செயல்பாடுகள், கருத்து வெளிப்பாடுகள், சைகைகள் முதலியவற்றின் அடிப்படையில் தனித்துவமானதொரு பண்பாட்டைக் கொண்டிருக்கும். தேர்ந்த ஒரு மொழிபெயர்ப்பு என்பது அது எந்த அளவிற்கு உள்வாங்கியிருக்கும் மூலமொழியின் அயல் பண்பாட்டைத் தருமொழியில் தருவிக்கிறது என்பதைப் பொறுத்தே அமையும். அதாவது அயன்மையாக்கம் (Forignisation) அடிப்படையில் ஒரு மொழிபெயர்ப்பு மதிப்பிடப்படுகிறது.
தருமொழிப் பிரதியின் சமூகத்திற்கேற்ப ஆக்கம் செய்தலைத் தற்சமூகமாக்கம் (Domestication) எனலாம். அதாவது மொழிபெயர்க்கும் ஆளுமையின் சமூகம் சார்ந்த பெயர்ப்பு என்றிடலாம். இதில் பெயர்ப்புமொழிக்குரிய சமூகத்திற்கு அறிமுகம் ஆகாத பண்பாட்டு வெளிப்பாடுகள் உள்ளூர்ப் பண்பாடு அல்லது பெயர்ப்புமொழி சார் பண்பாட்டுக்கு ஏற்ப மாறுதல்கள் செய்யப்பட்டுத் தருவிக்கப்படும். அத்தகைய மாறுதல்களில் பெயர்ப்புமொழி வாசகர்களின் எளிமையான புரிதல் நோக்கில் வாசிப்பு ஆர்வம் குன்றாதிருத்தல் முக்கியமாகக் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கும். காட்டாக, வடமொழி மரபில் வரும் யமா தமிழில் இயமன் அல்லது எமன் என்று தற்சமப்படுத்திக் கூறுதல் உண்டு. அதுவே ‘கூற்றுவன்’ என்று தமிழ்ப்படுத்துகையில் அது முற்றிலும் தமிழ்ப்பண்பாட்டு மயமாக்கப்படுகிறது.
அயன்மையாக்கத்தில் மூலமொழிப் பிரதி வெளிப்படுத்தும் பண்பாட்டுக் கூறுகளைக் கவனத்துடன் கொஞ்சமும் குறைவின்றித் தருமொழிப் பிரதி வாசகச் சமூகத்திற்கு வழங்குதல் தீவிரமாயிருக்கும். அப்போது பெயர்ப்பாளர்க்கு நேரிடும் சிக்கலைச் சுட்ட, பண்பாட்டுப் பெயர்ப்பியலாமை (Cultural Untranslatabity) என்பதாக ஒரு சொல்லாடல் உள்ளது. இது பெரும்பாலும் மொழிவழக்காறுகள் சார்ந்தவை; அதாவது ஒவ்வொரு மொழியும் தன் பயிற்சியாளர்களால் தொடர்ந்து வாயாடும்வழி குறிப்பிட்ட சொற்கள் இணைந்து ‘தொடர்’களை இயல்பாக அடைகாத்துக் கொள்கின்றன. ‘உயிர் தவச்சிறிது’, ‘உணவெனப்படுவது நிலத்தொடு நீரே’, நீரின்றி அமையாது உலகு’, ‘கற்க கசடற’ என்பதில் தொடங்கி ‘இருட்டுக்கட அல்வா’ எனப் பிரிக்க முடியாத தொடர்கள் ஒரு புறம் மொழியில் சேர்ந்து கொண்டே இருக்கின்றன. அவையும் காலப்போக்கில் அம்மொழிசார் பண்பாட்டுத் தரவாகின்றது.ஒரு கட்டத்திற்கு அவற்றின் தொடர் வழக்காற்றுப் பயிற்சி காரணமாய் ஒருவகை ‘அடைவு’ பெற்று விடுகின்றன.இதை ஒரு மொழியின் ‘தொடர் அடைவு’ என்று சொல்லலாம்.இலக்கணிகள் தொகைமொழி என்கின்றனர் (பேரா.மாதையன் உரையின் போது கேட்டது).
பின்வரும் சில காட்டுகள் பண்பாட்டுப் பெயர்ப்பியலாமைக்கானவையாகும். பேச்சுவழக்குகள் பிரதிகளில் இடம்பெறுதல் இயல்பான ஒன்று. அவை, பல நேரங்களில் நீண்ட கலைச்சொல்லாக்கங்கள் அல்லது World Health Organization என்பது WHO என்று சுருங்கியதாய் (Acronym) விளிக்கப்படுதல் போல, இயல்பான மொழி ஓட்டநடை கொண்டிருக்கும். ‘அத எட்டு வா’ என்பது தென் தமிழகத்தில் இயல்பான வழக்காறு. சென்னை வட்டார வழக்கில் இதையே ‘அத்த இட்டா’ என்பார்கள். இவற்றைத் தருமொழிப் பெயர்ப்பாளர் ‘அதை இங்கே எடுத்துக் கொண்டு வா’ என்று புரிந்துகொள்ளாமல் பெயர்த்தார் என்றால் தவறாகிவிடும். இப்போதைக்கு கூகுள், அது எந்திரம் என்பதால்(மனிதச் சிந்தனைப்படி பணியாற்றும் வரையில்) மேற்படியில் உள்ள ‘எட்டு’ என்பதை 8 என்றும், ‘அத்த’ என்பதை ‘அத்தை’ என்றும்தான் பெயர்க்கிறது.
