ஏறத்தாழ நூற்றிருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் கல்கத்தாவில் நகரத்துக்குள் நான்கு வீடுகளும் புறநகரில் தோட்டத்துடன் கூடிய மாளிகை போன்றதொரு வீடும் வைத்திருந்த செல்வச் செழிப்பான உயர்வகுப்பைச் சேர்ந்த வழக்கறிஞரின் குடும்பமொன்றில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவள் பத்து வயதாக இருந்தபோது, இரண்டாவது பிரசவத்தில் அவளுடைய அன்னை மறைந்து விட்டாள். அந்தத் துக்கத்தின் நிழல் அவள் மீது விழுந்துவிடாதபடி, அவளை கண்ணும் கருத்துமாக வளர்த்தார் அவளுடைய தந்தையார். நகரத்திலேயே பெரிய பள்ளியாக இருந்த பெத்யூன் பள்ளியில் சேர்த்து படிக்கவைத்தார். வீட்டுக்கு வந்து பாடங்களைச் சொல்லிக் கொடுப்பதற்காக தனியொரு ஆசிரியரையும் இசை கற்பிப்பதற்காக தனியொரு ஆசிரியரையும் அமர்த்தினார் அவளுடைய அப்பா. நல்ல புத்தகங்களைப் படிப்பதற்கு ஏதுவாக வீட்டிலேயே ஒரு நூலகத்தை அமைத்துக் கொடுத்தார். ஓய்வு நேரங்களில் நல்ல நாடகங்களையும் திரைப்படங்களையும் பார்ப்பதற்கும் வழி ஏற்படுத்திக் கொடுத்தார். தன் மகள் கல்வியிலும் கலைகளிலும் மேம்பட்டு விளங்க வேண்டும் என்று அவர் கனவு கண்டார். அவளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார்.
ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய அக்கா அவருக்கு மறுமணம் செய்து வைத்தார். சகோதரனின் வாழ்வு வறண்ட பாலைவனமாகப் போய்விடக் கூடாது என்பது அவருடைய எண்ணமாக இருந்தது. அவர் விரும்பியது போலவே புதிய மணமகளின் வருகை சகோதரனின் வாழ்வில் வசந்தத்தைக் கொண்டு வந்தாலும், வேறொரு கோணத்தில் குடும்பத்தில் நிலவியிருந்த அமைதி நிலையைக் கலைத்து விட்டது. முதல் மனைவியின் மகளோடு அவளால் இயல்பாகப் பழக முடியவில்லை. தன் அப்பா, அம்மாவை மறந்து சித்தியுடன் மகிழ்ச்சியுடன் இருப்பதையும் ஊர்ப்பயணங்கள் சென்று வருவதையும் அந்த மகளால் செரித்துக் கொள்ள இயலவில்லை.
ஏதோ ஒரு வழியில் சொந்தம் பாராட்டிக் கொண்டு வந்த இளைஞனொருவனுக்கு அவளுடைய அப்பா அடைக்கலம் கொடுத்து, தன் செல்வாக்கின் வழியாக ஒரு வேலையையும் வாங்கிக் கொடுத்தார். நன்றிக்கடனாக அந்த இளைஞன் தினமும் வீட்டுக்கு வந்து அவளுக்குப் பாடங்கள் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினான். மெல்ல மெல்ல உருவான நெருக்கத்தின் விளைவாக தன் மனபாரத்தை அவள் அவனோடு பகிர்ந்து கொள்ளத் தொடங்கினாள். அவனும் அவளுக்கு ஆறுதல் சொல்லி அமைதிப்படுத்துவதில் தொடங்கி, அவள் மனத்தில் இடம் பிடித்து விட்டான். காலம் செல்லச் செல்ல, இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கினர். கண்காணிக்க யாருமில்லாத நிலையில் இருவருடைய நெஞ்சிலும் உடல் சார்ந்த இச்சைகள் விழித்தெழுந்தன. ஆசை என்னும் புயல் வேட்கைகளைப் பற்றியெரிய வைத்தன. ஏற்கனவே திருமணம் ஆனவன் அவன். அவனுக்கென ஒரு குடும்பம் அவனுடைய கிராமத்தில் இருந்தது. ஆனால் உடலில் பற்றியெரிந்த நெருப்பு அனைத்தையும் மறக்க வைத்து விட்டது. பள்ளியிறுதித் தேர்வுகள் முடிந்து விட்டால் சந்திக்க வாய்ப்பின்றிப் போய்விடுமோ என்னும் அச்சம் இருவரையும் வாட்டியது. அதனால் இறுதித் தேர்வன்று, அவள் வீட்டைவிட்டு வெளியேறி பள்ளிக்குச் சென்று, அங்கே காத்திருந்த அவனுடன் ஹவுரா ரயில் நிலையத்திற்குச் சென்று கல்கத்தாவை விட்டு வெளியேறினாள்.
