எழுத்தாளர் சுஜாதா புகழின் உச்சியில் இருந்த நேரம், பத்திரிகைகள் போட்டி போட்டுக் கொண்டு அவரிடம் தொடர் கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்த காலம், வானம்பாடிக் கவிஞர்களிடம் அன்பு கொண்டிருந்த அவர் அந்தச் சமயத்தில் கோவைக்கு வந்திருந்தார். கவிஞர் புவியரசு, சி.ஆர். ரவீந்திரன் ஆகியோருடன் என்னையும் அழைத்துக் கொண்டு ஒரு காரில் கோவையைச் சுற்றியுள்ள கிராமங்களினூடே பயணம் செய்யப் புறப்பட்டார் சுஜாதா. தம் தொடர்கதையில் ஒரு வித்தியாசமான கிராமத்தின் பெயரைப் பயன்படுத்துவதற்கான ஒரு தேடல் பயணம். சின்னக் குயிலி என்ற ஊரின் பெயர் அவருக்குப் பிடித்துப் போனது. அந்தப் பயணத்தில் நாங்கள் செட்டிபாளையம் என்ற ஊரைக் கடந்து போனோம்.

sakthikanalஊர்ப் பெயரைக் கேட்டதும், ‘அடடே, இது சக்திக்கனல் கவிதையில் வருகிற ஊரல்லவா?’ என்று வியந்து கூறினார் சுஜாதா.

       ‘திருமணங்கள்

       சொர்க்கத்தில்

       நிச்சயிக்கப்படுகின்றனவாம்

       அப்படியானால்

       என் கண்ணே

       நம் திருமணம் மட்டும் ஏன்

       செட்டிபாளையத்தில்

       நிச்சயிக்கப்பட்டது?’

என்ற நகைச்சுவைக் கவிதையைத்தான் சுஜாதா நினைவு கூர்ந்தார். இப்படி தேர்ந்த வாசகர்களையும் சுண்டி இழுக்கக் கூடிய கவிதைகளை வரைந்தவர் கவிஞர் சக்திக்கனல்.

வானம்பாடிகள் கோவையில் சிறகு விரிப்பதற்கு முன்பே அழகிய மரபுக் கவிதைகள் படைத்த மூத்த கவிஞராக விளங்கியவர் சக்திக்கனல். வானம்பாடி இயக்கம் அவரைப் புதுக்கவிதைகளின்பால் ஈர்த்து அணைத்துக் கொண்டது. முற்போக்குச் சிந்தனைகளை நோக்கி சக்திக்கனல் அடியெடுத்து வைப்பதற்கும் வானம்பாடியே காரணமாக அமைந்தது.

1931 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் கல்வெட்டுப்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்த சக்திக்கனலின் இயற்பெயர் க.பெ.பழனிசாமி. அமெரிக்கன் கல்லூரியிலும் பின்னர் மதுரைக் கல்லூரியிலும் பயின்று வணிகவியலில் பட்டம் பெற்றார். கூட்டுறவுத் துறையில் ஒன்பதாண்டுகள் பணியாற்றிய பின் அருட்செல்வர் மகாலிங்கத்தின் சக்தி குழும நிறுவனமான ஏ.பி.டியில் முப்பத்தைந்தாண்டுகள் தணிக்கையாளராகப் பணிபுரிந்தார். மாணவப் பருவத்திலேயே ‘பாரதி தொண்டன்’, ‘இளந்தூரன்’ என்ற புனை பெயர்களில் கலைக்கதிர், தூரனின் காலச்சக்கரம் இதழ்களில் எழுதத் தொடங்கினார். இவருடைய ஆதர்ச எழுத்தாளராக விளங்கிய பெரியசாமித் தூரனே இவருக்கு ‘சக்திக்கனல்’ என்ற புனைபெயரைச் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக இளம் பருவத்திலேயே கோவைக் கவிஞர்களை ஒன்று திரட்டி (சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில்) தமிழ் எழுத்தாளர் மன்றம் கண்டார். மார்க்சியப் பேராசான் ஜீவா நடத்திய கலை இலக்கியப் பெருமன்ற அமைப்பு மாநாட்டில் (1961) கவியரங்கில் பங்கு கொண்டார். அந்தக் காலத்தில் தாம் கண்ட தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் 48 கவிஞர்களின் தொகுப்பாக ‘எழுக கவிஞ’ என்ற நூலை வெளியிட்டார். நண்பர்கள் சிலருடன் இணைந்து ‘பணி’ என்ற மாத இதழை நடத்துவதிலும் பங்கு கொண்டார்.