‘order’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ‘ஒழுங்கு, உத்தரவு’ என்ற நீதிமன்றம் சார்ந்த பொருண்மைச் சொற்களைத் தமிழில் பயன்படுத்துகிறோம். அதுவே நீதிமன்றத்தில் ‘order order’ என்று அடுக்குத்தொடராய் நீதிபதியால் (சில நேரங்களில் டவாலியால்?) முழங்கப்பட்டால் ‘அமைதி அமைதி’ என்றோ அல்லது ‘ஒழுக்கமாய் இருங்கள்’ என்றோ பொருண்மைப் பயிற்சியில் உள்ளது. ‘in order’ என்பது தமிழில் ‘ஆணைப்படி, ஒழுங்கில்’ என்பதாகத் தரப்படுகின்றன; ‘order to’ என்பதற்கு ‘வரிசை முறை/ ஒழுங்கு’ என்று பயிற்சியில் உள்ளன. இவையே, ‘in order to’ என்று வரும்போது தமிழில் ‘ஆக’ என்பதாகச் சுருங்கி விடுகிறது. [He confronted his supervisor in order to show his strength.] அவர் தனது பலத்தை காட்டுவதற்காக தனது மேற்பார்வையாளரை எதிர்கொண்டார் - கூகுள்]. (அவர் தனது பலத்தை(க்) காட்டுவதற்காக(த்) தனது மேற்பார்வையாளரை(த்) திரும்பப் பெற்றார்). அதாவது வெறும் ‘ஆக’ என்ற சொல்லையே பெறுகிறோம்]. She has not longer hair என்பது அவள் நீளமான கூந்தல் கொண்டிருக்கவில்லை என்று பொருள். She is no longer student என்று வருகையில் ‘அவள் இனி மாணவியில்லை’ என்றாகிறது. இது போன்ற தொடர்ந்த பயிற்சியில் இருக்கும் தொடர் அடைவுகள் பெயர்ப்பில் சரியாக வருகின்றன. ஆனால் பின்வரும் சில தொடர் அடைவுகள் அவை சார்ந்த பிரதியின் பண்பாட்டில் ஆழ்ந்த பயிற்சியைக் கோருகின்றன.
Bussy(cat) in the Boots - இது ஐரோப்பிய மரபுத் தொடர்
Naked Truth - இது ஓர் ஆப்பிரிக்க நாட்டார் வழக்காற்றுக் கதை
Middle Passage - இது கரீபியன் தீவுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட கறுப்பின அடிமைகளின் அவலச் சாவுகளைப் பற்றியது.
இதேபோல் தமிழிலும் ‘உணவெனப்படுவது நிலத்தொடு நீரே’ போன்று ஏராளமான பண்பாட்டுத் தொடர்கள் மற்றும் துன்பக்கேணி, அக்னி குஞ்சு போன்ற பருண்மையான பொருண்மையைப் பொதிந்து கொண்டுள்ள எளிய தொடர்களும் உண்டு. மொழி பெயர்க்கும் போது பலரையும் பண்பாட்டுப் பெயர்ப்பியலாமைக்கு உள்ளாக்குவன. ஆய்வுகள் மேற்கொண்டு அல்புனைவாக வெளிக்கொணர்கையில் கூட அந்தந்த ஆய்வாளர்களின் ஏற்றல் - தவிர்த்தல்களால் இந்த இயலாமை வெளிப்பட்டுள்ளன. மானுடவியல் ஆய்வாளர்கள் பலர் தமிழ்ச் சமூகம் பற்றி மேற்கொண்ட ஆய்வுகள் சுட்டற்குரியன. ஆங்கில மொழியில் எழுதப் பெற்ற எட்கர் தர்ஸ்டன் தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் ஆய்வுத் தொகுப்பு காலனியாதிக்கவாதிகளுக்கான தமிழ்ப்பண்பாட்டுப் பெயர்ப்பாகும். தஞ்சை வட்டார வேளாண் சமூகம் பற்றிய சூஸன் வாட்லி-யின் ஆய்வு, கொங்கு வேளாளச் சமூகம் பற்றிய பிரெண்டா பெக்-இன் ஆய்வு முதலியன இத்தகைய வகைமையிலான தமிழ்ப் பண்பாட்டுப் பெயர்ப்புகள் ஆகும்.
- நா.சந்திரசேகரன், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர், புதுடில்லி.