பதினைந்து வயதில் வெறும் பள்ளிப்படிப்புத் தகுதியோடு காதல் மயக்கத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய அந்தப் பெண்ணின் பெயர் மானதா தேவி. அவர்தான் இந்த நூலாசிரியர். அவரை ஆசை வலையில் வீழ்த்தி டில்லிக்கு அழைத்துச் சென்ற இளைஞர் பெயர் ரமேஷ். அலுவலகத்திலிருந்து களவாடி எடுத்து வந்த தொகை தீரும் வரைக்கும் மானதா தேவியுடன் உல்லாசமாக வாழ்க்கையை நடத்திவிட்டு, சில மாதங்களுக்குப் பிறகு அவளை நட்டாற்றில் தவிக்கவிட்டு தலைமறைவாகி விட்டார். வீட்டுக்குத் திரும்பிச் செல்லவும் மனமின்றி, தனித்து வாழவும் துணிவின்றி, உடலிச்சையை வென்று ஆளும் உறுதியுமின்றி, அவள் இறுதியாக அந்த மாபெரும் நகரத்தில் பரத்தைத் தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள். அந்த வழியிலேயே அவள் வாழ்வின் திசை அமைந்து விட்டது. புயலில் சிக்கி திசையறியாமல் தடுமாறிச் செல்லும் கப்பலைப்போல, காமப்புயலில் சிக்கிக் கொண்ட அவள் வாழ்க்கையும் அசைந்தாடி ஓய்ந்தது. இருபத்தொன்பது வயதில் அவர் தன் சுயசரிதையை வங்கமொழியில் எழுதினார். ஒரு படித்த பெண்ணுக்கு நேர்ந்த அவலம் என்ற வகையில் அப்புத்தகம் விரைவிலேயே வாசகர்களின் கவனத்தை ஈர்த்தது. வெகுவிரைவிலேயே அவருடைய தன்வரலாற்று நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. அதைத் தொடர்ந்து இந்தியாவின் பிற மொழிகளிலும் படிப்படியாக மொழிபெயர்க்கப்பட்டு வாசகர்களிடையில் பிரபலமானது. தமிழில் இப்போது மொழிபெயர்த்திருப்பவர் சசிகலா பாபு. வெளியிட்டிருப்பது காலச்சுவடு பதிப்பகம்.
ரமேஷின் கைகளைப் பற்றியவாறு டில்லிக்குச் சென்ற மானதா தேவி, அதைத் தொடர்ந்து இன்ப மயக்கத்துடன் லாகூர், ஸ்ரீநகர், பம்பாய், புஷ்கர், பாரத்பூர், ஜெய்ப்பூர், சித்தூர் என பல இடங்களுக்குச் சென்று சிற்சில நாட்கள் தங்கிச் சென்று கொண்டே இருந்த அனுபவத்தை தனியொரு அத்தியாயமாகவே எழுதியிருக்கிறார். சித்தூரில் தங்கியிருந்த சமயத்தில் சித்தூர் ராணியான பத்மாவதி என்கிற பத்மினி தீக்குளித்த இடத்தைச் சென்று பார்த்த கணத்தில் அங்கு கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து தனக்கு மயக்கமே வந்துவிட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார் மானதா தேவி. வட இந்தியாவில் முகம்மதியப் பேரரசு உருவாகி வந்த சமயத்தில் பத்மினியின் அழகைக் கேள்விப்பட்ட சுல்தான் அல்லாவுத்தீன் கில்ஜி பத்மினியைத் தன் அந்தப்புரத்துக்கு அனுப்புமாறு தகவல் அனுப்புகிறான். அவன் கோரிக்கை மறுக்கப்பட்டதால் அவனுடைய படை சித்தூரைத் தாக்குகிறது. போரில் அரசன் மரணமடைந்த செய்தியைக் கேட்டதும் பத்மாவதி தீக்குளித்து தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். அந்த இடத்தைக் கண்ட கணத்தில் ஒருகணம் மயக்கத்தில் நிலைகுலைந்து சரிந்து விட்டதாக குறிப்பிட்டிருக்கிறார் மானதா தேவி.