‘கனகாம்பரமும் டிசம்பர் பூக்களும்’, ‘ஒரு ரோடு ரோலரின் பவனி’, ‘நீங்கள் கேட்டவை’, ‘தீரன் சின்னமலை காவியம்’ உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்கள் தொடர்ந்து வெளிவந்தன. சக்திக்கனல் பதிப்பித்த ‘அண்ணன்மார் சுவாமி கதை’ பல பதிப்புகள் கண்ட நூல்.

தணிக்கையாளர் பதவியிலிருந்து 2001 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பின் கோவையில் சில காலமும் தம் சொந்த ஊரில் சில காலமுமாக மாறி மாறி வசித்து வந்தார். 2024 ஆம் ஆண்டில் தம் 96 ஆம் வயதில் காலமானார்.

கண்டிப்பும் கட்டுப்பாடும் மிகுந்த வாழ்வு என்றாலும் எளிமையும் அன்பும் மிகுந்த பண்பாளர் சக்திக்கனல். மிகச் சிறந்த படைப்பாளியாக இருந்தும் பாரத வங்கிப் பரிசு, தமிழ் நாடு அரசு தந்த தீரன் சின்னமலை காவிய விருது போன்ற மிகச் சில விருதுகளே அவருக்குக் கிடைத்தது என்பது வருந்தத்தக்க ஒரு குறை என்றே கருதலாம். பொது வாழ்விலிருந்து சலனங்களின்றி ஒதுங்கி வாழ்ந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.

வானம்பாடி இதழின் 22 வெளியீடுகளில் பெரும்பாலானவற்றில் சக்திக்கனலின் (17 கவிதைகள்) கவிதைகளைக் காண முடியும். பிற்காலத்தில் வசன கவிதையின் வீச்சு அவருக்குக் கைவந்த கலையாகிவிட்ட போதிலும் தொடக்கத்தில் மரபின் தடங்கள் அவரிடம் இருக்கவே செய்தன. முதல் இதழில் ‘காலக் கனவுகள்’ என்று கவிதை பற்றி ஒரு கவிதை எழுதியிருந்தார்.

‘காலக் கனவுகள் முடிவிலாச் சிந்தனை

கட்டவிழ் குதிரைகள் தொட்டதும் துடிக்கும்

நீலக் கடல் அலைப் புரவியின் பாய்ச்சல்கள்

நெட்டைக் கனவுகள் நீண்ட கோடுகள்’

என்று தொடங்கும் கவிதையில் மரபின் எதிரொலிகளைக் காணலாம்.

தொடக்கத்திலிருந்தே சக்திக்கனலின் கவிதைகளில் நகைச்சுவையின் இழைகள் படர்ந்திருந்தன, அர்த்தமுள்ள கிண்டலும் கேலியும் அவருடைய தனித்துவம் மிக்க கவிதைக் கலையின் அடையாளங்களாக இருந்தன. ‘கோழி முட்டை’ என்றொரு கவிதை:

‘அதிகாரி வீட்டுக்

கோழி முட்டை ஒன்று

குடியானவன் வீட்டு

அம்மியை உடைத்து விட்டது

உடைந்த அம்மியை எடுத்து

ஓரத்தில் போட்டுவிட்டு

பலத்த போலீஸ் பாதுகாப்போடு

கோழி முட்டையை

மியூசியத்துக்கு அனுப்பி வைத்தோம்.’

ஒரு திறனாய்வுக் கட்டுரையில் அனிதா இக்கவிதையைக் குறிப்பிட்டு, சக்திக்கனலின் ஊசி முனைத் தாக்குதல் ஆன்டன் செகாவ் அதிகாரத்தைக் கேலி செய்வது போல் அமைந்திருக்கிறது என்று கூறுவது மிகமிகப் பொருத்தமானது. ‘பச்சோந்தி’ என்ற கதையில் ஒரு நாய் ஓர் ஏழையைக் கடித்து விடுகிறது, அந்த நாய்க்குத் தண்டனை தர முன் வந்த காவல் அதிகாரி அது தளபதியின் நாய் என்று தெரிகிறபோது நாயைக் கொண்டாடுகிறார். அதே சமயம் கடிபட்ட மனிதனைப் பார்த்து எச்சரிக்கிறார். அதிகாரத்தின் பச்சோந்தித் தனத்தையே சக்திக்கனலின் கவிதையும் தோலுரித்துக் காட்டுகிறது.

மாபெருந் தலைவர் பாலன் விபத்தில் மறைந்த போது கோவைக் கவியுலகம் செலுத்திய அஞ்சலி மறக்க முடியாதது. சக்திக்கனல் எழுதினார்:

‘மார்க்சிய மெனும் நந்தவனத்தில் ஓர்

மலைத்தேன் கூட்டில் வழிந்த தேன் அவன்

கிழவனின் கைத்தடி கிழித்த கோடுகளை

அரண்களாய் மாற்றிய அற்புதம் அவனது

தரையில் உன்னை வெல்ல முடியாதென்று

மரணம்

ஆகாய விபத்தை அனுப்பி வைத்ததா?’

வானம்பாடி இதழில் சக்திக்கனல் எழுதிய கவிதைகளில் மிகவும் வரவேற்பும் பாராட்டும் பெற்ற கவிதை ‘ஒரு ரோடு ரோலரின் பவனி’, புரட்சியின் எழுச்சியையே ரோடு ரோலரின் பவனியாகச் சித்தரிக்கிறார் கவிஞர்.

‘குளிர்காலப் பணிக்குக்

கும்பகர்ணனாய்

கம்பளிக்குள் மார்கழி மாதச் சைவனாய்

சோம்பிக் கிடந்த அந்த ரோடுரோலர்

புதுக் கதிரவனின் நெருப்பு விரல்

தீண்டவும் விழித்துக் கொண்டது.’

என்று தொடங்குகிறது கவிதை. அதன் பயணத்தில் மனித மனச் சிறைகளின் சாளரம் நொறுங்குகிறது; கறுப்புப் பணக்காரி கார் இடுகுழியில் சாய்கிறது; நாற்சந்தியில் பிரமுகரின் சிலை வழி மறிக்க அதை வெந்த கிழங்காக விழும்படி செய்கிறது.

‘நடைபாதை எருமையெலாம்

வழியோரம் சாய்ந்து விழ

உல்லாச மண்டபங்கள்

உதிர்ந்து விழ

இருளின் தடித்த திரை

இடம் பெயர்ந்து வெளிச்சம் வர’

அழுத்த மிக்க பாதையிலே அதன் பயணம் தொடர்கிறது. சென்ற நூற்றாண்டின் எழுபதுகளில் மாற்றத்தை அவாவிய கவிதை அது.

மெல்லிய நகையரும்ப மக்களின் வாழ்க்கை வேடிக்கைகளைத் தன் கவிதைகளால் வெளிப்படுத்துவதில் வல்லவர் சக்திக்கனல். ஒரு சமயம் கவிஞர்களுக்கிடையே காவடிச் சிந்து மெட்டில் எழுதிப் பார்த்தால் என்ன என்று கருதி ஆளுக்கொரு கவிதை எழுதினோம். ‘குறும்பா?’ என்ற தலைப்பில் சக்திக்கனல் எழுதினார்:

‘தங்கக் கம்பி, பக்கத்தூட்டுத் தம்பி-அந்தத்

தரகுக் கடைக் காரன் பேச்சை நம்பி-அட

எங்க வீட்டுப் பாத்திரத்தை இருட்டினிலே திருடி விட்டு

எண்ணுகிறான் ஜெயிலில் இப்போ கம்பி’

மேடையில் படித்த கவிதை கைதட்டல்களை அறுவடை செய்யாமல் போகுமா என்ன?