தன் உடலை இன்னொருவன் தீண்டிவிடக் கூடாது என கற்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உயிரையே மாய்த்துக் கொள்ளும் இடத்தைக் காணும் தருணத்தில் ஏற்பட்ட மனசாட்சியின் உறுத்தலே அவள் மயக்கத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம். அக்கணத்தை விரித்தெழுதாமல் வாசகர்களின் ஊகத்துக்கு விட்டுவிட்டு அப்படியே கடந்து செல்கிறார் மானதா தேவி. அப்பயணத்தின் முடிவில் அவளுடைய பிடியில் தொடர்ந்து இருக்க விரும்பாத ரமேஷ் வீட்டைவிட்டு வெளியேறிவிட, மானதா தேவியுடைய வாழ்க்கைப்பயணத்தின் திசை மாறி விட்டது. அது ஒரு திருப்புமுனைச் சம்பவம்.
ரமேஷ் அவரைவிட்டுப் பிரிந்து சென்ற சமயத்தில் அவர் கருவுற்றிருந்தார். அவரை ஆதரித்துக் காப்பாற்ற அப்போதும் மனிதர்கள் கிடைத்தார்கள். ஆனால் அவருடைய காமவேட்கை அவரை எந்த இடத்திலும் தங்கவிடவில்லை. வெளியேற்றியபடி இருந்தது. பிரசவ சமயத்தில் அவர் பல கடுமையான சோதனைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. துரதிருஷ்டவசமாக, அவருடைய குழந்தை இறந்தே பிறந்தது. ஒரு பரிந்துரையின் பேரில் துறவிகள் தங்கியிருந்த ஆசிரமம் அவருக்கு அடைக்கலம் வழங்கியது. ஆனால் அங்கே தங்கியிருந்த இளந்துறவியின் மீது அவருடைய ஆர்வம் படிவதைப் புரிந்து கொண்ட ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பாளர் அவரை அங்கிருந்து வெளியேற்றி விட்டார். அதற்குப் பிறகே அவர் உடலை விற்றுப் பிழைக்கும் தொழிலில் இறங்கினார்.
துரதிருஷ்டவசமாக அவருக்கு அமைந்த துணைகள் எல்லாம் அத்தொழிலில் இருந்து அவரை மீட்டெடுப்பதற்குப் பதிலாக அத்தொழிலில் இன்னும் சிறந்த, அதைவிடச் சிறந்த வாய்ப்புகளை நோக்கியே அவரைச் செலுத்தினார்கள். எங்கு சென்றாலும் குடியிருக்க நல்லதொரு வீடு கிடைத்தது. செல்வச் செழிப்பான வாடிக்கைக்காரர்களை வீடு வரை அழைத்துவரும் தரகர்கள் கிடைத்தார்கள். அவரும் செழிப்பான வாழ்க்கையை வாழத் தொடங்கினார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு பாலியல் தொழிலில் அவர் சலிப்படைந்தார். சேர்த்து வைத்த செல்வம் போதும் என்ற எண்ண்ம் ஏற்பட்டு விட்டது. இனி பாலியல் தொழில் வேண்டாம் என ஒருமுறை முடிவெடுத்து எல்லாவற்றையும் நிறுத்தி விட்டார். தனக்குப் பிறகு தன்னுடைய சேமிப்பு எல்லாம் இந்து சீர்திருத்த அமைப்புகளுக்குச் சென்று சேரும் வகையில் உயில் எழுதி வத்துவிட்டு, தனிமையில் வாழத் தொடங்கினார்.