பழைய கதைகளுக்குள் புதிய கருத்துக்களை மிக நயமாக இணைக்கிற வித்தையிலும் தனக்கு ஓர் அடையாளம் தேடிக் கொண்டவர் சக்திக்கனல். ஔவைப் பாட்டி நாவல் பழம் பொறுக்கிய கதையும் நமக்குத் தெரியும். சாதியைப் பற்றி அவர் சொல்லிய கருத்தும் நமக்குத் தெரியும். இந்த இரண்டு செய்திகளையும் இணைத்து நம் சமுதாய அவலம் ஒன்றையும் உணர வைக்கிறார் ‘பாட்டியுடன் ஒரு பேட்டி’ என்ற கவிதையில்.

ஔவையார் கவிஞரின் ஊர்ச் சாவடியில் நாவல் மரத்தடியில் சுட்டபழம் பொறுக்கிக் கொண்டிருந்தார். அவரிடம் கவிஞர் கேட்கிறார்.

‘பாட்டி, பாட்டி, சாதிகள் எத்தனை?

பாட்டி சொன்னாள்

சாதி இரண்டொழிய வேறில்லை

சாற்றுங்கால்

மீதி மிச்சம் இல்லாமல்

ஊர் நிலத்தைத் தான் சுருட்டிக்

கட்டினார் மேல் சாதி

பறி கொடுத்தார் கீழ் சாதி

பட்டாவில் உள்ளபடி - நிலப்

பட்டாவில் உள்ளபடி’

சமகாலச் சமூக அழுக்குகளைக் கவிதை நீரில் அலசிப் பிழிந்து காயப் போடுகிற கவிதை சக்திக்கனல் கவிதை.

வைரக்கல், கோமேதகக்கல், புஷ்பராகக்கல் விற்பனை செய்பவரின் உண்மைத் தொழில் பதுக்கல் என்று ஒரு கவிதையில் நகை முத்திரை பதிப்பார். இப்படி சிரிக்கவும் சிந்திக்கவும் கவிதை தீட்டிய சக்திக்கனலை தமிழ்க்கவியுலகும் முற்போக்கு உலகும் மறந்துவிட முடியாது.

சக்திக்கனலில் நிகரற்ற மற்றொரு பங்களிப்பு அண்ணன்மார் சுவாமி கதைப் பதிப்பு. பொன்னர் சங்கர் கதை என்றும் கள்ளழகர் அம்மானை என்றும் குன்றுடையான் கதை என்றும் வாய்மொழிப் பாடலாக உடுக்கடித்துப் பாடப்பட்டு வந்த கதை இது. பிருண்டா இஎப்பெக் என்ற கனடா நாட்டு ஆய்வாளர் காங்கயம் அருகிலுள்ள ஓலப்பாளையத்துக்கு வந்து தங்கி உடுக்கடிப் பாடலைப் பதிவு செய்தார். ‘The Peasant Society in Kongu Country’, The Three Twins – the telling of a South Indian Epic என்று ஆங்கிலத்திலும் இந்தக் கதையை உலகறியச் செய்தார்.

பாராட்டுக்குரிய இந்தப் பணியை அவர் செய்திருந்தாலும் மொழியையும் பண்பாட்டு அசைவுகளையும் அறியாததால் சில பிழைகள் அவர் ஆய்வில் நேர்ந்துள்ளன. அறியாமை காரணமாக சக்திக்கனல் பதிப்பையும் குறை கூறியுள்ளார்.