ஒரு பக்கம் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்களை இழிவுடன் பார்க்கும் சமுதாயம், இன்னொரு பக்கம் அதே பெண்களின் காலடியில் தன் மானம், மரியாதை, சொத்து, உடல், பொருள், ஆவி என அனைத்தையும் வைத்து இன்பம் துய்த்துவிட்டுச் செல்லும் ஆண்களை நல்ல அரசியல்வாதிகளாகவும் போராளிகளாகவும் கவிஞர்களாகவும் பணக்காரர்களாகவும் உன்னதமானவர்களாகவும் புகழ்ந்து மதிப்பளிக்கும் அவலத்தைத் தன் தன்வரலாற்றில் ஓரிடத்தில் சுட்டிக் காட்டுகிறார் மானதா தேவி. அறியாப் பருவத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்கிற தவறுக்காக ஒவ்வொரு நாளும் பெண்கள் தீயில் வெந்து கொண்டிருக்கும்போது, அதே தவற்றைச் செய்யும் ஆண்கள் கிஞ்சித்தும் குறையாத செல்வாக்குடன் வாழ்ந்து கொண்டிருக்கும் முரணை முன்வைத்து ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும்.
பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பிற பெண்கள் தம் துன்பங்களை அமைதியாகக் கடந்து செல்லலாம். ஆனால் மானதா தேவி படித்த பெண் என்பதால் அப்படி எளிதாக எதையும் கடந்து செல்ல இயலவில்லை. எல்லா நிகழ்ச்சிகளையும் தொகுத்தும் பகுத்தும் பார்த்து ஒரு விஷயத்தை மதிப்பிடுகிறார். அவருடைய படிப்பறிவும் சிந்திக்கும் ஆற்றலும் சமுதாயத்தில் நிலவும் முரணைச் சுட்டிக்காட்டும் துணிச்சலை வழங்கியிருக்கின்றன.
இந்தத் தன்வரலாற்றைப் படித்து முடித்ததும் தற்செயலாக வேறொரு புத்தகத்தை நினைத்துக் கொண்டேன். அதுவும் தன்வரலாற்று வகைமை சார்ந்த நூல். சில ஆண்டுகளுக்கு முன்பு இதே காலச்சுவடு பதிப்பகம் அப்புத்தகத்தை வெளியிட்டது. மூல ஆசிரியர் பேபி ஹால்தார் என்னும் பெண்மணி. நூலின் பெயர் விடியலை நோக்கி. அதைத் தமிழில் மொழிபெயர்த்தவர் எம்.சிவசுப்பிரமணியன்.
பேபி ஹால்தார் ஜம்மு காஷ்மீரில் ஏதோ ஒரு கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தையாரின் குடிப்பழக்கம் நிறைந்தவர். அதனால் அந்தச் சிறுமியின் தாயார் அக்குடும்பத்திலிருந்து வெளியேறி விட்டார். அப்போது அவருக்கு நான்கு வயது. சிற்றன்னையின் கொடுமைகளுக்கு இடையில் வளர்ந்து எப்படியோது ஏழாவது வகுப்புவரை படித்தார் ஹால்தார். அவளால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. 12 வயது நடக்கும்போதே அவளுக்கு 14 வயதுள்ள ஓர் இளைஞனுக்கு மணம் முடித்து அனுப்பி வைத்து விடுகிறார் அவள் தந்தையார். அடுத்தடுத்து அவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்து விடுகின்றன.
அவள் கணவனும் பெரிய கொடுமைக்காரன். ஒருநாள் மனம் துவண்டு, பிள்ளைகளோடு குடும்பத்தைவிட்டு வெளியேறி டில்லிக்குச் சென்றார். பல இடங்களில் பல இன்னல்களுக்கிடையில் வீட்டு வேலை செய்து பிழைத்தார். தனக்குக் கிட்டாத கல்வி தன் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார்.
தற்செயலாக, சில ஆண்டுகளுக்குப் பிறகு அவளுக்கு பிரேம்சந்த் பேரனான பிரபோத் குமாரின் வீட்டில் வேலை கிடைத்தது. ஒருநாள் பிரபோத் குமாரின் நூலக அறையைப் பெருக்கிச் சுத்தம் செய்தபோது, அவளுக்கு இயல்பாகவே இருக்கும் படிப்பு ஆர்வத்தில், மேசை மீது வைத்திருந்த புத்தகத்தைப் பிரித்து படிக்கத் தொடங்கினார். வாசிப்பில் மூழ்கி விட்டதால், எதிர்பாராமல் வந்த குமாரை அவள் கவனிக்கவில்லை. அவளைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்ட குமார், அவளை தன் வீட்டிலேயே தங்கிக் கொள்ள அனுமதி கொடுத்து, அவள் பிள்ளைகளையும் படிக்க வைத்தார். அவளுடைய வாழ்க்கைக் கதையைக் கேட்டு மனமுருகிய அவர், அவளிடம் தன் வாழ்க்கைக் கதையை எழுதும்படி கேட்டுக் கொண்டு ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தைக் கொடுத்தார். அவரே எதிர்பாராதபடி குறுகிய கால அவகாசத்திலேயே அந்த நோட்டுப் புத்தகத்தையே தன் கதையால் நிரப்பி விட்டாள் அவள். அந்தப் பிரதியை தனக்குத் தெரிந்த வங்காளப் பத்திரிகையாசிரியரிடம் கொடுத்து படிக்க வைத்தார் குமார். அந்தக் கதையால் மனம் நெகிழ்ந்துபோன பத்திரிகை ஆசிரியர் தன் பத்திரிகையில் அதைத் தொடர்கதையாக வெளியிட்டார். குமார் அக்கதையை இந்தியில் மொழிபெயர்த்தார்.
வெகுவிரைவில் ஹால்தாரின் பெயர் இலக்கிய உலகில் பிரபலமானது. அதைத் தொடர்ந்து அந்தத் தன்வரலாறு ஆங்கிலம், பிரெஞ்சு, ஜப்பான், கொரியா உள்ளிட்ட பதின்மூன்று உலக மொழிகளிலும் பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. அந்தப் புத்தகம் ஈட்டிக் கொடுத்த வருமானத்தை வைத்து ஹால்தார் தனக்குச் சொந்தமாக ஒரு வீட்டையே வாங்கிக் கொண்டார். இன்று உலகறிந்த எழுத்தாளராக விளங்குகிறார்.
மானதா தேவி படிப்பில் ஆர்வம் கொண்ட பெண்ணாக இருந்தாலும், சரத்சந்திரர் நாவல்களைப் படிக்கும் அளவுக்கு வாசிப்புப் பழக்கம் உள்ளவராக இருந்தாலும், அந்தப் படிப்பின் வழியாக அவர் எதையும் அடையவில்லை. அவர் மனத்தை அந்தப் படிப்பு பண்படுத்தவில்லை. அது ஓர் அலங்காரப் பொருளாகவே நின்றுவிட்டது. அதே சமயத்தில் ஹால்தாரின் வாழ்க்கையில் அவர் படித்த படிப்பு அருந்துணையாக அமைந்தது. மன உறுதியையும் தெளிவையும் ஏற்படுத்தியது. உடைந்த படகிலிருந்து ஆற்றில் விழுந்தவன் மரப்பலகையையே ஆதாரமாகப் பற்றிக் கொண்டு உயிர் பிழைப்பதுபோல, அவர் தன் படிப்பார்வத்தைப் பற்றிக் கொண்டார். அவர் நம்பிக்கை வீண் போகவில்லை. சரியான இடத்துக்கு அவரைக் கொண்டு வந்து கரைசேர்த்தது அவர் கற்ற கல்வி.
மானதா தேவி ஒரு துருவம் என்றால் பேபி ஹால்தார் இன்னொரு துருவம். இருவருடைய அனுபவங்களையும் மொழிபெயர்ப்பின் வழியாக நாம் படித்தறியும் வகையில் காலச்சுவடு அந்நூல்களை வெளியிட்டிருக்கிறது. அப்பணிக்கு தமிழ் வாசக உலகம் கடமைப்பட்டிருக்கிறது, மொழிபெயர்ப்பாளர்களான சசிகலா பாபுவையும் மறைந்த எம்.சிவசுப்பிரமணியன் அவர்களையும் நாம் நன்றியுடன் நினைத்துக் கொள்ள வேண்டும்.
- பாவண்ணன்