நாட்டார் வழக்காற்றுக் காப்பியம் என்று கொண்டாடத்தக்க அண்ணன்மார் சுவாமி கதையைப் பிச்சன் என்ற ஒரு புலவர் 17 ஆம் நூற்றாண்டில் காவியமாகப் பாடியிருக்கிறார். அந்தக் காப்பியத்தை திருச்சி மாவட்டம் மணப்பாறை கடவூர் எஸ்டேட் தரகம்பட்டியில் இருந்த ராஜலிங்க பண்டிதரிடமிருந்து பெற்று 1971 இல் சக்திக்கனல் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்டுள்ளார். இது தமிழ் இலக்கியத்துக்குச் செய்த மகத்தான திருப்பணி என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

பொன்னர், சங்கர், அருக்காணி நல்ல தங்கம் என்ற மூவரும் இன்றும் கொங்கு நாட்டிலும் மணப்பாறைப் பகுதியிலும் தெய்வங்களாக வழிபடப்படுகிறார்கள். இன்றும் உடுக்கடிப் பாடல் கலைஞர்கள் கிராமப் புறங்களில் இந்தக் கதையைப் பல நாட்கள் தொடர்ந்து பாடி வருகின்றனர். குறிப்பாக ‘படுகளம்’ என்ற பகுதியைப் பாடும்போது மக்கள் பரவசமும் மயக்கமும் அடைவதைக் காண முடிகிறது.

இந்தக் காவியத்தில் கவிதை கொஞ்சி விளையாடுகிறது. அண்ணன்மாரைத் தேடி வரும் தங்கை குரலெழுப்பி வீரமலைக் காட்டுக்குள் வருகிற போது செழுந்தமிழால் கவிதை மயக்குகிற அழகே அழகு!

‘உத்தமியாள் குரல் கேட்டுப் பறவை இரை எடுக்காது

ஆடுகளும் மேயாதாம் அரவம் இரை தீண்டாதாம்

மாடு புல்லு மேயாதாம் மரங்கள் இலை ஆடாதாம்

பட்சி இரை எடுக்காது பசுங்கன்று ஊட்டாது

பட்டமரம் அத்தனையும் பாலாய்ப் பொழித்திடுமாம்

உளுத்தமரம் அத்தனையும் ஓங்கித் தழைத்திடுமாம்’

நெஞ்சம் நெகிழப் படித்து உருகும்படியான இலக்கிய வனப்புகளின் களஞ்சியம் சக்திக்கனல் பதிப்பித்துள்ள அண்ணன்மார் சுவாமி கதை. பலப்பல பதிப்புகள் கண்ட பசுந்தமிழ்க் காப்பியம் இது.

இதனை அழியாமல் காத்துத் தந்த கவிஞர் சக்திக்கனலைக் காலம் கொண்டாடிக் கொண்டே இருக்கும்.

‘பறந்து போன பாட்டுக் குயில்’ என்று ஒரு கவிதையை யாருக்காகவோ எழுதியிருக்கிறார் சக்திக்கனல். நேற்றைய கவிதையைத் தம் படைப்புகளால் அணி செய்து, தமிழ் உள்ளவரை வாழும் அண்ணன்மார் சுவாமி கதையை அருமையாகப் பதிப்பித்து அருந்தொண்டு புரிந்த கவிஞரை அவருடைய வரிகளாலேயே நினைந்து உருகுவோம்.

‘பாட்டு வனத்திலே கீதம் இசைத்திட்ட

பச்சைக் கிளி எங்கு போயினதோ? - அது

பூட்டைத் திறந்தெங்கள் நாட்டைத் துறந்தொரு

பொன்னுலகம் தேடிப் போயினது’

(நன்றி: நூல்கள் தந்து உதவிய கவிஞரின் திருமகன் ப.சிவக்குமார் அவர்களுக்கு)

- பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம், படைப்புக்கும் மொழிபெயர்ப்புக்குமாக இரண்டு சாகித்ய அகாடமி விருதுபெற்ற படைப்பாளுமை.